Saturday, April 28, 2007

தராக்கி- சில நினைவுகள் - நடராஜா முரளிதரன் (கனடா)

சனி 28-04-2007

மட்டக்களப்பு வாவியின் மேலோடி நிற்கும் புளியந்தீவுப் பாலத்தில் உறைந்தவாறு கிழக்கின் தென்றலை சுகித்து சுவாசித்த, இன்பவசப்பட்ட அந்த மண்ணின் மைந்தன் அந்த மண்ணின் வளத்துக்காகவே புதைக்கப்டட்டான் போலும்.

உலகத்தின் திக்குகள் எல்லாம் அவன் பாதங்கள் பதிந்திருந்தாலும் அவன் தன் ஆழ்மனதின் அமைதி தேடி அந்த மட்டக்களப்பு மண்ணுக்கே ஓடிவந்து கொண்டிருந்தான்.

அந்த மண்ணிலே தமிழ் மக்களைத், தமிழ் மக்களே காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கணங்களில் செங்குருதி சிந்தாத ஒருமைப்பாடு காண விரைவுகொண்டு விழைந்தவன் அவன்.

அவன்தான் தராக்கி என்று எம்மால் அழைக்கப்பட்ட தர்மரட்னம் சிவராம். தராக்கியின் உயிர் பறிக்கப்பட்டு ஓராண்டு கழிந்துவிட்டது. பட்டப்படிப்பைத் துறந்து மானுடத்துக்காகப் போரிடப் புறப்படுதல் என்ற சேனையில் அணிவகுத்தவன், துப்பாக்கிக்குழாயிலிருந்து பிறக்கும் அதிகாரத்தை பேனா முனைகளால் கேள்விக்குரியதாக்கும் மறுபிறப்பை அடைந்தவன் ஆனான்.

அதனால் அவன் ஈடுபாடு காட்டிய இதழியல் ஊடான கருத்துச்செறிவுக் குவிப்பு ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நியாயத் தேடற்தளத்தில் சர்வதேசக் கவனிப்பைப் பெற்ற ஒன்றாக மாறியது.
அதற்கு அவனது இருமொழிப் புலமை மேலும் வீறூட்டியது.

1997ம் ஆண்டு சுவிஸ் நாட்டின் ஏரிகள் சூழ்ந்த அழகிய நகரங்களில் ஒன்றான “லுசேர்ண்” நகரில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி பத்து வருடங்கள் முடிவடைந்ததையொட்டி ஓர் கருத்துக் குழும மாநாட்டை “இன்ரநசனல் அலேர்ட்” என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

அச் சமயம் சந்திரிகாவின் அக்கா சுனீத்திராவின் முன்னாள் கணவர் குமார் ரூபசிங்கா “இன்ரநாசனல் அலேர்ட்” அமைப்பின் தலைமைத்துவப் பதவியை வகித்திருந்தார்.

ஏறத்தாழ முப்பது பேர் வரையில் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான புலமையாளர்கள், வல்லுனர்கள், ஒப்பந்த ஈடுபாட்டாளர்கள் என்ற வகையில் அம் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

“இந்து” பத்திரிகையின் ராம், இந்தியப் படைத்தளபதி கல்கத், ரோகான் குணரட்ணா, முன்னாள் வடகிழக்கு மாகாணசபை அமைச்சர் டயான் ஜயதிலகா, பிராட்மன்வீரக்கோன், ஜே.என்.டிக்சிற், அருட்தந்தை சந்திரகாந்தன் ஆகியோரெல்லாம் அந்த மாநாட்டிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். தராக்கி அவர்களும் இந்த மாநாட்டிலே உரையாற்றுவதற்காக சுவிஸ் வந்திருந்தார். மாநாடு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

மாநாடு முடிவுற்ற பின்னர் தராக்கி சூரிச்சில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்த வேளையில் நான் பணிபுரிந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் வருவார்.

அந்த வேளையிலேதான் எனக்கு அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அச் சந்தர்ப்பத்திலே ஒர் நாள் அவரைக் கேட்டேன்.

“நீங்கள் ஐரோப்பிய நாடொன்றிலே நிரந்தரமாகத் தங்கியிருந்து ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பணிபுரியலாமே”?
அவரது பதில் நீரை விட்டுப் பிரிந்து மீன் உயிர் வாழுதல் சாத்தியமா? என்ற தோரணையில் அமைந்தது.

“எங்களைப் போலை ஆக்களுக்கு அங்கைதானே வேலை கிடக்கு” என்று சிரித்தபடியே பதிலளித்தார். தொடர்ந்து மட்டக்களப்பில் காத்திரமான தமிழ் பத்திரிகையொன்றின் தேவை குறித்த அக்கறையோடு தான் இருப்பதாகவும் அது விடயமாக மேற்கொண்டு அலுவல்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறியது இன்றும் என் நினைவுகளில் பசுமையாக உள்ளது. வெளிநாட்டு வாழ்க்கையில் அறவே விருப்புக் கொள்ளாத துறவுத்தனம் அவரை எனக்கு ஒரு சித்தராக உணர்த்தியது.
“ஒரு வகையில் சிவராமின் மரணம் மூலம்தான், அவனை மீள் கண்டுபிடிப்புச் செய்தோம்,” என்று கூறுகிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

தராக்கி இல்லாத வெற்றிடத்தில், சர்வதேச தளத்தில் தமிழர் அல்லாதவர்களுக்கு தமிழ் பேசும் மக்களின் நியாயத் தேடல்களை எவ்வாறு புரியவைப்பது அல்லது இன்றைய பிரகடனப்படுத்தப்படாத போர் உத்திகளின் மூல உபாயங்களை போரியல் பின்புலத்தில் எப்படி ஆய்வுக்குள்ளாக்குவது என்ற சிக்கல்கள் எழுந்து நிற்கிறது.

அவை தொடர்பாக தராக்கி என்ற தனி மனிதன் சாதித்தவைகளை அவனது அரசியல் எதிரிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களே சாட்சியங்களாக அமைந்து நிரூபித்து விடுகிறது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரமான அவர் எழுதிய கட்டுரையொன்றில்(கட்டுரையின் ஆங்கில வடிவமே என் கைக்கு எட்டியது) நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹைம் குறித்த விமர்சனம் ஒன்றின் சாரத்தை இங்கு சுட்டுதல் பொருத்தம் என்று எண்ணுகின்றேன்.

நோர்வே அரசின் சமாதான ஏற்பாட்டாளர் சொல்ஹைம் அவர்கள் இலங்கைக்கு வரும் போதெல்லாம் தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டத்தில் அதிசயம் நிகழ்வதற்கான எதிர்பார்ப்புடன் கூடிய பரபரப்பு எழுவது வழக்கம். விளைவு ஊடகங்கள் வழியாக அதே புனைவு சிரு~டிக்கப்பட்டு மக்கள் மனங்களையும் விளிம்பு நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஆனால், சொல்ஹைம் தனது நாடு திரும்பியவுடன் எல்லா எதிர்பார்ப்புகளும் வெளுத்து மக்கள் வழமையான வாழ்வியல் நீரோட்டத்திலே கலந்து விடுவார்கள்.

சோல்ஹைம் அவர்களும் தனது வருகையின் பொழுது எப்போதும் போல நன்மைக்கான மாறுதல்கள் விரைவில் நிகழ்ந்து விடும் என்ற மந்திர உச்சாடனத்தை உரைப்பார்.

அவ்வாறான வகையில் மிக அண்மையில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய சொல்ஹைம் அவர்கள் இன்னும் சில வாரங்களில் சுனாமி நிவாரணப் பணிகளுக்கான இரு தரப்பும் பிணைந்த இணைக்கட்டமைப்பு செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அவை எவையுமே இன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை. யாருக்காவது அது குறித்த சந்தேகம் இருப்பின் ஜே.வி;.பியினர் “அப்படியொரு கட்டமைப்பு நிறுவப்படும் பட்சத்தில் நாம் அரசிலிருந்து வெளியேறி விடுவோம்” என்று அமெரிக்கப் பிரதிநிதியான கிறிஸ்டினா றொக்கா அம்மையாருக்கு அழுத்தம் திருத்தமாகக் கூறியதில் இருந்தே உண்மை நிலையினை புரிந்து கொள்ளலாம். சமாதானத் தூதுவர் என்பவர் நம்பிக்கை ஊட்டுபவராகவே காட்சியளிப்பார். ஆனால் அவரால் உருவகப்படுத்தப்படும் அக் காட்சிப் பிம்பத்தின் பொறிக்குள் விழுவதா, இல்லையா என்ற முடிவை எடுப்பது எம்மில்தான் தங்கியுள்ளது.

மேலே எனது உரைநடை வடிவத்துக்கு உட்படுத்தப்பட்ட அவரது கருத்துச் சாரம் யதார்த்தபூர்வமான மெய்மையாக வரலாற்றுத்தடத்திலிருந்து வெளிக் கிழம்புவதை உய்த்துணர முடியும்.

சில நாட்களின் பின் இறுதியாக ஜெனிவா நகரில் மனித உரிமைகள் மன்றின் முன்பாக சுவிஸ் வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலத்தின் முடிவில் தராக்கி அவர்கள் என்னோடு உரையாடியிருந்தார்.

அத் தருணத்தில், தமிழர் தரப்பில் விடுதலை என்ற கோசத்தோடு பல்வேறு அமைப்புக்கள் 80களின் முற் கூறுகளில் கிளர்ந்த போதும் அவை வீழ்ச்சிக்குள்ளான வரலாறு பற்றி இருவரும் விவாதித்துக் கொண்டோம். விவாதத்தின் இடையே “தமிழீழக் கோரிக்கையை கைவிட்டதாலேயே அவ் அமைப்புக்கள் அழிந்தன” என்றும் தமிழீழக் கோரிக்கையை கைவிடும் எந்த அமைப்பும் வரலாற்றின் இயங்கு தளத்திலிருந்து மறைந்து விடும் அல்லது அந்நியப்படுத்தப்படும் என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் தராக்கி என்னிடம் தெரிவித்திருந்தார். அக் கருத்தினை அன்று அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது தராக்கி அவர்களின் பெயரைக் குறிப்பிடாது ஓர் பத்திரிகையாளரின் கருத்தாக சொல்லியிருந்தேன்.

