Saturday, March 31, 2007

சிவாஜி பாட்டு லீக்: ரஹ்மான் மீது ஷங்கர் டவுட்?

சனி 31-03-2007

சிவாஜி படத்தின் 3 சூப்பர் ஹிட் பாடல்கள், அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பே லீக் ஆகி இணைய தளத்தில் வெளியான விவகாரத்தில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இயக்குநர் ஷங்கர் சந்தேகப்படுகிறாராம்.ஏண்டா இந்தப் படத்தைத் தயாரித்தோம் என்று ஏவி.எம். சரவணன் நொந்து போகும் அளவுக்கு சிவாஜி பல தலைவலிகளைக் கொடுத்து வருகிறது.

படத்தின் ஸ்டில்கள் குண்டக்க மண்டக்க வெளியாகி முதலில் டென்ஷன் கொடுத்தது.அடுத்து படத்தின் விற்பனை தொடர்பாக சகட்டு மேனிக்குத் தகவல்கள் வெளியாகி சரவணனை டென்ஷன்படுத்தியது. இப்போது சிவாஜி படத்தின் 3 பாடல்கள் எம்.பி.3 வடிவில் வெளியாகி கலக்கி எடுத்துள்ளது. பாடல்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீஸாகும் முன்பே 3 பாடல்கள் வெளியாகி விட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. யார் இதற்கு காரணம், ஹூ இஸ் தி பிளாக் ஷீப் என்ற கேள்வி ஏவி.எம். ஸ்டூடியோவுக்குள் முட்டி மோதி எக்கோ அடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இதில் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ரஹ்மானும் அவரது உதவியாளர்களும்தான் பாடல் வெளியானதற்கு முக்கியக் காரணம் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளாராம். ஆனால் இதுகுறித்து ஷங்கரோ அல்லது சரவணனோ, ரஹ்மானிடம் எதுவும் பேசவில்லையாம். ஆனால் இந்த விவகாரம் குறித்து குற்றவாளி யார் என்பதைக் கண்டறியுமாறு சென்னை காவல்துறையை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. ரஹ்மான் மீது ஷங்கருக்கு சந்தேகம் கிளம்பியுள்ளது, திரையலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஜாக்கிரதையாக கையாள ஏவி.எம். நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இல்லாவிட்டால் வேறு பாதையில் பிரச்சினை திசை மாறி விடுமோ என்று அது அஞ்சுகிறது. இன்னொரு கோணத்திலும் இந்த லீக் விவகாரம் அலசப்படுகிறது. அதாவது படத்தின் பாடல் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக ஏவி.எம். நிறுவனம் அறிவித்தவுடன், உலகளாவிய வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு ஆடியோ டிராக்குகளை அனுப்பி வைத்து விட்டனராம். எனவே அங்கிருந்தும் கூட பாடல்கள் லீக் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாம்.

படத்தின் பாடல்கள் முன்கூட்டியே திருட்டுத்தனமாக வெளியாகி விட்டது சிவாஜி யூனிட்டுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் படத்துக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்ற பயமும் தயாரிப்பாளர் தரப்பில் நிலவுகிறது. பாடல்கள் வெளியானது குறித்து ரஜினி கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இந்தப் பிரச்சினை தொடர்பாக இன்னொரு ஷாக் நியூஸ் இது.

கவிஞர் வைரமுத்துவை அமெரிக்காவிலிருந்து ஒருவர் போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம், நீங்கள் பூம்பாவை ஆம்பல் ஆம்பல், புன்னகையோ மையல் மையல் என எழுதியுள்ளீர்களே, அதன் அர்த்தம் என்ன, பாடல் வரிகள் ஆபாசத் தொணியில் இருக்கிறதே என்று கேட்டாராம். அவர் கூறியதைக் கேட்டதும் இந்த பாடல் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று வைரமுத்து ஷாக் ஆகி விட்டாராம். மொத்தத்தில், சிவாஜி பாடல் லீக் விவகாரம் கோலிவுட்டை பெரும் கலக்கு கலக்கி வருகிறது.

இணைய தளங்களில் சிவாஜி பாடல்! அதிர்ச்சியில் உறையும் ஷங்கர் அண் கோ!

