Sunday, September 23, 2007

மாணவர், ஆசிரியர்களின் பாதுகாப்பை ஐ.நா சிறுவர் நிதியம் உறுதி செய்ய வேண்டும்: முல்லை. வலயக் கல்விப் பணிப்பாளர்

ஞாயிறு 23-09-2007

20 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உறுதி செய்ய வேண்டும் என்று முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் அரியரட்னம் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (20.09.07) நடத்தப்பட்ட வான் தாக்குதலினால் மாணவர்கள் எதிர்கொண்ட பாதிப்பை வெளிப்படுத்தி நேற்று முன்நாள் புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட கண்டனப் பேரணியின் முடிவில் அவர் ஆற்றிய உரை:

முல்லைத்தீவு வலயத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வி கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதை மனிதநேய அமைப்பினர் அனைவரும் அறிவர்.

இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதான வானூர்தித் தாக்குதல்களை இங்கு பணியாற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும் அறியும்.

இத்தகைய வான் தாக்குதல் சம்பவங்கள் நவாலித் தேவாலயத்தில் தொடங்கி நாகர்கோவில் அரச பாடசாலையில் இன்னுமொரு புதிய வடிவம் பெற்றது.

2006 ஆம் ஆண்டு செஞ்சோலை வளாகத்தில் அதிகமான உயிர்களைப் பலி கொண்டது.

இதன் பின்னர் தொடர்ந்தும் மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களைப் பாதிக்கின்ற வானூர்தித் தாக்குதல்கள் பல நடைபெற்று வருகின்றன.

வேணாவில் முருகானந்தா பாடசாலையை அண்மித்த பகுதியில் கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டதால் மாணவன் ஒருவர் காயமடைந்திருந்தார். ஏனைய மாணவர்கள் பாதுகாப்புத் தேடி தப்பி ஓடினர். இதனால் பெருமளவான உயிரிழப்புக்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

பாடசாலை நடந்து கொண்டிருக்கின்ற போது வியாழக்கிழமை வான்பரப்பில் பிரவேசித்த வானூர்திகள் மிகவும் நெருக்கமான மக்கள் நடமாட்டப் பகுதிகளில் தாக்குதல் நடத்தின. இதனால் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

இந்த நேரத்தில் முக்கிய கல்லூரிகளான புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, வேணாவில் முருகானந்தா, சிறிசுப்பிரமணிய வித்தியாலயம், கோம்பாவில் விக்கினேஸ்வரா போன்ற பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகியிருந்தனர்.

தமது உயிரைக் காத்துக் கொள்வதற்காக பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் அனுமதியின்றி வீடுகளுக்குச் சிதறி ஓடினர்.

இதன் பின்னர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் அதிபர்களிடம் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பாடசாலை அதிபர்கள் என்னிடம் இந்த நிலைமையைக் கூறினார்கள். பெற்றோரின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானது. ஏனெனில் பாடசாலைக் கல்வியை மிகவும் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாது கற்க வேண்டும்.

இப்பிரதேசத்தில் தினமும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வந்தால் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப மாட்டார்கள். அபாயம் மிக்க கல்வியை விடப் பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் உயிர் மேலானதாக இருக்கும். இது தவிர்க்க முடியாத ஒன்று.

அபாயம் நிறைந்த இந்த நிலையால் முல்லை மாவட்டத்தில் முழுமையான கல்வியும் ஸதம்பிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அளம்பிலில் ஒரு மாணவர், தனது இரண்டு கால்களையும் இழந்திருக்கிறார்.

வான் தாக்குதல்களாலும் கடற்படைத் தாக்குதல்களாலும் அந்தப்பகுதிப் பாடசாலைகளின் கல்வி மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

புதுக்குடியிருப்புப் பகுதியில் கடந்த வாரமும், நேற்றும் நடைபெற்ற சம்பவங்களால் இந்தப் பகுதிப் பாடசாலைகளிலும் கல்வி மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.

கைவேலி கணேசா பாடசாலையில் நடைபெற்ற தாக்குதல்களால் தற்போது அங்கு மாணவர்கள் வரவு மிகவும் மோசமாகக் குறைந்துள்ளது. இத்தகைய நெருக்கடி நிலை காரணமாகப் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஆகவே எமது மாணவர்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு அனைத்துலக நிறுவனங்கள் கண்காணிப்பாளர்கள் அரசின் இத்தகையத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். அந்த வகையில் எமது பிரதேசத்தில் பல்வேறு செயற்பாடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் ஏனைய நிறுவனங்களிற்கும் பாடசாலை அதிபர்களால் தரப்பட்ட மனுவை நான் கையளிக்கின்றேன். மாவட்டத்தில் கல்வி கற்கும் 20 ஆயிரம் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் பாடசாலைச் செயற்பாடுகளிற்குப் பாதுகாப்பு வழங்க உறுதி தர வேண்டும் என்றார் அவர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home