இன்று உலக அழுத்தங்கள் கூர்மைப்படுத்தப்பட்டு பல்வேறு முனைகளில் இருந்து புறப்பட்டு எம்மையே தாக்குகிற இத் தருணங்களில் தேசிய இனப்பிரச்சினையின் வடிகாலாக சம~டியின் மாதிரி வடிவங்களை ஏற்றுக் கொள்ளலாம்தானே(எதிரி எதையுமே வழங்கத் தயார் இல்லாத நிலையில்) என்ற உபதேசங்கள் செவிப்பறைகளில் முட்டி மோதுகின்ற இவ் வேளைகளில் தராக்கி மேற் கூறிய கருத்து சாத்தியமானதா என்பதை எதிர்கால வரலாற்றுப் பாடங்களில் இருந்து மட்டுமே நாம் கற்றுக் கொள்ளமுடியும். கற்றுத் தருவதற்கும் இப்போது தராக்கி எம்மிடம் இல்லை.

தராக்கி அவர்களது வாழ்வுச் சரிதத்தை அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் விற்றேக்கர் என்பவர் எழுதிக் கொண்டிருக்கிறார். அச் சரிதத்துக்கு அவரால் இடப்பட்ட பெயர் “Learning Politics from Sivaram” என்பதாகும்.

இப் பேராசிரியர் 1982 களில் மட்டக்களப்பிலே தங்கியிருந்து மட்டக்களப்பு தொடர்பான பண்பாடு, மானுடவியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளைகளிலேதான் முதன் முதலாக சிவராமைச் சந்தித்து நெருங்கிய நண்பராகிக் கொண்டார். இருவருமே தத்துவவியல் துறை சார்ந்த பொதுவான கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக விளங்கியதனால் நட்பு மேலும் பலப்பட்டது.
பேராசிரியர் மார்க் விற்றேக்கர் அவர்கள் சிவராமின் பாதுகாப்புக் குறித்துக் கவலைப்பட ஆரம்பித்த வேளைகளிலேதான் சிவராமின் சிந்தனைகளையும், முயற்ச்சிகளையும் பதிவு செய்து கொள்வது தனது கடமைகளில் ஒன்று என எண்ணுகின்றார். அதற்கான வேலைத் திட்டங்களை சிவராமின் மன ஒப்புதலுடனும், ஒத்துழைப்புடனும் 1997களிலேயே ஆரம்பித்தார்.

சிவராமின் உயிருக்குக் குறி வைக்கப்படும் அபாயம் நெருங்கி வந்த வேளையில் எல்லாம் அவனுக்கு வேண்டியவர்கள் அது குறித்த அச்சம் கொண்டவர்களாக அவனை நாட்டை விட்டு இடம் பெயர்க்க முயற்ச்சித்த போதெல்லாம் அதற்கு அடங்காதவனாக, அச்சப்படாதவனாக வெகு சாவகாசமாக அவன் உலா வந்தான். அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் தூதுவனாக உலகத் தலைநகர்கள் எங்கணும் இராஜதந்திரிகளை, புத்திஜீவிகளை அறிவியல் தளத்தில், போரியல் பின்புலத்தில் எதிர்கொண்ட சிவராம் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் சர்வதேச அரசியல் தாக்கங்களை கணிப்பவனாக இருந்தமையினால் அவனது இழப்பு ஈடு செய்ய முடியாத சமன்பாடாகிறது.

Friday, April 27, 2007

பல்கலைக்கழக மாணவர்களை இராணுவப் புலனாய்வாளர்களினால் விசாரணை.

வெள்ளி 27-04-2007

வெளி மாவட்டங்களில் இருந்த யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்திற்கு கப்பலில் வரும் மாணவர்களை தெல்லிப்பளையில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரனை மேற் கொண்டு வருகின்றனர். இராணுவப் புலனாய்வாளர்களின் விசாரணையின் பின்னரே இவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர் கப்பலில் வரும் மாணவ, மாணவிகள் காங்கேசன்துறையில் இருந்து கப்பலில் இருந்து இறங்கி தெல்லிப்பளைக்கு கொண்டுவரப்பட்டதும், அங்குவைத்து யாழ்ப்பாணத்திற்கு வந்தமைக்கான காரணம் கேட்டுப் பதியப்படுகின்றது.

இதன்போது பல்கலைக்கழக கல்விக்காக வந்ததாக தெரிவித்ததும் குறிப்பிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கிருந்து மீண்டும் வாகனத்தில் ஏற்றப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழுமையாக விசாரனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் பற்றிய முழு விபரமும் பெறப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இலங்கைக்கு ஆயுதம் கடத்தல்: பாதுகாப்பு சட்டத்தில் கைதான 3 பேர் விடுதலை

வெள்ளி 27-04-2007

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக கடந்த ஜனவரி மாதம் தினகரன், விஜயகுமார், மொய்தீன்யாகு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் சிவகங்கை கலெக்டர் உத்தர வின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பு கூறியது.

கிï பிராஞ்ச் போலீசாரின் சிபாரிசை அப்படியே ஏற்று கலெக்டர் செயல்பட்டு இருக்கிறார். தேசிய பாது காப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை 7 நாட்களுக்குள் மத்திய அரசுக்கு மாநில அரசு தெரிவிக்க வில்லை என்றும் கூறி 3 பேரையும் ஐகோர்ட்டு விடுதலை செய்தது.

குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி!

வெள்ளி 27-04-2007

குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை, தனது அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த பெண்ணையும், அவரது அக்காவையும் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவாராம்.

இதனால் மனைவி ஆதிலட்சுமி அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சீனிவாசன், கிண்டியில் வசித்து வந்தார். அதன் பின்னர் மயிலாப்பூருக்கு மாறினார்.

அங்கு போன பின்னர் தனது அக்கா உண்ணாமலையையும் துணைக்கு வைத்துக் கொண்டார் ஆதிலட்சுமி. சில நாட்கள் அமைதியாக இருந்து வந்த சீனிவாசன் மறுபடியும் குடிக்க ஆரம்பித்தார்.

இதனால் கடுப்பாகிப் போன ஆதிலட்சுமி, இதற்கு மேலும் சீனிவாசனிடம் அடி உதை பட்டு அவஸ்தைப்பட விரும்பவில்லை. இதையடுத்து தனது அக்காவுடன் ஆலோசித்தார். அப்போது சீனிவாசனைக் கொன்று விடுவது என இருவரும் முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார் சீனிவாசன். வழக்கம் போல ஆதிலட்சுமியை அடித்து விட்டு தூங்கி விட்டார். நள்ளிரவில் கிரைண்டரில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து அதை வைத்து சீனிவாசனை சரமாரியாக அடித்தனர். இதில் தலைநசுங்கி இறந்தார்.

பின்னர் உடலை சாக்குப் பையில் வைத்து கட்டினர். காலையில், குடிபோதையில் விஷத்தை சாப்பிட்டு சீனிவாசன் இறந்து விட்டதாக கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

ஆனால் சீனிவாசனின் தாயாருக்குத் தகவல் தெரிந்து அவர் ஓடி வந்தார். மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து விசாரித்தபோது நடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஆதிலட்சுமி, உண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அக்காவுடன் சேர்ந்து கிரைண்டர் கல்லால் கணவரைக் கொலை செய்த ஆதிலட்சுமியால் அப்பகுதி பரபரப்பாகிப் போனது.

எமது வான்படையுடன் ஒரு முழுமையான நாட்டுக்குரிய தகமைகளைக் கொண்டுவிட்டோம் : விடுதலைப் புலிகள்

வெள்ளி 27-04-2007

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் அரசியல், இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் புதிய எதிர்வுகூறல்களை ஏற்படுத்தியுள்ளது. எங்களிடம் நிலப்பரப்பு, நிர்வாகம், சட்டம், நீதித்துறை, காவல்துறை, இராணுவம், கடற்படை என்பன இருந்தன. தற்போது வான்படையும் உள்ளது. நாங்கள் தற்போது ஒரு முழுமையான நாட்டுக்குரிய தகமைகளைக் கொண்டுள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ வான்படையானது தமது தேசத்தின் முழுமையான கட்டமைப்பிற்கும் அதன் மீதான அனைத்துலகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவும்.

எமது கடற்புலிகள் கண்ட வளர்ச்சியைப் போல எமது வான்படையும் வளர்ச்சி அடையும். கடற்புலிகள் ஒரு சில படகுகளுடன் மிகச் சிறு குழுவாகவே தோற்றம் பெற்றிருந்தனர். ஆனால் இன்று அவர்கள் கடலின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். எனவே எமது வான்படையும் வளர்ச்சி அடையும் என்றார் அவர்.

விடுதலைப் புலிகள், தமது வான்படை வானூர்திகள் மூலம் சிறிலங்காவின் தென்பகுதியிலும், வடபோர்முனையிலும் மிக உயாந்த பாதுகாப்புக்களை கொண்ட தளங்களின் மீது ஒரு மாதத்தில் இரு தடவைகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வெளியாகும் 'ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' என்ற ஆங்கில ஊடகத்திற்கு தொலைபேசியூடாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனை தெரிவித்துள்ளார்.

மன்னாரில் மக்கள் குடியிருப்புகள் மீது வான்குண்டு வீச்சு- எறிகணைத் தாக்குதல்கள்.