சனி 31-03-2007

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரயில் வாங்கி ஓட்டுகிறார் என்றொரு செய்தி பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கிறது. ரயில் வாங்கலாம் தப்பில்லை. அதற்கு தென்னக ரயில்வே மாதிரி வண்ணமும் பூசப்பட வேண்டுமா? என்று கூடவே சர்ச்சைகளும் கிளம்ப ஆரம்பித்தன.

இதுகுறித்து ரஜினியின் மருமகன் தனுஷிடம் கேட்டால், அந்த செய்தியை நானும் படிச்சேன். சிரிப்புதான் வருது. அப்படி எதுவும் அவர் வாங்கியதா எனக்கு தெரியலை என்றார். இப்படிதான் ரஜினி பொண்ணை லவ் பண்றிங்களா என்று மீடியா கேட்டபோதெல்லாம் இல்லையென்று மறுத்தார். அதனால் தனுஷ் சொல்றதை எப்படி நம்புறது என்கிறார்கள் ரயில் செய்தியை நம்புகிற ஜனங்கள்.

இதுகுறித்து ரஜினியே வாய் திறந்தால்தான் உண்டு. அவருக்கோ ஆயிரம் டென்ஷன். சிவாஜி படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா ஏப்ரல் 4-ந் தேதிதான். அதற்குள் சில இணைய தளங்களில் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள் வெளிவந்துவிட்டனவாம். சிலர் அந்த பாடல்களை பிரதியெடுத்து இப்போதே விற்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

இத்தனைக்கும் சிவாஜி படத்தின் ஆடியோ உரிமை ஏ.வி.எம் நிறுவனத்திடமே இருக்கிறது. நிலைமை அப்படியிருக்க, இந்த தில்லுமுல்லு எப்படி நடந்தது? சிவாஜி வட்டாரமே அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறதாம்!

சரி, பாடல்கள் எப்படி? ஷங்கர்-ரஹ்மான் காம்பினேஷன்! சோடை போகுமா? முதல்முறை கேட்கும்போதே மனசை கொள்ளையடிக்குது என்கிறார்கள் கேட்டவர்கள். கொள்ளையடித்து கேட்ட பாடல், ருசிக்காமலா இருக்கும்?

Wednesday, March 7, 2007

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முதல்வர் கருணாநிதி தமிழீழத் தமிழர்களுக்கு வைகுண்டம் காட்டுவாரா?

