Monday, September 24, 2007

போரை முடிவுக்கு கொண்டுவர அவுஸ்திரேலியா, நியூசிலாந்து வலியுறுத்தல்

திங்கள் 24-09-2007

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு நாடுகளும் இதனை வலியுறுத்தின.

இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நியூசிலாந்து பிரதிநிதி ஆமி லௌரென்சன் பேசியதாவது:

இலங்கையின் தற்போதைய மோதல்களால் பாரிய மனித உரிமை மீறல்கள் நிகழ்வது கவலைக்குரியதாக உள்ளது. இருதரப்பும் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு அமைதிப் பேச்சுக்களுக்கு திரும்ப வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையர் லூய்ஸ் ஆர்பர் அடுத்த மாதம் இலங்கைக்குச் செல்வதை நியூசிலாந்து முழுமையாக ஆதரிக்கிறது. இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கான அனைத்துலகத்தின் முயற்சிகளை நாம் ஏற்கிறோம் என்றார் அவர்.

அவுஸ்திரேலியாவின் பிரதிநிதி கை ஓப்ரெய்ன் பேசியதாவது:

இலங்கையின் இனமோதல் அதிகரித்து வருவதால் அதிக அளவிலான இடப்பெயர்வு நிகழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கவலை அளிக்கிறது. அனைத்து வகையான சிறார் கடத்தல் மற்றும் படையணிகளில் சேர்ப்பை அனைத்துத் தரப்பும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளாலும் கருணா குழுவினராலும் சிறார்கள் தொடர்ந்தும் படையணிகளில் சேர்க்கப்படுவதாக அறிக்கைகள் வெளியாவது கவலைக்குரியது என்றார் அவர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home