வெள்ளி 27-04-2007

மன்னார் பரப்புக்கடந்தான் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள், இன்று தாக்குதலை நடத்தியுள்ளன.
இரண்டு கிபீர் வானூர்திகள், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் மூன்று முறை மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் மக்களின் பயன்தரு மரங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதமடைந்துள்ளன. மன்னார் முள்ளிக்குளம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தொடர் எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டன.

சிறிலங்கா இராணுவத்தினரின் பின்தளங்களில் இருந்து இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணிவரை மக்கள் குடியிருப்புக்கள் மீது பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.

சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தவும்: அனைத்துலக நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்

வெள்ளி 27-04-2007

சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்காவைப் போல் 20 நாடுகளும் சிறார்களை படையில் பயன்படுத்துவதால் அந்த நாடுகளுக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்தும் படி நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட பல முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்காவை கேட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டுக்கான சிறார் படைச்சேர்ப்பு தடை விதிகளின் படி இராணுவ உதவிகளின் மட்டுப்படுத்தல் அவசியம் என அமெரிக்க செனட் உறுப்பினர்களான றிச்சார்ட் டேர்பன், சாம் பிறவுன்பக் ஆகியோர் கூறியுள்ளனர்.

அதற்கு புஸ்சின் நிர்வாகம் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தனர். சில நாடுகள் தமது சொந்தப் படையினருக்காக சிறார்களை படையில் சேர்க்கின்றனர். வேறு சில நாடுகள் சிறார்களை படையில் கொண்டுள்ள ஆயுதக்குழுக்களுடன் நேரடியான தொடர்புகளை கொண்டுள்ளன.

இப்படியான நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, புரூன்டி, சாட், கொலம்பியா, கோட் இவோறி, கொங்கோ, சூடான், உகண்டா ஆகியன அடங்கும்.

இந்த நாடுகளுக்கு இராணுவ பயிற்சிகளுக்காக சிறிய தொகையும், ஆயுதக் கொள்வனவுக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டொலர்களும் அமெரிக்க அரசினால் இராணுவ உதவிகளாக வழங்கப்படுகின்றன.

அமெரிக்க மக்களால் வரியாக செலுத்தப்படும் இந்த பணம் சிறார்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படக் கூடாது. மேலும் அமெரிக்காவின் ஆயுதங்களும் இந்த சிறார்களின் கைகளில் போய்ச் சேரக்கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்துலக மன்னிப்புச் சபையும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறார் படைச் சேர்ப்பில் சிறிலங்கா, அங்கோலா, புரூண்டி, கொலம்பியா, கொங்கோ, ருவாண்டா, சிரோலியோன், உகண்டா போன்ற நாடுகள் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறார் படை மற்றும் ஆயுதப் பரிமாற்றத்திற்கான திட்டமிடல் முகாமையாளர் கொல்பி குடமான் அறிக்கை:

சிறார் படைச்சேர்ப்பை நிறுத்துவதற்கு அழுத்தங்கள் அவசியமானது. எனவே சிறிலங்கா உகண்டா, கொங்கோ போன்ற நாடுகளில் உள்ள ஆயுதப்படைகளில் உள்ள சிறார்களை மீட்பதற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தங்களை தமது ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சிறிலங்காவை பாதிக்கும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் அது சிறார் படைகளை கொண்டுள்ள ஆயுதக்குழுக்களுடன் நேரடித் தொடர்புள்ள நாடுகளின் பட்டியலில் உள்ளதது. அமெரிக்காவின் இராணுவ உதவிகளை பெற்று வருகிறது.

சிறார் படை பாதுகாப்பு திட்டமானது ஐந்து வகையான அமெரிக்க இராணுவ உதவிகளை மட்டுப்படுத்துகின்றது.

- அனைத்துலக படைத்துறை கற்கைநெறி மற்றும் பயிற்சிகள்

- வெளிநாட்டு படைத்துறை நிதி உதவி

- வெளிநாட்டு படைத்துறை விற்பனைகள்

- நேரடியான வர்த்தக விற்பனைகள்

- மேலதிக பாதுகாப்பு உதவிகள்

போன்ற உதவிகள் சிறார் படைச் சேர்ப்பை குறிப்பிட்ட நாடுகள் நிறுத்தும் வரை மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, April 21, 2007

அவர்கள் சிங்கள கடற்படையா? இலங்கை தமிழரா? - மரியா படகின் மர்மம் விலகிய கதை

சனி 21-04-2007

இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் நடுக்கடலில் பிடிக்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள்தான். அவர்கள்தான் குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றவர்கள்!’ என்று பகீர் செய்தியைக் கசிய விட்ட போலீஸ், மறுநாளே ‘அவர்கள் சிங்களர்கள் இல்லை. இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்தான்!’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது. இதனால் எது உண்மை என்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள், மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்களர்களும் திடீர் திடீரென்று காக்காய் குருவிகளைச் சுடுவதைப்போல சுட்டுக்கொல்வது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த அந்தப் பயங்கரத் தாக்குதல், கடந்த மாதம் 30ம் தேதியன்று உக்கிரத்தை எட்டியது. குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேர் அன்று சுட்டுக்கொல்லப்பட்டதுதான் அதற்குக் காரணம். மொத்தமாக ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களைக் கொதித்தெழச் செய்துவிட்டது.

மீனவர்களின் உயிரைக் காப்பாற்றத் தவறும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, மீனவர்கள் போராடத் தொடங்கிவிட்டார்கள். நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டு, குமரி மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் மீனவர்கள் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மீனவர்களின் இந்தப் போராட்டத்திற்கு அ.தி.மு.க., தே.மு.தி.க. உட்பட எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்தன.

மீனவர்களின் இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நீடித்ததால், மீனவர்களைச் சமாதானப்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த அரசு, அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதோடு ‘தமிழக மீனவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்றும் உறுதி அளித்தது. கடலோர பாதுகாப்புக் காவல் படையினரை மத்திய அரசு முடுக்கிவிட்டது. தூத்துக்குடியில் முடங்கிக் கிடந்த ‘நாய்கிதேவி’ என்ற கடலோர ரோந்துக் கப்பல் கடலுக்குள் அவசர அவசரமாக இறக்கப்பட்டு ரோந்து சுற்றத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் கடந்த 11_ம் தேதி, இந்திய எல்லைப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த பன்னிரண்டு மீனவர்களையும், மூன்று படகுகளையும் கடலோர காவல்படையினர் பிடித்து தூத்துக்குடிக்குக் கொண்டு வந்தனர். அதில் ஒரு படகில் ‘மரியா’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.

‘மரியா என்று எழுதப்பட்டிருந்த படகில் வந்தவர்கள்தான் எங்களைச் சுட்டார்கள்’ என்று குமரி மாவட்ட மீனவர்கள் முன்பு சொல்லியிருந்ததால், மீனவர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்தது. அதைத் தொடர்ந்து குமரி மாவட்ட மீனவர்களைச் சுட்ட இலங்கையைச் சேர்ந்த மரியா படகிலிருந்த சிங்களர்கள் கடலோர காவல் படையிடம் மாட்டிக் கொண்டார்கள்’ என்ற செய்தி வேகமாகப் பரவியது. போலீஸே அந்தச் செய்தியைக் கசியவிட்டது என்கிறார்கள். அதற்குக் காரணம், தமிழக மீனவர்களின் மனம் குளிரச் செய்யும் நிலையில் அரசு இருந்ததுதான் என்றும் கூறப்பட்டது.

போலீஸ் நினைத்தது போலவே, இங்குள்ள மீனவர்களும் சிங்களர்கள் பிடிபட்டதால் மனம் குளிர்ந்துதான் போனார்கள். அரசுக்கு நன்றி தெரிவித்து பத்திரிகைக்கு விளம்பரம் கொடுத்த தூத்துக்குடி மாவட்ட மீனவ அமைப்புகள், விளம்பரத்தில் ‘குமரி மாவட்ட மீனவர்களைச் சுட்டுக்கொன்ற சிங்களர்களைப் பிடித்த கடலோர காவல்படையினருக்கு நன்றி’ என்ற வாசகத்தையும் சேர்த்து சந்தோஷப்பட்டார்கள்.

ஆனால் ‘மரியா’ படகின் மர்மத்தை மறுநாள் உப்புச்சப்பில்லாமல் செய்துவிட்டார், தூத்துக்குடி எஸ்.பி.யான ஜான் நிக்கல்சன். ‘‘குமரி மாவட்ட மீனவர்களை நடுக்கடலில் சுட்டது யார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. மரியா என்ற படகில் வந்தவர்கள் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்களா? அல்லது இலங்கையைச் சேர்ந்த சிங்களர்களா? என்பது தெரியவில்லை. பொதுவாக மரியா, மாதா என்ற பெயர்களில் மீனவர்கள் படகு வைத்திருப்பது தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் அதிகம். எனவே யாரோ ‘மரியா’ என்ற படகை தமிழ் மீனவர்களைச் சுட தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், இப்போது பிடிபட்ட ‘மரியா’ படகு இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமானதுதான். இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஆறு பேர் ‘மரியா’ என்ற படகில் மீன் பிடிக்க வந்திருக்கிறார்கள். அப்போது அந்தப் படகு ரிப்பேர் ஆகியிருக்கிறது. அதனால் அவர்கள் 21 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த வழியாக வந்த குமரி மாவட்ட மீனவர்களிடம் அவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி கேட்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழில் பேசியதால், அவர்களைத் தங்களது படகுகளில் ஏற்றியிருக்கிறார்கள் குமரி மீனவர்கள். அப்போதுதான் அந்த மூன்று படகுகளையும் (குமரி மீனவர்கள் கொண்டு சென்றது இரண்டு படகுகள்) கடலோர பாதுகாப்புப் படையினர் பிடித்து வந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடப்படுகிறார்கள்!’’ என்று ‘மரியா’ படகு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் அவர்.