புதன் 07-03-2007
.
-வே.தங்கவேலு
.
பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியின் காதில் பூ வைக்கிறாரா? அல்லது மன்மோகன் சிங் கருணாநிதி இருவரும் சேர்ந்து எங்களது காதில் பூ வைக்கிறார்களா?இலங்கையின் இறைமை மற்றும் ஆடபுல கட்டுப்பாடுகளுக்கு ஊறு நேராதவகையில் ஒன்றுபட்ட நாட்டில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழ இந்தியா தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசை வற்புறுத்தும் என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகும்.
மேலும் ஸ்ரீலங்காவோடு இந்தியா எந்தவித பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளாது. அழிவு ஆயுதங்களையும் விற்பனை செய்யாது என்ற உறுதி மொழியும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் தமிழகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. இலங்கை சிக்கல் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு எழுதிய கடிதத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவது குறித்து கவலை தெரிவித்து இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். தமிழக முதல்வரின் மடலுக்கு கடந்த சனவரி 3 ஆம் திகதி; பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய பதில் பின்வருமாறு அமைந்திருந்தது. “இலங்கையில் ஏற்பட்டு உள்ள சிக்கல் குறித்து தாங்கள் எழுதியுள்ள கடிதத்தை என் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை, குறிப்பாக பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை மத்திய அரசுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் தங்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்த நான் விரும்புகிறேன்.
தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து இலங்கையில் சந்தித்து வரும் துயரச் சம்பவங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் நாம் அவர்களை ஆதரிக்க முடியாது. இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அமைதியான பேச்சு வார்த்தையின் மூலமே தீர்வு காணவேண்டும் என்கிற மத்திய அரசின் நிலை தொடர்கிறது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. வன்முறையால் அப்பாவிப் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதுகாப்பற்ற நிலைமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பினரும் முன் வரவேண்டுமென மத்திய அரசு வலியுறுத்த விரும்புகிறது.” ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கும் இதே கருத்துப்பட பதில் எழுதப்பட்டிருந்தது.
ஆனால் இந்தியா கடந்த பெப்ரவரி மாதக் கடைசியில் வராக (Varaha) என்ற பாரிய கடலோரக் கண்காணிப்புப் போர்க் கப்பலை (Indian Coast Guard vessel) ஸ்ரீலங்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது. சிறிலங்கா கடற்படையின் 3 ஆவது பெரிய கப்பலாக இந்த வராக போர்க்கப்பல் விளங்கும். இதற்கு முன்னரும் (2000) இந்தியா இதே போன்ற சயூரா வகை கடல் கண்காணிப்புக் கப்பலை வழங்கி இருந்தது நினைவிருக்கலாம். இப்படி இந்தியா ஒரு பாரிய போர்க் கப்பலை ஸ்ரீலங்காவிற்கு வழங்கி இருப்பது ஒரு புறம் முயல்களோடு (தமிழர்கள்) ஓடிக்கொண்டு மறுபுறம் நாய்களோடு (சிங்களவர்கள்) சேர்ந்து வேட்டையாடுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது இவ்வாறிருக்க முதல்வர் கருணாநிதி அண்மையில் வி.புலிகளைச் சாடியும் வி.புலி ஆதரவாளர்களை எச்சரித்தும் இந்திய நலனே தனது நலனென்றும் விடுத்துள்ள அறிக்கை அவர் இலங்கைத் தமிழர் நலனில் உண்மையான - உளப்பூர்வமான - அக்கறை கொண்டுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சென்றகிழமை கோவை பல்கலைக் கழகம் முதல்வர் கருணாநிதிக்கு பாரதியார் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தி இருந்தது. பாரதியார் அக்கிரகாரத்தில் பிறந்தாலும் தன்னைக் கடைசிவரை ஒரு பச்சைத் தமிழனாகவே நினைத்துக் கொண்டவர். தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் மாளாத காதல் கொண்டவர். தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞர். தமிழ்த் தேசியத்துக்கு பள்ளியெழுச்சி; பாடிய முதல் பாவலன். “பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவிலும் பரவி இவ்வெளிய தமிச்சாத்p தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தி கேட்டு “விதியே விதியே என் தமிச்சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ?” என நொந்து பாடியவர். இவற்றையெல்லாம் முதல்வர் கருணாநிதி அறியாதவர் அல்ல. நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.
