Thursday, April 19, 2007

திருத்தந்தையின் தரிசனமாவது திருந்தி நடக்க வழிசெய்யுமா?

வியாழன் 19-04-2007

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக மீறப்பட்டு வருகின்றமை இன்று சர்வதேச விவகாரமாகியிருக்கின்றது.

இக்குற்றச்சாட்டுகள் ஆயுதக்குழுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் போன்றவற்றுக்கு எதிராக மட்டுமல்லாமல், நாட்டின் அரசுக்கும் அதன் தலைமைக்கும் எதிராகவும் கூட பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதுதான் இங்கு முக்கிய பிரச்சினை.

அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடுதல், ஆட்கள் காணாமற் போகச் செய்தல், படுகொலை செய்யப்படல் என்று அராஜகங்கள் அளவுக்கு அதிகமாக நடக்கின்றன.

இக்கொடூரங்களைத் தடுப்பதற்கு அரசுத் தரப்பு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் உதாசீனமாக நடந்துகொள்கின்றது என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, மறுபுறம் அரசுப்படைகள், அவற்றின் கீழ் இயங்கும் துணைப்படைகள் போன்றவையும் இந்தக் கொடூரத்தை இழைக்கின்றன என்றும் அவற்றுக்கு அரசுத் தலைமையின் ஆசியும், அங்கீகாரமும் உண்டு என்றும் திடுக்கிடும் உண்மைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசுப் பின்புலத்தோடு அரங்கேறும் இக்கொடூரங்களை நேரடியாக அனுபவித்து வருகின்ற தமிழர்களுக்கு, இவற்றின் "சூத்திரதாரிகள்' யார் என்பது நன்கு தெரியும்.

அதே சமயம்அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் "மனித உரிமைகள் கண்காணிப்பகம்', லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் "சர்வதேச மன்னிப்புச்சபை' மற்றும் "ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு' போன்றவை எல்லாம் கூட இந்த மனித உரிமை மீறல் கொடூரம் குறித்துத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

சட்ட ரீதியான இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசே, இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது என்ற உண்மையை உலகின் மனித உரிமைக் காவலர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இந்த உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

திருகோணமலையில் ஐந்து அப்பாவி மாணவர்களின் படுகொலைகளின் பின்னணியை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக "சுடர் ஒளி' யின் அப்பிரதேசச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டார். இப்படி இன்னும் பலப்பல.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இத்தகைய மோசமான உரிமை மீறல்கள் குறித்துக் குரல் எழுப்பும்போது, ""உங்கள் கட்சி உறுப்பினர்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்களா? நீங்கள் ஏன் ஆரவாரம் செய்கின்றீர்கள்? '' என்று இடக்குக் கேள்வி எழுப்புகின்றனர் ஆட்சியாளர்கள்.

இவ்வாறு இலங்கை ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல் அராஜகம் சர்வதேச மட்டத்தில் பறைசாற்றப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில்தான், உலகக் கிறிஸ்தவர்களின் ஒப்புயர்வற்ற திருத்தந்தை பதினெட்டாவது ஆசீர்வாதப்பர், நாளை இலங்கை அரசுத் தலைவரை நேரில் சந்தித்து அவருக்கு ஆசீர்வாதம் வழங்க இருக்கின்றார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக நியூயோர்க்கிலிருந்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் லண்டனிலிருந்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியன ஏற்கனவே திருத்தந்தைக்கு முக்கிய மடல்களை அனுப்பி வைத்திருக்கின்றன.

இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் படைகளால் அண்மைக்காலத்தில் இழைக்கப்பட்டுவரும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு பொதுமக்கள் மட்டுமல்லாமல் மதகுருமாரும் அதுவும் திருத்தந்தையின் கத்தோலிக்க மத பீடத்தின் பங்குத்தந்தை கூட இலக்காகியுள்ளார் என்ற உண்மையை மேற்படி சந்திப்புக்கு முன்னர் கடிதம் மூலம் திருத்தந்தைக்கு நினைவூட்டியிருக்கின்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

இலங்கைக் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளின் மிரட்டலுக்கு இலக்காகியிருந்த யாழ். அல்லைப்பிட்டிப் பிரதேச பங்குத்தந்தை வண. பிதா ஜிம் பிறவுண் அடிகளார், கடந்த ஓகஸ்டில் கடற்படையின் சோதனைச் சாவடியில் வழி மறிக்கப்பட்ட பின்னர் மர்மமான முறையில் காணாமற் போயிருக்கின்றமையையும் அந்த அமைப்பு திருத்தந்தைக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இந்தச் சமயத்திலேயே இலங்கை ஜனாதிபதி திருத்தந்தை சந்திப்பு நாளை வத்திக்கானில் இடம்பெறுகின்றது.

இச்சந்திப்பை ஒட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகம், திருத்தந்தையிடம் விடுத்திருக்கும் அதே வேண்டுகோளை ஈழத் தமிழர்கள் சார்பில் நாமும் திருத்தந்தையிடம் முன்வைக்க விழைகிறோம்.

கோரப்படுகொலை அராஜகத்துக்கு தங்கு, தடையின்றி, சட்டக்கட்டுப்பாடு ஏதுமின்றி கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஆட்கடத்தல், அச்சுறுத்திக் கப்பம் பெறல், ஆட்களைக் காணாமற் போகச் செய்தல் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு தமிழர் விரோதக் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுங்கள் என்று இலங்கை அதிபரிடம் வற்புறுத்துங்கள் என்றே திருத்தந்தையை நாம் இறைஞ்சுகின்றோம்.

"நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கின்ற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கின்ற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்''(மத்தேயு 7 ஆம் அதிகாரம், 2ஆம் வசனம்) என்ற உண்மையை இலங்கை அதிபருக்கு எடுத்துரையுங்கள் திருத்தந்தையே!
உங்கள் தரிசனமும், ஆசீர்வாதமும், நற்போதனைகளுமாவது இலங்கைத் தலைமையை நீதி செய்ய நியாயமாக நடக்க நல்வழியில் செயற்பட ஆற்றுப்படுத்த வேண்டும் என்பதுதான் ஈழத் தமிழர்களின் இன்றைய ஆதங்கம், ஏக்கம், எதிர்பார்ப்பு எல்லாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home