இது குறித்து நம்மிடம் கருத்துத் தெரிவித்த மீனவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ‘‘தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்வது இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள்தான். இதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இந்திய அரசாங்கம் இதை மறைக்கப் பார்க்கிறது. இப்போது பிடிபட்டிருக்கும் மரியா படகில் கூட ஏகப்பட்ட சந்தேகம் இருக்கிறது. முதலில் அந்தப் படகில் இருந்து ஆயுதங்கள் பிடிபட்டதாகச் சொன்னார்கள். இப்போது அதில் ஒன்றும் இல்லை என்கிறார்கள். கடைசியில் அது இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

நடுக்கடலில் 21 நாட்கள் அவர்கள் தத்தளித்ததாகக் கூறுகிறார்கள். 21 நாட்கள் காணாமல் போனவர்களை இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஏன் தேடவில்லை என்று தெரியவில்லை. மற்றும் அதில் இருந்த ஆயுதங்கள் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. கடலோர பாதுகாப்புப் படையினர் பிடித்தவுடன், அவர்கள் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் என்றார்கள். ஆனால், அவர்கள் போலீஸ் வசம் வந்ததும், ஒரே நாள் இரவில் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் எங்களுக்கு இதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன.

இதை நாங்கள் விட்டுவிடப்போவதில்லை. சம்பந்தப்பட்ட குமரி மாவட்ட (கடலோர காவல் படையிடம் சிக்கிய மீனவர்கள்) மீனவர்களிடம் கடலில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கேட்கப் போகிறோம். போலீஸ் சொல்வதுதான் உண்மையா? அல்லது போலீஸ் அவர்களை அப்படி சொல்லச் சொன்னதா என்று கேட்போம். அதில் ஏதாவது முன்னுக்குப் பின் முரணாகச் செய்திகள் வந்தால், அரசுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்!’’ என்றார்கள் அவர்கள்.

Kumudam

நாசா விண்வெளி மையத்தில் பொறியாளர் சுட்டுக் கொலை கொலையாளியும் தற்கொலை.

சனி 21-04-2007

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த காண்ட்ராக்ட் ஊழியர் ஒரு பொறியாளரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள பகுதியாக கருதப்படுவது நாசா அமைப்பு. ஹூஸ்டனில் உள்ள இந்த அமைப்பின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் நேற்று மாலை ஒரு நாசா காண்ட்ராக்ட் ஊழியர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.

இதனால் ஜான்சன் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மையத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. மையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

அந்த நபர் இருந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் அதற்குள் ஒரு பெண் நாசா ஊழியர் மற்றும் ஒரு பொறியாளரை அந்த நபர் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்புப் படையினர் அந்த நபரை நெருங்கியதால், பீதியடைந்த அந்த நபர் பிணையக் கைதிகளில் ஒருவரை சுட்டுக் கொன்றார். பின்னர் தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பிணையக் கைதியாக பிடிக்கப்பட்ட பெண் எந்த விதக் காயமும் இன்றித் தப்பினார்.

எதற்காக அந்த காண்ட்ராக்ட் ஊழியர் இந்த தாக்குதலை நடத்தினார் என்று தெரியவில்லை.

சில நாட்களுக்கு முன்புதான் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்தில் தென் கொரிய மாணவரின் வெறிச் செயலுக்கு 32 பேர் பலியானார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நாசாவுக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, April 19, 2007

திருத்தந்தையின் தரிசனமாவது திருந்தி நடக்க வழிசெய்யுமா?

வியாழன் 19-04-2007

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக மீறப்பட்டு வருகின்றமை இன்று சர்வதேச விவகாரமாகியிருக்கின்றது.

இக்குற்றச்சாட்டுகள் ஆயுதக்குழுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் போன்றவற்றுக்கு எதிராக மட்டுமல்லாமல், நாட்டின் அரசுக்கும் அதன் தலைமைக்கும் எதிராகவும் கூட பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதுதான் இங்கு முக்கிய பிரச்சினை.

அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடுதல், ஆட்கள் காணாமற் போகச் செய்தல், படுகொலை செய்யப்படல் என்று அராஜகங்கள் அளவுக்கு அதிகமாக நடக்கின்றன.

இக்கொடூரங்களைத் தடுப்பதற்கு அரசுத் தரப்பு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் உதாசீனமாக நடந்துகொள்கின்றது என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, மறுபுறம் அரசுப்படைகள், அவற்றின் கீழ் இயங்கும் துணைப்படைகள் போன்றவையும் இந்தக் கொடூரத்தை இழைக்கின்றன என்றும் அவற்றுக்கு அரசுத் தலைமையின் ஆசியும், அங்கீகாரமும் உண்டு என்றும் திடுக்கிடும் உண்மைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசுப் பின்புலத்தோடு அரங்கேறும் இக்கொடூரங்களை நேரடியாக அனுபவித்து வருகின்ற தமிழர்களுக்கு, இவற்றின் "சூத்திரதாரிகள்' யார் என்பது நன்கு தெரியும்.

அதே சமயம்அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் "மனித உரிமைகள் கண்காணிப்பகம்', லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் "சர்வதேச மன்னிப்புச்சபை' மற்றும் "ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு' போன்றவை எல்லாம் கூட இந்த மனித உரிமை மீறல் கொடூரம் குறித்துத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

சட்ட ரீதியான இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசே, இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது என்ற உண்மையை உலகின் மனித உரிமைக் காவலர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இந்த உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

திருகோணமலையில் ஐந்து அப்பாவி மாணவர்களின் படுகொலைகளின் பின்னணியை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக "சுடர் ஒளி' யின் அப்பிரதேசச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டார். இப்படி இன்னும் பலப்பல.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இத்தகைய மோசமான உரிமை மீறல்கள் குறித்துக் குரல் எழுப்பும்போது, ""உங்கள் கட்சி உறுப்பினர்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்களா? நீங்கள் ஏன் ஆரவாரம் செய்கின்றீர்கள்? '' என்று இடக்குக் கேள்வி எழுப்புகின்றனர் ஆட்சியாளர்கள்.

இவ்வாறு இலங்கை ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல் அராஜகம் சர்வதேச மட்டத்தில் பறைசாற்றப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில்தான், உலகக் கிறிஸ்தவர்களின் ஒப்புயர்வற்ற திருத்தந்தை பதினெட்டாவது ஆசீர்வாதப்பர், நாளை இலங்கை அரசுத் தலைவரை நேரில் சந்தித்து அவருக்கு ஆசீர்வாதம் வழங்க இருக்கின்றார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக நியூயோர்க்கிலிருந்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் லண்டனிலிருந்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியன ஏற்கனவே திருத்தந்தைக்கு முக்கிய மடல்களை அனுப்பி வைத்திருக்கின்றன.

இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் படைகளால் அண்மைக்காலத்தில் இழைக்கப்பட்டுவரும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு பொதுமக்கள் மட்டுமல்லாமல் மதகுருமாரும் அதுவும் திருத்தந்தையின் கத்தோலிக்க மத பீடத்தின் பங்குத்தந்தை கூட இலக்காகியுள்ளார் என்ற உண்மையை மேற்படி சந்திப்புக்கு முன்னர் கடிதம் மூலம் திருத்தந்தைக்கு நினைவூட்டியிருக்கின்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

இலங்கைக் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளின் மிரட்டலுக்கு இலக்காகியிருந்த யாழ். அல்லைப்பிட்டிப் பிரதேச பங்குத்தந்தை வண. பிதா ஜிம் பிறவுண் அடிகளார், கடந்த ஓகஸ்டில் கடற்படையின் சோதனைச் சாவடியில் வழி மறிக்கப்பட்ட பின்னர் மர்மமான முறையில் காணாமற் போயிருக்கின்றமையையும் அந்த அமைப்பு திருத்தந்தைக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இந்தச் சமயத்திலேயே இலங்கை ஜனாதிபதி திருத்தந்தை சந்திப்பு நாளை வத்திக்கானில் இடம்பெறுகின்றது.

இச்சந்திப்பை ஒட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகம், திருத்தந்தையிடம் விடுத்திருக்கும் அதே வேண்டுகோளை ஈழத் தமிழர்கள் சார்பில் நாமும் திருத்தந்தையிடம் முன்வைக்க விழைகிறோம்.

கோரப்படுகொலை அராஜகத்துக்கு தங்கு, தடையின்றி, சட்டக்கட்டுப்பாடு ஏதுமின்றி கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஆட்கடத்தல், அச்சுறுத்திக் கப்பம் பெறல், ஆட்களைக் காணாமற் போகச் செய்தல் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு தமிழர் விரோதக் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுங்கள் என்று இலங்கை அதிபரிடம் வற்புறுத்துங்கள் என்றே திருத்தந்தையை நாம் இறைஞ்சுகின்றோம்.

"நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கின்ற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கின்ற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்''(மத்தேயு 7 ஆம் அதிகாரம், 2ஆம் வசனம்) என்ற உண்மையை இலங்கை அதிபருக்கு எடுத்துரையுங்கள் திருத்தந்தையே!
உங்கள் தரிசனமும், ஆசீர்வாதமும், நற்போதனைகளுமாவது இலங்கைத் தலைமையை நீதி செய்ய நியாயமாக நடக்க நல்வழியில் செயற்பட ஆற்றுப்படுத்த வேண்டும் என்பதுதான் ஈழத் தமிழர்களின் இன்றைய ஆதங்கம், ஏக்கம், எதிர்பார்ப்பு எல்லாம்.

Wednesday, April 18, 2007

15.04.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "நிலவரம்" ஆய்வு நிகழ்வு





பொதுமக்களின் இழப்புகளை ஆவணப்படுத்தல்


வடக்கு கிழக்கு புள்ளிவிபர மையம்
Statistical Centre for North East

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைதீவில் நடைபெற்று வரும் இன ஓடுக்குமுறையால் தமிழ் பேசும் மக்கள் பெருமளவு நெருக்கடிகளையும், இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் இத்தகைய இழப்புகள், அழிவுகள், நெருக்கடிகளைப் பின்வரும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தி ஆவணப்படுத்திக்கொணடிருக்கின்றோம்.