அண்மைக் காலமாக தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் குரல் கொடுத்து வருவதைக் கண்டு பூரித்துப் போன தமிழர்கள் இருக்கிறார்கள். சென்று ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் க. வீரமணி அவர்கள் தலைமையில் நடந்த தமிழீழ பாதுகாப்புக் கூட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக மற்றும் பாமக கட்சித் தலைவர்கள், தெரிவித்த கருத்தே தனது கருத்து என்று சொல்லியிருந்தார். இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் ஒன்று சேருவதை வறவேற்பதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களை சென்னையில் சந்தித்த பின்னர் தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் பின்வருமாறு கூறியிருந்தார். “இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகியாக மாட்டேன். இலங்கையில் அமைதி நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர இடமளிக்கப்படக் கூடாதென்பதை தமிழகம் வலியுறுத்தும் எனவும் இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்பவேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ, விடுதலைப் புலிகளுக்கோ திமுக அரசோ நானோ ஒரு போதும் எதிரிகளல்ல. இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுபிட்சமாகவும் வாழ்வதைக் காண ஆசைப்படுகின்றேன். அந்த மண்ணில் சமாதானம் விரைவில் மலர வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்.” சொல்வதோடு நில்லாமல் தமிழ்மக்களுக்கு நியாயம் வழங்க நடுவண் அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தமிழர்கள் சிங்கள இனவாதப் படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் நேரில் கண்டுபேச முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்து கொடுத்தார். மிக விரைவில் தமிழர்களுக்கு ஒரு நியாமான தீர்வு கிடைக்கும் என்று கூடச் சொன்னார். இந்தப் பின்னணியில் முதல்வர் கருணாநிதி திமுக முரசொலி ஏட்டில் உடன்பிறப்புக்களுக்கு எழுதிய மடலில் காணப்பட்ட சில கருத்துக்கள் தமிழீழ மக்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்திருக்கிறது. அதுமட்டுமல்ல “இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகியாக மாட்டேன்” என்று உறுதி மொழியைiயும் அய்யத்துள்ளாக்கியுள்ளது.
“தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். தடைபட்ட வி.புலிகளுக்கு எந்த அமைப்பாவது அல்லது கட்சிகளாவது ஆதரவு நல்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என அந்த மடலில் எழுதப்பட்டுள்ளது. இப்படிக் காட்டமாக எழுதியதைப் படித்தவர்கள் எழுதியது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவாக இருக்குமோ என ஒரு கணம் நினைத்திருப்பார்கள். .
கொழும்பில் மருதானையில் பஞ்சிகாவத்தை என்ற பெரிய வீதி இருக்கின்றது. அந்த வீதி நெடுகிலும் உந்து உதிரிப்பாகக் கடைகள் ஏராளம் இருக்கின்றன. இங்கு அலுமினியத் துண்டுகள், உருளைகள் (ball-bearings) மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனையாகின்றன. இவை இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோ அல்லது கடத்திக் கொண்டுவரப்பட்டவை ஆகும். எனவே அவற்றைத் தமிழ்நாட்டில் இருந்து கடத்த வேண்டிய அவசியம் வி.புலிகளுக்கு இல்லை. விடுதலைப் புலிகளைப் பற்றி இட்டுக்கட்டி இல்லாததும் பொல்லாததும் சொல்வதையும் எழுதுவதையும் பார்ப்பனர்களும் பார்ப்பன ஏடுகளும் ஒரு தெய்வீகக் கோட்பாடகவே வைத்திருக்கிறன்றன.
அப்படி எழுதாவிட்டால் அவர்களுக்குப் பத்தியப்படாது. பொழுதும் விடியாது. குறிப்பாக சுப்பிரமணியம் சுவாமி, ஜெயலலிதா ‘துக்ளக் சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து இராம் போன்றோர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எப்போதும் பகைமை பாராட்டி வருகிறார்கள். சில ஆயுதங்களோடு வி.புலிகளின் படகு இந்திய கடல் எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டது வி.புலிகளது எதிர்ப்பாளர்களுக்கு அவல் சாப்பிட்டது போல் ஆகிவிட்டது.
ஜெயலலிதா வி.புலிகள் தமிழ்நாட்டில் ஊடுருவி விட்டார்கள் என்று அறிக்கை விட்டார். அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமியைக் கேட்கவா வேண்டும்? அவரும் அறிக்கை விட்டு தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுவிட்டார். இந்து இராம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகத் தலையங்கம் தீட்டினார். துரும்பைத் தூணாக்கிக் காட்டும் தமிழினத்தின் பரம்பரை எதிரிகளான ஜெயலலிதா, அரசியல் கோமாளி சுப்பிரமணியம் சுவாமி, இந்து இராம் ஆகியோரது அறிக்கைகள், தலையங்கள், செய்திகளைப் படித்து அவற்றின் அடிப்படையில் முதல்வர் கருணாநிதி மடல் தீட்டியுள்ளார். தமிழ்ப் பகைவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.
அப்படித்தான் எழுதுவார்கள். என்பது முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது. பிடிபட்ட படகு தமிழ்நாட்டை நோக்கி வரவில்லை என இந்திய அதிகாரிகளே சொல்லிவிட்டார்கள். அந்தப் படகு இரணதீவில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணம் சென்று கொண்டிருந்த படகாகும். ஸ்ரீPலங்கா கடற்படையைத் தவிர்க்கு முகமாக இந்திய கடல் எல்லைக்குள் அந்தப் படகு சென்று விட்டது. இப்படி நான் சொல்லவில்லை. சென்னை காவல்துறை அதிகாரி (டிஐஜி) முகர்ஜி சொல்லி இருக்கிறார். அலுமினியத் துண்டுகள் ஆயுதங்கள் அல்ல. உருளைகளும் ஆயுதங்கள் அல்ல. இவை விற்பனைக்காக கடத்தல்காரர்களால் காலம் காலமாகக் கடத்தப்படுபவை. இப்போது வி.புலிகளை வேட்டையாடுகிறோம் என்ற திரைக்குப் பின்னால் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கெடுபிடிகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் வீடுகளும் காவல்துறையின் சோதனைக்கு உள்ளாகியுள்ளன. தமிழீழப் போராட்டம் குருதி சிந்திப் போராடும் போராட்டம். அது கிரிக்கெட் பந்து விளையாட்டல்ல. சேர, சோழ, பாண்டிய அரசர்கள் காலத்துக்குப் பின்னர் இப்போதுதான் தமிழர்களுக்கு எனச் சொந்தத் தரைப்படை, கடற்படை வான்படை இருக்கிறது.
சோழரின் புலிக்கொடி காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் கப்பல்கள் இப்போதுதான் மீண்டும் வங்கக் கடலில் பவனி வருகின்றன. பாரதியார் “நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தான் வியப்பெய்தி நன்றாம் என்பர் ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரதத்திலே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்” எனப் பாடியது போல புறநானூற்றில் வீரம் என்றால் ஆகா என்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் அண்டை நாட்டில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதை “வன்முறை. அதனை ஆதரிக்க முடியாது” என்கிறார். அது மட்டுமல்ல தமிழினத்தின் எட்டப்பர்களில் ஒருவரான ஆனந்தசங்கரியை வீட்டுக்கு வரவழைத்து தமிழக முதல்வர் 30 நிமிடங்கள் பேசியுள்ளார்.
ஆனந்தசங்கரி தனி மனிதர். தொண்டரில்லாத கடிதத் தலைப்புக் கட்சியின் தலைவர். சிங்களத் தலைவர்களின் செல்லப்பிள்ளை. இப்படிப்பட்ட ஒருவரை முதல்வர் எப்படிச் சந்தித்துப் பேசலாம்? இதன் மூலம் அவர் தமிழ்மக்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விளைகிறார்? தமிழீழ மீனவர்கள் இன்று நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக ஸ்ரீலங்கா கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
அவர்களது படகுகள் உடைக்கப்படுகின்றன. வலைகள் அழிக்கப்படுகின்றன. அம்மா காலத்தில் அம்மாவும் அய்யா காலத்தில் அய்யாவும் தில்லிக்கு நூற்றக்கணக்கான கடிதம் எழுதினார்கள். பலன்தான் இல்லை. தாக்குதல்கள் தொடர்கின்றன. கன்னடத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தெருவில் தமிழ்ப் பேசினால் கன்னட வெறியர்கள் அவர்களை உதைக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளுக்கு தீ வைத்துக் கொளுத்துகிறார்கள்.
இதைக் கேட்டு எங்கள் நெஞ்சம் பதறுகிறது! முதல்வர் கருணாநிதியோ உரோம் பற்றி எரிகையில் பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் “இந்திய நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என இந்திய தேசியம் பேசுகிறார். வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று சொல்லித்தான் ஆட்சியைப் பிடித்தார்கள். இன்று காலம் மாறிவிட்டது. இந்திய தேசியத்தில் முதல்வர் கருணாநிதி குளிர் காய்கிறார்! கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முதல்வர் கருணாநிதி தமிழீழத் தமிழர்களுக்கு வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்!