1. படுகொலைகள்

2. கடத்தப்பட்டு காணமல் போனவர்கள்

3. கைது செய்யப்பட்டு காணமல் போனவர்கள்

4. மனிதாபிமானமற்ற சித்திரவதைகள்

5. கொலை அச்சுறுத்தல்களும் கொலை முயற்சிகளும்

6. வாழ்க்கை துணையை இழந்தவர்கள்

7. பெற்றோரை இழந்தவர்கள்

8. பாலியல் வன்முறைகள்

9. விமானத்தாக்குதல்கள்

10. எறிகணைத்தாக்குதல்கள்

11. இராணுவ முகாங்கள், உயர் பாதுகாப்பு வலையங்களினால் பாதிக்கப்பட்டவர்கள்

12. திட்டமிட்ட நில சூறையாடல்கள்

13. காயமடைந்து அங்கவீனமானவர்கள்


மேற்குறிப்பிடப்பட்ட பாதிப்புகளுக்கு


• நேரடியாக முகம் கொடுத்தவர்கள்

• தமது உறவுகளுக்கு நேர்ந்ததை அறிந்தவர்கள்

• நேரில் கண்டவர்கள்

• இவை பற்றி அறிந்தவர்கள்


போன்றவர்கள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் ஆவணப்படுத்தல் செயற்பாட்டிற்கு தங்களிடம் உள்ள
தகவல்களையும், அனுபவங்களையும் ஆதாரபூர்வமாக தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

“இது ஓர் வரலாற்று பெறுமதியான பணியாக மேற்கொள்ளப்பட்டுக்கொணடிருப்பதால்
ஒவ்வொறுவரும் தமது சிரமங்களைப் பாராது மனப்ப+ர்வமாக ஒத்துழைப்புகளை
வழங்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.”

குறிப்பு : “மரணசான்று பத்திரம், மரண விசாரணை அறிக்கைகள்
மனிதஉரிமைகள் ஆணைக்குழு, ICRC, சர்வதேச மன்னிப்பு சபை போன்றவற்றின் சான்று துண்டு, சமாதான நீதவான், கிராமசேவையாளர், பிரதேச செயலளர் போன்றவர்களின் உறுதிப்படுத்தல்கள்,
பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படம், பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்கள்,
சத்தியக்கடதாசி என்பன இருப்பின் இணைத்து அனுப்பவும்”.

தகவல்கள் அனுப்பவேண்டிய முகவரி
மின்னஞ்சல் : snepvtltd@gmail.com
தொலைபேசி : 0094212283952 தொலைநகல் : 0094212283952

பொய்ப் பரப்புரைகள் மூலம் தவறாக வழிநடத்தப்படும் சிங்கள மக்கள்': சுரேஸ் பிரேமச்சந்திரன்.


சிறிலங்கா அரசாங்கமானது பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் சிங்கள மக்களை தவறாக வழி நடத்துகின்றது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
59.2 வீதமான சிங்கள மக்கள் இராணுவத் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்க்கலாம் என தமது வாக்கெடுப்பில் தெரிவித்ததாக கொள்கை வகுப்புத் திட்ட கற்கைக்கான ஆய்வு நிலையம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது:

"இந்த கற்கை நிலையத்தின் வாக்கெடுப்பு முடிவுகள் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களினால் ஏற்பட்டவையே.

இது சிங்கள மக்களின் அபிப்பிராயம் அல்ல. தற்போதைய அரசாங்கம், சிங்கள மக்களின் மனநிலையை மாற்றியுள்ளது. உண்மையாக இப்படியான கருத்துக்கள் கிழக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் போலியான பரப்புரைகளினால் ஏற்பட்டவையே.

கிழக்கில் தாம் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதாகவும், பெருமளவான விடுதலைப் புலிகளை கொன்றுள்ளதாகவும், அதிகளவான ஆயுதங்கள் மற்றும் நிலப்பரப்புக்களை மீட்டுள்ளதாகவும் அரசாங்கம் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. இது சிங்கள மக்களின் மனநிலையை பாதித்துள்ளது. எனவே அவர்கள் இனப்பிரச்சனைக்கு இராணுவ வழிகள் மூலம் தீர்வைக் காணலாம் என எண்ணுகின்றனர்.

இந்த கருத்துக் கணிப்பை நம்பி அரசாங்கம், முழு அளவிலான போரை மேற்கொள்ளுமாக இருந்தால் அது அவர்களின் பேரழிவுக்கே வழிவகுக்கும்" என்றார் அவர்.

இந்த ஆய்வு நிலையத்தின் கருத்துக்கணிப்பில் சிங்கள மக்கள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் பின்பற்றப்படும் உத்திகளை ஏற்றுக்கொள்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்களின் மூலமான இனப்பிரச்சனைக்கான தீர்வை நிராகரித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

எனினும் இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி கருத்து எதனையும் இதுவரை கூறவில்லை.

Tuesday, April 17, 2007

அமெரிக்க பல்கலைக்கழக மாணவனின் வெறியாட்டத்தில் - தமிழ் பேராசிரியர் உட்பட 32பேர் பலி.


அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்குள் (Virginia Tech University) புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 32 பேர் பரிதாபமாக பலியாயினர். இதில் இந்திய பேராசிரியரான லோகநாதன் என்பவரும் அடக்கம்.

அதே போல துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவியான மீனாள் பஞ்சால் என்பவரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

இத்தனை பேரை சுட்டுக் கொன்ற அந்த மர்ம நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பிளாக்ஸ்பெர்க் நகரில் உள்ளது விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம். இங்கு அமெரிக்க நேரப்படி நேற்று காலை 7.15 மணிக்கு, வெஸ்ட் ஆம்ப்ளர் ஜான்ஸ்டன் ஹால் என்ற மாணவர் தங்கும் விடுதி மற்றும் வகுப்பறைகள் உள்ள பகுதியில் ஒரு மர்ம நபர் நுழைந்தார்.

அப்போது வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் போலத் தோன்றிய அந்த நபர் நல்ல உயரமாக இருந்தார். ஜெர்மன் மொழி வகுப்பறைக்குச் சென்ற அந்த நபர் தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால் முதலில் ஒரு ஆசிரியரையும், மாணவரையும் சுட்டுக் கொன்றார். பின்னர் வகுப்பறையில் இருந்தவர்களை சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். ஆனால் வகுப்பறையை விட்டு யாரும் வெளியேறி விட முடியாதபடி வகுப்பறைக் கதவை சங்கிலியால் மூடி விட்டார் அந்த கொலைகார ஆசாமி.

அந்த நபரிடமிருந்து தப்பிப்பதற்காக பல மாணவர்கள் வகுப்பறை ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். வகுப்பறையில் 20 பேர் வரை இருந்ததாகவும், அத்தனை பேரையும் அந்த மர்ம நபர் சுட்டதாகவும் குண்டுக் காயம் அடைந்த டெரிக் ஓ டெல் என்ற மாணவர் கூறினார்.

மொத்தம் இரு இடங்களில் அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். வெஸ்ட் ஆம்ப்ளர் ஜான்ஸ்டன் ஹால் பகுதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நோரிஸ் ஹால் என்ற இடத்திற்குச் சென்று அங்கும் துப்பாக்கியால் சுட்டார் அந்த மர்ம நபர்.

இதில் அந்த வகுப்பறையில் சுற்றுச்சூழல் பொறியியல் குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் என்பவர் மீதும் குண்டு பாய்ந்தது. அதில் அவரும் அந்த இடத்திலேய பலியானார்.

லோகநாதன் பலியாகிவிட்டதை அவருடன் பணியாற்றும் பேராசிரியர் ராமன் குமார் என்பவர் உறுதி செய்தார்.

2 மணி நேர இடைவெளிக்குள் இரு இடங்களிலும் தனது கொலை வெறி ஆட்டத்தை நடத்தியுள்ளார் அந்த நபர்.

இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் 32 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 32 பேரின் உயிரை வாங்கிய அந்த மர்ம நபர் மோரிஸ் ஹால் பகுதியில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதார்.

முதல் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோதே மாணவர்களை சரியான முறையில் எச்சரித்து உஷார் படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தம் 12 ரவுண்டுகள் அந்த நபர் சுட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அதிபர் ஜார்ஜ் புஷ் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கல்வி நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடப்பது வெகு சகஜமானது. யார் வேண்டுமானாலும் கைத் துப்பாக்கி வைத்திருக்க அந்த நாட்டு சட்டத்தில் படு தாராளம் காட்டப்பட்டிருப்பதால் துப்பாக்கி இல்லாமல் யாரையும் அங்கு பார்க்க முடியாது.

அதிகரித்து வரும் துப்பாக்கிகளின் பெருக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது அங்கு சகஜமாகி விட்டது.

கடந்த 1966ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் 25 வயது மாணவர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 13 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 1999ம் ஆண்டு கொலராடோவில் உள்ள கொலம்பியன் உயர் நிலைப் பள்ளியில், 2 மாணவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 12 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இரு மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் துப்பாக்கிச் சூட்டில் இறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 கோடி துப்பாக்கிகள் அங்கு தனிநபர்களிடம் புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 பேர் உயிரிழந்துள்ள விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகதத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாம். 2600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் மொத்தம் 100 கட்டடங்கள் உள்ளன. 26 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 700 பேர் இங்கு படிக்கிறார்கள். 50 இந்தியர்களும் ஆசிரியர்களாக உள்ளனர்.

அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் பற்றி விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக மாணவி ஷீஹான் என்பவர் கூறுகையில்,

துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் இளைஞர் தான். கருப்பு நிற சட்டை அணிந்து இருந்தார். மிக அமைதியாக இருந்தார்.