Tuesday, March 6, 2007

இந்தோனேஷியா : பூகம்ப பலி 75 ஆக உயர்வு.


நில அதிர்வுகளுக்கு மத்தியில் அடிக்கடி அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்தோனேசிய மக்களை இன்று காலை மீண்டும் ஒரு வலுவான நிலநடுக்கம் தாக்கியது. அந்த நில நடுக்கம் இந் தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள வடக்கு மாகாண தலைநகர் பதங் அருகில் மையம் கொண்டிருந்தது. அந்த நாட்டு நேரப்படி காலை 10.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற கணக்கில் அது பதிவாகி இருந்தது. மிக வலுவான இந்த நில நடுக்கத்தால் தலை நகர் பதங் குலுங்கியது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

சுமத்ரா தீவை புரட்டிப்போடும் வகையில் இந்த நிலநடுக்கம் இருந்ததாக உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்தும் அலுவலகங்களில் இருந்தும் அலறியடித்தப்படி வெளியில் ஓடி வந்தனர். தெருக்களில் திரண்ட மக்கள் பதட்டத்துடன் நடுங்கியபடி நின்றனர்.

இதற்கிடையே நிலநடுக் கத்தால் சுனாமி பேரலைகள் தாக்ககூடும் என்ற பீதி பரவியது. இதனால் மக்கள் உயரமான பகுதிகளுக்கு படை யெடுத்தனர். மக்கள் குடும்பம், குடும்பமாக பதங் நகரை விட்டு வெளியேறியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு பக்கம் மக்கள் ஓட்டம் பிடித்துக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு பக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி நடந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப் பட்டனர்.

மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 1 மணி நேரம் கழித்து பதங் நகர் அருகே மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமத்ரா தீவு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கமும் பதங் நகர் அருகே மையம் கொண்டிருந்ததால் பதங் நகரம் மிக கடுமையாக பாதிக் கப்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் முழுமையாக நொறுங்கி விட்டன. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் செத்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பதங் நகர் அருகில் உள்ள பதுசங்கர்நகரில்தான் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்தது. அந்த நகரில் நில நடுக்கத்துக்கு 75 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. உயிரிழப்புமேலும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பதங், பதுசங்கர் நகர இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பதங்நகர மருத்துவமனைகளுக்கு மற்ற பகுதிகளில் இருந்து டாக்டர்கள் விரைந்துள்ளனர்.

மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுனாமி தாக்காது என்று இந்தோனேசியா அறிவித்த பிறகே சுமத்ரா தீவு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சுமத்ரா தீவில் உருவான நிலநடுக்கம் 420 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் உண ரப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள உயரமான கட்டிடங்கள் பலதடவை குலுங்கின. சில கட்டிடங்கள் அங்கும் இங்குமாக தொட்டில் போல ஆடின.

இதனால் சிங்கப்பூர், மலேசியாவில் மக்களிடம் பதட்டம் ஏற்பட்டது. வீடு, கட்டி டங்களில் இருந்து வெளியேறி தெருக்களில் நின்றனர்.

இந்த நில அதிர்வு காரணமாக சிங்கப்பூர், மலேசியாவில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. சுமார் 10 நிமிடங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.

Monday, March 5, 2007

பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள் , நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள் - வியாசன்

திங்கள் 05-03-2007

சுற்றிச் சுழன்றேறி வருகின்றன
நரமாமிச உண்ணிகள்.
சம்பூரைத் தின்று சமித்து,
வாகரையை வளைத்து முடித்து,
குடாநாட்டின் குரல்வளையை நெரித்தபடி
முகமாலையின் முன்னரணேற முயல்கின்றன
உண்ணிகள்.

வன்னிதான் உண்ணிகளின் ‘நம்பர்வண்’ இலக்கு
பாதைகளை அடைத்துப் பட்டினி போடுவதால்
விடுதலை இதயங்களின் துடிப்பை நிறுத்தலாமென
உண்ணிகளை ஏவுவோர் உறுதியாக நம்புகின்றனர்.
கொட்டிக் குவிக்கும் ஆயுதங்களை மட்டுமல்ல
பட்டினியையும் சேர்த்தே பயன்படுத்தப்போகின்றனர்.
விடுதலையின் விகர்சிப்பை விழுத்துவதற்கு
பட்டினியையும் பயன்படுத்திய சிலர்
முன்னர் வெற்றியும் கண்டுள்ளனர்.

இதைக் கவனத்திலெடுக்காது கண்துயில்வோமெனில்
கையேந்தியபடி கரையொதுங்கவும் நேரலாம்.
ஒரு கையிற் துப்பாக்கியும்
மறு கையில் மண்வெட்டியையும்
வியட்னாமியர் ஏந்தியது விளையாட்டுக்கல்ல.
குண்டுவீச்சுக்குக் கீழும்
வியட்னாமில் குலைதள்ளின வாழைகள்
ஒருபோதும் வேலைநிறுத்தம் செய்யவில்லை வயல்கள்.
போருக்கு உழைத்த பொழுதுகள்போக
ஊணுக்கும் உழைத்தனர் அவர்கள்
இன்று விடுதலை வயலை உழுகின்றனர் செருக்கோடு.
வீழமாட்டோமெனும் நம்பிக்கை மட்டுமல்ல
ஆழமான அடித்தளமும் வேண்டும் விடுதலைக்கு.
தன்னைத்தானே தாங்கும் வலுவுள்ளவனே
எந்தப் புயலிலும் இடிந்துவிழமாட்டான்.