காலை 7.15 மணியளவில் ஜெர்மன் மொழி வகுப்பறைக்குள்ளே நுழைந்த அந்த நபர் திடீெரன துப்பாக்கியால் மாணவர்களை நோக்கி சராமரியாக சூட்டார். அலறியடித்துக் கொண்டு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக வகுப்பறைத ஜன்னல் வழியாக குதித்து தப்பித்தோம்.

இப்படி குதித்தபோது பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர் என்றார்.

கருணா குழுவினரின் நடவடிக்கைகள் பேரழிவுக்கு வழிகோலும்: ஹக்கீம்.!!

செவ்வாய் 17-04-2007

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் ஒரு பேரழிவான நிலையை ஏற்படுத்தும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது:

நான் இந்த விடயங்கள் தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான தனியான சந்திப்பின் போதும், அனைத்துக்கட்சி குழுக் கூட்டங்களின் போதான சந்திப்பின் போதும் எடுத்துக் கூறியுள்ளேன்.

மிகவும் நெருக்கடியான பகுதிகளில் கருணா குழுவினர் சட்ட ஒழுங்கில் தலையிடுவதனை தடுக்கும் படி அரச தலைவர் சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளும் அதிகாரிகளிடமும், உள்ளுர் அதிகாரிகளிடமும் பணித்திருந்தார்.

கருணா குழுவினரால் முஸ்லிம் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் அவர்கள் முஸ்லிம் சமூகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்று வருவதை காட்டுகின்றது. இது தற்போது நடைபெற்று வரும் மோதல்களை மற்றுமொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் என்றார் ரவூப் ஹக்கீம்.

Sunday, April 15, 2007

படுவான்கரை படையெடுப்பும் திட்டமிட்ட பொருளாதார அழிப்பும்.

ஞாயிறு 15-04-2007

தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட இன ஒழிப்பினையும் சிங்களக் குடியேற்றங்களையும் பொருளாதாரம் மற்றும் வள அழிப்பினையும் அரசு காலங்காலமாக மேற்கொண்டு வருவதை கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களினூடாக அறிய முடியும்.

1956 இனக் கலவரம் முதல் 1983 ஜூலைக் கலவரம், 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களிலும் ஷ்ரீலங்கா அரசும், இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் இணைந்து திட்டமிட்ட இனப்படுகொலைகளையும் பொருளாதார அழிப்பையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

1983 ஜூலை இன அழிப்பின் போது கொழும்பிலுள்ள தமிழ் மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் சொத்துகள் சூறையாடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் விரட்டி அடிக்கப்பட்டனர். அதேபோன்றே தமிழ் மக்களது பாரிய சொத்தாகிய யாழ். பொது நூலகமும் அரசினால் திட்டமிட்டு தீ வைத்து தமிழ் மக்களது கல்விக்கு சாவு மணி அடிக்க நினைத்தது. அதே கைங்கரியத்தையே இன்று மட்டக்களப்பு படுவான்கரை மக்கள் மீதும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்தின் மீதும் திட்டமிட்டு தாக்குதலை நடாத்தி பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம் பற்றியும் அது எதில் தங்கியுள்ளது என்பது பற்றியும் அது எக்காலத்தில் தங்கியுள்ளது என்பது பற்றியும் அரசுக்கு தெரியாமல் இல்லை. அதனை இலக்கு வைத்தே கச்சிதமாக பொருளாதார அழிப்பு நடவடிக்கையினை அரசு மேற்கொண்டுள்ளது.

`தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கான போர்' என சர்வதேசத்துக்கு காட்டிக் கொண்டு தமிழ் மக்களையும் தமிழ் மக்களது பொருளாதார தரத்தையும் திட்டமிட்டு சீர்குலைத்துவிட்டு ஏனைய சமூகத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரியாதவாறு இருட்டடிப்புச் செய்து வருகின்றது.

தமிழ் மக்களது பொருளாதாரம் மற்றும் வளங்களை அழிப்பதனூடாக அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து பிச்சை எடுக்க வைப்பதும் அதனூடாக தமிழரின் உரிமைப் போராட்டத்தை நலிவடையச் செய்வதுமே பேரினவாதிகளின் திட்டம். ஆனால், அதனை சாதித்துவிட முடியாத அளவுக்கு தமிழரின் போராட்டம் வளர்ச்சி கண்டு செல்கின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களது பொருளாதாரத்தை அழிப்பதனூடாக போராட்டத்தை ஒடுக்குவது என்பது புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை நடைபெறப் போவதில்லை.

படுவான்கரை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் சாதிக்க நினைத்தது என்ன? ஏன் திட்டமிட்டு ஒன்றரை இலட்சம் மக்களை ஒரு சில தினங்களில் முழுமையாக வெளியேற்றியது? ஏன் ஆகஸ்ட் மாதம் முதல் தாக்குதல் நடத்தி ஜனவரி, பெப்ரவரியில் மக்களை வெளியேற்றியது? இவை அனைத்துக்கும் வெறுமனே விடுதலைப் புலிகளின் வசமுள்ள 70 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றுவது என்பது மட்டுமல்ல, மறைமுகக் காரணமும் உண்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம் எதில் தங்கியுள்ளது? அது எக்காலப் பகுதியில் தங்கியுள்ளது? என்பது நன்கு தெரிந்தே அவற்றை அழிப்பதற்காகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு அளவிலான பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தினை அரசு நடாத்துகின்றது.

அக்டோபர் நடுப்பகுதியில் விவசாயிகள் நெல் விதைப்பை ஆரம்பிப்பார்கள். ஜனவரி, பெப்ரவரியில் நெல்லை அறுவடை செய்வார்கள். மார்ச், ஏப்ரலில் சிறுபோக செய்கை பண்ணப்படும். இக்காலப்பகுதியில் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமான எறிகணை மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்களை நடத்தினால் மக்கள் வெளியேறுவார்கள். அறுவடை சிறுபோக செய்கை பண்ணப்படமாட்டாது என்பதாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகம் ஒரு இலட்சம் ஏக்கரும் சிறுபோகம் உன்னிச்சை , நவகிரி, புளுக்குனாவ, வாகனேரி, கட்டுமுறி குளங்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கரும் செய்கை பண்ணப்படுவதுடன் உப உணவுப் பயிர்ச்செய்கையும் தோட்டங்களும் செய்கை பண்ணப்படுவதோடு மட்டக்களப்பில் 70 சதவீதமான நிலப்பரப்பைக் கொண்ட படுவான்கரையில் பெருமளவிலான ஆடு மாடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் முதல் ஆரம்பிக்கப்பட்ட கடுமையான தாக்குதல்களால் 20 சதவீதமான நிலப் பரப்பு செய்கை பண்ணப்பட்ட நிலையில் அறுவடை காலப்பகுதியிலேயே உக்கிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

கையிலுள்ள பணத்தினையும் காது கழுத்தில் இருந்த நகைகளை அடகு வைத்து வயலில் இட்ட மக்கள் உக்கிர தாக்குதலால் பல உயிர்களை இழந்த நிலையிலும் நூற்றுக் கணக்கானோர் காயப்பட்டும் பெரும்பாலான வீடுகள் அழிந்த நிலையிலும் 20% வரையிலான வயல் நிலங்கள் அறுவடை செய்த நிலையிலும் ஏனைய வயல் நிலங்கள் அறுவடை செய்யப்பட்டும் செய்யப்படாமலும் சூடு வைத்த நிலையிலும் அறுவடை செய்யப்படாமலும் அறுவடை செய்து துப்புரவு செய்த நெல்லை உரிய சந்தை வாய்ப்பு இன்றி சந்தைப்படுத்தாமல் களஞ்சியப்படுத்திய நிலையிலும் மக்கள் உடுத்த உடுப்புடன் ஓரிரு தினங்களில் இதுவரை வரலாறு காணாத அளவு அதிகமான மக்கள் வெளியேறினர். ஆடு, மாடுகள் தோட்டங்களையும் வயல்களையும் அழித்தனர்.

குண்டு மழையினால் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு வீதிகளிலும் வயல்வெளிகளிலும் இறந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. வயல்களும் சூடுகளும் குண்டு வீச்சினால் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.

எல்லைப் புறங்கள் மீது மட்டக்களப்பு நகரின் பிரதான படைமுகாம்களிலும் இருந்து வீசப்பட்ட குண்டு மற்றும் விமானத் தாக்குதலால் படுவான்கரையே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள வீடுகள் அனைத்தும் சேதமாக்கப்பட்டன.

அத்துடன், நின்று விட்டால் ஓரளவேனும் மக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு சென்று மிஞ்சியுள்ள பொருட்களையாவது மீட்டு இருக்கலாம். ஆனால், இராணுவத்தினரும் சிங்கள மக்களும் இணைந்து படுவான்கரைப் பகுதியில் இருந்த கிராமங்களை சூறையாடி வவுணதீவு ஊடாகவும் எல்லைக் கிராமங்களாகிய புளுக்குனாவ, 39 ஆம் கொலனி, மங்களோயா, மகோயா போன்ற பகுதிகளூடாகவும் கொண்டு செல்கின்றனர்.

வீட்டுத் தளபாடங்கள், மின்சார சாதனப் பொருட்கள் முதல் வீட்டு நிலை, யன்னல் போன்றனவும் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன. களஞ்சியப்படுத்தப்பட்ட நெல் முதல் உப உணவுகள் வரையும் ஆலயங்கள் முதல் பாடசாலைகள் வரையும் சிங்களவர்கள் பொருட்கள் எதனையும் விட்டு வைக்கவில்லை.

பாடசாலைகள் உடைக்கப்பட்டு கணினிகள் பல சூறையாடப்பட்டுள்ளன. இதனை புலிகள் மேற்கொண்டதாகவும் இராணுவத்தரப்பு கூறினாலும் புலிகள் தங்களது பொருட்களைக் கூட எடுக்காமல் சென்று இராணுவம் கைப்பற்றியதாகக் கூறும் நிலையில் இதனை புலிகள் கொண்டு சென்றதாகக் கூறுவது எப்படி?

அரசின் திட்டமிட்ட பொருளாதார அழிப்பு இத்துடன் நின்று விட்டதா, இல்லை. இரண்டு போக பயிர்ச்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெரும்போகம் ஒரு இலட்சம் ஏக்கரையும் செய்கை பண்ண விவசாயிகள் விதை நெல்லுக்கு எங்கு செல்வது. பொலநறுவை, அம்பாறை மாவட்டங்களுக்குச் சென்று விதை நெல்களைப் பெற்றே விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது எந்தளவு சாத்தியப்படும். இதனால் எதிர்வரும் பெரும்போகம் 50% கூட செய்கை பண்ணப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்புவது என்பது கடினமான காரியமாக இருந்தாலும் அது விவசாயிகளின் கையிலே உள்ளது.

இவர்களுக்கு அரசு உதவ முன்வருமா? சர்வதேச சமூகத்திற்கு உதவுவதாக காட்ட முன் வந்தாலும் அது ஒரு கண்துடைப்பாகவே அமையும். மாவிலாறு பிரச்சினைக்கு அரசு காட்டிய ஈடுபாடும் ஆர்வமும் தமிழ் மக்கள் பிரச்சினையில் எங்கு போய் உள்ளது? மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் "பொன்குடம்" போலுள்ளது.

விளை நெல் பிரச்சினையுடன் போகவில்லை. மட்டக்களப்பு மக்கள் உழைக்கின்ற பணத்தை சிங்கள மக்களுக்கு வழங்கி அவர்களிடம் இருந்து உணவினைப் பெற வேண்டிய நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களது பொருளாதாரத்தை அழித்து சிங்கள மக்களை வாழ வைப்பதையே அரசு மேற்கொண்டு வருகின்றது.

பசி தீர்ப்பவர்களின் பங்காளிகளாகிய படுவான்கரை மக்கள், இன்று ஒருநேரம் உண்பதற்கு கூட உணவின்றி வீதியோரங்களில் வாடுகின்றனர்.

அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை விடுதலைப் புலிகளின் வசம் உள்ள நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருப்பதோ இடம்பிடிப்பதோ அல்ல. தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தை அழித்து அவர்களை அகதிகளாக்கிய பின் மீண்டும் ஏழைகளாக குடியமர்த்துவதே அடிப்படைத் திட்டம்.

- எம். குமார் -

ஒரு மார்க்கிற்கு ஜந்து முத்தம் தா! - பல்கலைகழகங்களில் நடக்கும் அட்டூழியங்கள்.

ஞாயிறு 15-04-2007

பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இது செக்ஸ் சில்மிஷ சீஸன் போலிருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இன்ஜினீயரிங் மாணவி சேட்னா, பல்கலைக்கழக விடுதியில் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக ரகுராமன், மணிக்குமார் ஆகிய இரண்டு பேராசிரியர்கள் சஸ்பெண்ட் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது ஆனார்கள்.

அடுத்ததாக, மதுரையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பணிபுரியும் பாண்டியம்மாள் என்பவர் அந்தக் கல்லூரி முதல்வர், நூலகர் ஆகியோர் மீது பகீர் செக்ஸ் டார்ச்சர் புகாரைப் போட, போலீஸார் அதை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, கோவை விவசாயப் பல்கலைக்கழகத்திலும் ஒரு குபீர் செக்ஸ் புகார். ‘உனக்கு பிராக்டிகலில் ஒழுங்காக மதிப்பெண் போட வேண்டுமென்றால், ஒரு மார்க்கிற்கு ஐந்து முத்தம் தா’ என்று பேராசிரியர் ஒருவர் மிரட்டியதாகக் குற்றம்சாட்டி, மாணவி ஒருவர் விஷம் குடித்து... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ‘ஐந்து முத்தம் புகழ்’ பேராசிரியர், போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த மாணவியின் பெயர் லீனா. பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த தனவேல் என்பவரது மகள். இருபத்து மூன்று வயதான லீனா எம்.எஸ்ஸி. அக்ரி, இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். இதே பல்கலையில் அக்ரி எக்ஸ்டென்சன் மற்றும் ரூரல் சோஸியாலஜி துறைப் பேராசிரியராக வேலை பார்ப்பவர் பிலிப். மாணவி லீனாவுக்கு இவர் துறை வழிகாட்டி. இதன் காரணமாக லீனா அடிக்கடி பேராசிரியர் பிலிப்பை அவர் துறையில் சந்தித்து, சந்தேகம் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிலிப், சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் சாக்கில் மாணவியிடம் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவாராம். அதில் செக்ஸ் விஷயங்கள் நிறைய வந்ததால் அதிர்ச்சியான லீனா, தன் சக மாணவிகளிடம் இதுபற்றி அடிக்கடி சொல்லி வந்திருக்கிறார். ‘‘ஏய்! அவர் எங்களிடமும் அப்படித்தான்டி பேசுறார்’’ என்று சக மாணவிகள் சலித்துக் கொண்டுள்ளனர். இருந்தாலும் பிராக்டிகல் மார்க் போடும் துருப்புச் சீட்டு பேராசிரியர் பிலிப்பின் கையில் இருந்ததால், அவர் மீது புகார் கூறுவதை மாணவிகள் தவிர்த்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 29ம் தேதி மாலை, ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பிலிப்பின் அறைக்குப் போயிருக்கிறார் லீனா. அங்கே வழக்கம் போல இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி பிலிப், ‘‘உனக்கு நான் பிராக்டிகல் மார்க் போடவேண்டுமென்றால் ஏதாவது ஸ்வீட் தர வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார். ‘‘ஸ்வீட்தானே வாங்கித் தர்றேன்’’ என்று வெகுளியாகச் சொல்லியிருக்கிறார் லீனா. அதற்கு பேராசிரியர், ‘‘நான் கேட்டது சாப்பிடுற இனிப்பு இல்லை. கொடுக்கிற இனிப்பு’’ என்று நாக்கை சப்புக் கொட்டி, நாக்கால் தனது உதட்டைத் தடவியிருக்கிறார். ‘‘உனக்கு பிராக்டிகலில் மார்க் போட வேண்டுமென்றால் தினமும் ஒரு மார்க்கிற்கு ஐந்து முத்தம் தரவேண்டும்’’ என்று தூண்டில் வீசியிருக்கிறார்.

அவ்வளவுதான். லீனாவுக்கு முகம் ஜிவுஜிவுவென்று சிவந்து விட்டது. அவமானம் தாங்காமல் வெளியே ஓடியிருக்கிறார். இரண்டு, மூன்று நாட்கள் விடுதி மாணவிகளிடம் எதுவும் பேசாமல் பித்துப் பிடித்தவர் போல இருந்த அவர், பிறகு என்ன நினைத்தாரோ? கடந்த புதன் கிழமை மதியம் தன் அறையில் சாணிப்பவுடரை நீரில் கலக்கிக் குடித்துவிட்டு, மயங்கி விழுந்திருக்கிறார்.

அதிர்ந்துபோன மற்ற மாணவிகளும், விடுதி ஊழியர்களும் லீனாவைத் தூக்கிக்கொண்டு ஓடி, அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்திருக்கிறார் லீனா. ‘‘பேராசிரியர் பிலிப்பின் செக்ஸ் டார்ச்சரால்தான் நான் தற்கொலைக்கு முயன்றேன்’’ என்று அவர் சொல்ல, அன்றே பிலிப் மீது வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர் போலீஸார்.

பேராசிரியர் பிலிப் விஷயத்தில் இன்னொரு வேதனையான சுவாரஸ்யம். இவரது மனைவி பெயர் ஷெரீன். கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலராக ஷெரீன் பணிபுரிந்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு கல்லூரிப் படிப்பு படித்து வரும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். இப்படி கல்லூரியில் படிக்கும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில்தான் லீனாவிடம் முத்தம் கேட்டு மன்மதத் தூது விடுத்திருக்கிறார் பிலிப்.

பிலிப் கைதான அதே நாளில் அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன், வழக்கறிஞர்கள் நடத்திய பெண்கள் கருத்தரங்கம் ஒன்றில் ஷெரீன் கலந்துகொண்டு, அதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அதிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியெல்லாம் பொளந்து கட்டியிருக்கிறார்.

‘‘பெரும்பாலான பெண்கள் கணவன்மார்கள் மீது வீணாகச் சந்தேகப்படுகிறார்கள். இதனால் குடும்பங்களில் துன்பம் ஏற்படுகிறது. கணவர்கள் வழிதவறி மற்ற பெண்களிடம் செல்ல இதுவும் ஒரு காரணமாகி விடுகிறது’’ என்றும் விளாசித் தள்ளியிருக்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் இங்கே பிலிப்பின் கையில் காப்பு மாட்டியிருக்கிறார்கள் போலீஸார்.

அடுத்த நாள் இந்த இரண்டு செய்திகளுமே பத்திரிகைகளில் வெளிவர, கோவை முழுவதும் ஒரே குபீர் சிரிப்பு. கோவை கோர்ட் வளாகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் காவல்துறை வட்டாரங்களில் இந்தச் செய்திகள் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தன.

விஷம் குடித்து சாவின் விளிம்புக்குப் போய்த் திரும்பிய மாணவி லீனாவை, அவர் சிகிச்சை பெற்று வரும் ஆரோக்யா மருத்துவமனைக்குச் சந்திக்கச் சென்றோம். அவரைப் பார்க்கக் கூட அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை. லீனாவின் சித்தப்பா மகன்கள் இருவர் மட்டும், ‘‘சம்பவம் நடந்தது உண்மை. இன்னமும் எங்க தங்கச்சிக்கு இரண்டாண்டு படிப்பு பாக்கியிருக்கு. இதனால் புகார் கொடுக்கக் கூட லீனா ஆரம்பத்தில் பயந்தாள். அதன்பிறகு படாதபாடு பட்டு ஒப்புதல் வாங்கித்தான் புகார் தந்தோம். இங்கே இனியும் ஒரு பேராசிரியர் மாணவிகளிடம் வாலாட்டக் கூடாது என்றுதான் இந்த அளவுக்காவது புகார் கொடுத்தாள். இதற்கு மேல் எங்களை எதுவும் கேட்காதீர்கள்’’ என்று கையெடுத்துக் கும்பிட்டனர்.