உடனே உழுது பயிரிடத்தொடங்கு,
உன்னால் முடிந்த உரமெறிந்துகொள்,
அறுவடை செய்,
அவதானமாகப் பேண்,
கத்தரியை வற்றலாக்கு,
கிழங்கை ஒடியலாக்கு,
கீரிமீனைக் கருவாடாக்கு,
கேக்கை நிறுத்து,
பேக்கரியில் பாண்மட்டும் போடு,
வீட்டுக்குப் பத்து மரவள்ளி நடு,
வேலியில் முல்லையும், முசுட்டையும் படரவிடு,
நெல்லை அட்டாளையில் அடுக்கு,
அன்றாடத் தேவைக்கு மட்டும் அரிசியாக்கு,
நாளை வந்தவனிடம் கையேந்துவதிலும் பார்க்க
இது இழிவானதல்ல.

வியாசனுக்கு மேற்கூரை விழுந்துவிட்டதென்று
என்னை விசித்திரமாகப் பாராதே.
பெரும்போர் மூளும் தருணத்தில்
பிள்ளைகள் கஞ்சியாவது குடிக்கவேண்டாமா?
போரைத் தாங்கும் புலிகளிடமே
இந்தப் பாரத்தையும் சுமத்திவிடாதே
எழுந்துபோ ஏதேனும் செய்.
வீட்டுக்கொருவரை விடுதலைச்சேனை கேட்பது
சும்மா விளையாடுவதற்கல்ல.
அள்ளிச் சென்று சாவுக்குக் கொடுக்கவுமல்ல.
இப்போது பெறும் பலத்திற்தான்
எதிர்காலமே இருக்கிறது.

உலகம் ஓடிவரும்
உனக்கு ஒத்தாசை செய்யுமென நம்பாதே
அவர்கள் பலத்தோடிருந்தால் மதிப்பார்கள்
நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்
இதுதான் உலகத்தின் புதிய ஒழுங்காற்றுகை.
ஒன்றை மட்டும் நெஞ்சில் எழுதிவை
வென்றால் நாங்கள் அரியணையிலிருப்போம்
தோற்றால் தொல்பொருளகத்திற் கிடப்போம்
மூசியெழுவதைத் தவிர வேறுவழியில்லை இப்போது.
கேட்டு யாசிப்பதல்ல விடுதலைக்கான பலம்
அது ஈழத்தமிழர் எல்லோரினதும் காலக்கடமை.

தினசரி தமிழர் வீடுகளிற் சாவு,
நாளாந்தம் காணவில்லையேயெனும் கதறல்,
பெண்களைப் பூச்சிகளாக நசுக்கும் பெருந்துயர்,
திசையளந்து வருகிறது திக்கற்றோர்குரல்
நீ மட்டும் தப்பியோட எத்தனிப்பது குற்றமில்லையா?
ஒற்றை வரலாறு கூட அற்றவராக இருந்தோம்
இந்நாள் வரையும்.
இனியும் வேண்டாம் இந்த இழிவு
இனியும் வேண்டாம் இந்த அழிவு.
ஒன்றில் புலியாக எழு
அன்றேல் சருகாக விழு
சோற்றுப் பிண்டமாகச் சும்மா தெருவிற் திரியாதே.
இந்த மண்ணிற் பிறந்ததற்காகவே
மரங்கள் காயப்படுகின்றன,
மாடுகள் மரணிக்கின்றன,
தெருக்கள் சிதைக்கப்படுகின்றன
மண்ணுக்குரிய மனிதன் மட்டும்
மறைந்து திரிகின்றான்.