விவசாயப் பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரிக்கப் போன போது, ஊழியர்கள் பல தகவல்களை நம்முடன் பரிமாறினர்.

‘‘இங்கே ஒரு பேராசிரியர் மட்டுமில்லை, பல பேராசிரியர்கள் மாணவிகளிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். ஒரு பேராசிரியர், பிராக்டிகல் மார்க் போடும்போது மாணவிகளைத் தன் மடியில் உட்காரச் சொல்லுவார். இன்னொரு பேராசிரியரோ, விடுமுறை நாட்களில் காதலர்கள் கூடும் பொட்டானிக்கல் கார்டனுக்கு மாணவிகளை அழைத்து வந்து கடலை போட வற்புறுத்துவார். அப்படி கம்பெனி கொடுக்கும் மாணவிகளுக்கு மட்டும்தான் மார்க்கை அள்ளிவிடுவார்.

மாணவிகளுக்கு பிராக்டிகல் மார்க் என்பது ஐந்து அல்லது பத்து மார்க்தான். அதற்கு இந்தப் பேராசிரியர் ஒரு மார்க்கிற்கு ஐந்து முத்தம் கேட்டாரென்றால் ஐந்து மார்க்கிற்கு இருபத்தைந்து முத்தம் ஆயிற்றே! அந்த மாணவி அப்படி ஒருவேளை முத்தம் தந்திருந்தால் கூட பேராசிரியர் விட்டிருப்பாரா? அடுத்த கட்ட மன்மத லீலைக்கு அந்த மாணவியை அழைத்து கவிழ்த்திருப்பாரே. சென்ற வருடம் ஒரு மாணவியிடம் விரிவுரையாளர் ஒருவர் இப்படி அத்து மீறியதால் அந்த மாணவி ஊருக்குப் போய் தற்கொலையே செய்துகொண்டார். பாவம். மாணவியின் பெற்றோர் ஏழைகள் என்பதால் உயரதிகாரிகள் அவர்களைச் சரிக்கட்டி அமுக்கிவிட்டனர்.

இங்குள்ள உயரதிகாரிகள் எல்லாம் யோக்கியமில்லை. இவர்கள் ஏற்கெனவே பேராசிரியர்களாக இருந்தவர்கள்தான். இவர்கள் எல்லோருமே மாணவிகளிடம் மட்டுமல்ல, பெண் உதவியாளர்களிடமும் செக்ஸ் தாகத்தைத் தணித்துக் கொள்பவர்கள். இங்கு ஏற்கெனவே பெரிய பொறுப்பில் இருந்த மூத்த கல்வியாளர் ஒருவர், தன் பெண் உதவியாளரிடம் பட்டப்பகலிலேயே அனைத்தையும் முடித்துக் கொள்வார். அதற்காக பிரத்தியேக அறையையே உருவாக்கி வைத்திருந்தார்.

இன்னொரு பொறுப்பான அதிகாரி. இவர் பகலில் ராமன் போல நடிப்பார். இரவானால் தினம் ஒரு பெண்ணைத் தள்ளிக் கொண்டு வந்து விடுவார். அதற்கு வசதியாக இங்கே பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய கட்டடங்கள் கடல் போல கிடக்கின்றன. அதில் ஏதாவது ஒரு மூலையில் தப்பு நடந்தால் யாருக்குத் தெரியப் போகிறது? அத்துடன், இங்கே வரும் அரசியல் வி.ஐ.பி.களுக்கு பெண் சப்ளை செய்யும் பேராசிரியப் பெருமக்களும் இருக்கிறார்கள்.

இங்கேயிருக்கிற ஊழியர்களுக்கும், இது தெரியும். ஆனால் வேலை போய்விடும் என்ற பயத்தில் யாரும் மூச்சு விடமாட்டார்கள். மாணவ, மாணவிகளும் எதிர்காலம் போய்விடும், பிராக்டிகல் மார்க் போய்விடும் என்ற பயத்தில் சத்தம் காட்ட மாட்டார்கள்.

இப்போது லீனா விஷயம்கூட சாதாரணமாக வெளியில் வரவில்லை. இந்த மாணவி பா.ம.க. எம்.எல்.ஏ. ஒருவரின் நெருங்கிய உறவினர். அவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு கோட்டை வரை பேசி பிரஷர் கிளப்பியதால்தான் போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளே நேரில் வந்து விசாரித்து பேராசிரியரைக் கைது செய்துள்ளனர்!’’ என்று குமுறித் தீர்த்தனர் ஊழியர்கள்.

பிலிப் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாள் கழித்து, மேற்படி பேராசிரியர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவை விவசாயப் பல்கலைக்கழகம் அமைத்திருக்கிறது. ‘‘எந்தப் பேராசிரியர் மாணவிகளிடம் இடக்கு மடக்காக நடக்க முயன்றாலும், மாணவிகள் பயப்படாமல் புகார் கொடுக்கலாம். பிராக்டிகல் மார்க் குறைந்துவிடும் என்ற பீதியும் வேண்டாம். பிராக்டிகல் மார்க் குறைக்கப்பட்டதென்றால், அதைக் கவனத்தில் எடுத்து மதிப்பெண்ணைத் திரும்ப போட்டுத் தருகிறோம்’’ என்று பல்கலை துணை வேந்தர் ராமசாமியே அறிவித்திருக்கிறார். இப்படி அறிவித்திருந்தும் இதை நம்பிப் புகார் தர எந்த மாணவியும் வரவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

சிதம்பரம், மதுரை, இப்போது கோவை... இனி அடுத்து எந்த ஊர்ப் பல்கலைக்கழகத்தில் எந்தப் பேராசிரியர் ‘மன்மத ராசாவாக மாறுவாரோ?’ என்று மலைத்துப் போய்க் கிடக்கிறார்கள் மாணவிகள்.

மதுரை இறையியல் கல்லூரி நூலகத்தில் பணி புரியும் தலித் வகுப்பைச் சேர்ந்த பாண்டியம்மாளை, நூலகர் அகஸ்டின், காலை எட்டரை மணிக்கே வேலைக்கு வரச் சொல்லி, இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். இதுபற்றி கல்லூரி முதல்வர் மோகன்லார்பீரிடம் பாண்டியம்மாள் புகார் செய்தபோது, முதல்வர் உதிர்த்த முத்தான வசனம் இதுதான்.

‘‘நூலகரிடம் அனுசரித்துப் போ!’’ பண்டியம்மாளின் கணவர் பாண்டியன் இது தொடர்பாக முதல்வரைச் சந்திக்க முயல, அவரை அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள் கல்லூரி நிர்வாகிகள். அதன்பிறகு முதல்வர் மற்றும் நூலகர் மீது நடவடிக்கை கோரி போலீஸ§க்குப் போயிருக்கிறார் பாண்டியம்மாள்.

இந்த செக்ஸ் டார்ச்சர் பிரச்னையில் புரட்சிப்புலிகள் இயக்கம், விஷ்வ ஹிந்து பரிஷத் எல்லாம் மூக்கை நுழைத்து சாதி மத சாயம் பூசுவதால் மருண்டு போய்க் கிடக்கிறது மதுரை.

Kumudam

யாழ் முன்னிரங்க நிலைகளில் படைக்கலக் குவிப்பு.

ஞாயிறு 15-04-2007

யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர் கடந்த சில நாட்களாக முன்னரங்க நிலைகளை நோக்கி மிக அதிகளவிலான படைக் குவிப்பையும், படைக்கல நகர்த்தலையும் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் குடாநாட்டின் மூன்று பிரதான வீதிகளை காலையும், மாலையும் மக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யும் படையினர், இந்தப் படைக்கல நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னரங்க முகாம்களில் அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், அருகிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் செல்லும் படையினர் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை, தென்மராட்சி, வலிகாமம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முகாம்களுக்கு அருகிலுள்ள மக்கள், சிறீலங்காப் படையினரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர்.

வீதிகளிலும், ஏனைய பிரதேசங்களிலும் இளைஞர்களோ, ஏனையவர்களோ ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு இராணுவத்தினரின் உந்துருளி அணியினரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

புலிகளின் வலையமைப்புத் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வுத்துறை தகவல் சேகரிப்பு.

ஞாயிறு 15-04-2007

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள வலைப் பின்னல் தொடர்பான விபரங்களை இந்திய மத்திய புலனாய்வுத்துறை சேகரித்து வருகின்றது.

ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்பட உலகின் 17 நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலைப் பின்னல்கள், மற்றும் தொடர்பாடல்கள் குறித்தே தகவல் சேகரிக்கப்படுகின்றது.

இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கு பற்றிய இறுதிக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவினரே இந்தத் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல நாடுகள் விடுதலைப் புலிகள் பற்றிய தகவலை வழங்க மறுத்திருப்பதுடன், தமது தகவல்களை இந்திய அரசு தவறாகப் பயன்படுத்த முடியும் எனவும் அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தகவல்களை வழங்கிய நாடுகள், இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தமது தகவலின் அடிப்படையில் மரண தண்டனை வழங்கக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த வாரம் கொழும்புக்குச் சென்ற, ரஜீவ் காந்தியின் கொலை வழக்கு பற்றிய இறுதிக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், விடுதலைப் புலிகளின் வலையமைப்பு பற்றி சிறீலங்கா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.