போதும் போர்வையை மடித்துவை
விழிதிறந்து வெளியேவா.
உண்ணிகளுடன் சேர்ந்து பெருகுகின்றன
ஒட்டுண்ணிகள்.

பெற்றதாயையே ஏறிமிதிக்கின்றன பேய்கள்
எல்லாக் கூத்துக்களுக்கும் இந்தமண் அரங்காகிவிட்டது.
இன்றைய பொழுதை எடுக்காமலும்
நாளைய பொழுதைப் பிடிக்காமலும்
சனிபகவானுக்கு எள்ளெண்ணை எரிப்பதற்கு
இது திருநள்ளாறு அல்ல
தமிழீழம்.

இங்கே பிறந்ததுக்கும்
இருந்ததுக்கும்
நாளை இறப்பதற்கும் கூட ஒரு வரலாறு வேண்டும்.
எமது விடுதலை என்பது எமக்கானதல்ல
அது அடுத்த தலைமுறைக்கானது.
கையிலுள்ள ‘காட்ஸ்’சை வைத்து
‘கம்மாரிஸ்’ அடிப்போம்
நாளை நமதென்ற நம்பிக்கையில்.
ஆழக்கடலுக்கு அப்பாற்தான் அக்கரை கிடக்கிறது
நீந்தப் புறப்பட்டால் நீ கரையடைவாய்
இல்லையே இக்கரையிற் கிடந்தே
இல்லாமற் போவாய்.
பேசிப்பேசி பயனற்றதாகிக்
கழிந்துபோனது காலம்.

ஊதி ஊதி நெருப்புலை மூட்டியபடி
உள்ளான் எம்தலைவன்.
வருவாயெனும் நம்பிக்கையிற் காத்திருக்கிறது
வாசலின் வல்லமை
என்ன செய்யும் உத்தேசம் உனக்கு?
தீயாயெழுந்து திரிவோமெனிலோ
திசைகள் கைகட்டும் - அட
தெருநாயெனவே திரிவோமெனிலோ
எறும்பும் தலைகுட்டும்
சாவே வரினும் தளராதிருந்தால்
வாழ்வாய் அதுமாறும் - எம்
தாயகம் மீட்கும் போரிடை வீழ்ந்தால்
தலைமுறை எமையேந்தும்.


நன்றி: விடுதலைப் புலிகள், மாசி 2007

யாழ்பாணத்தில் வாகன விபத்தில் இரு இராணுவம் பலி.

திங்கள் 05-03-2007

கடந்த சனிக்கிழமை இரவு புன்னாலைக்கட்டுவன் குறும்பைசிட்டிப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் தொடரணியின் ஒரு அங்கமாக பயணித்த வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மல்லாகம் நீதிபதி திருமதி. சறோஜினி இளங்கோவன் சென்று பார்வையிட்டுள்ளார். இராணுவத் தொடரிணி கிளைமோர் அச்சத்தில் வேகமாக பயணித்ததில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவமானது ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது நடைபெற்றுள்ளது.

நீதிபதி உடலங்களை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் பிரேதபரிசோதனைக்காக கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இரு கருணா கூலிக்குழு உறுப்பினர் காயம்.

திங்கள் 05-03-2007

நேற்று ஞாயிறு இரவு 7.05 மணியளவில் மட்டக்களப்பு மயிலம்பவே சிறீலங்கா இராணுவ முகாமிற்கு அடுத்திருக்கின்ற திருமலைவீதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருகருணா கூலிக்குழு உறுப்பினர்களும் மற்றும் அச்சமயம் பாடசாலை கட்டிடத்திற்கு அருகில் நின்ற நான்கு இடம்பெயர்ந்த பொதுமக்களும் காயமமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் ஆறுவரும் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கூலிக்குழு முகாமானது சிறீலங்கா இராணுவமுகாமிற்கு அப்பால் 100 மீற்றர் தொலைவில் ஒரு வீட்டில் இருந்ததாகவும் 15நிமிடநேர தாக்குதலில் அது முற்றாக தகர்க்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

சிறீலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சுக்களுக்கு அஞ்சி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பொதுமக்களில் ஒரு பெண்ணும் மற்றும் மூவருமே காயமடைந்ததாக தெரியவருகிறது

Sunday, March 4, 2007

அமைதிக்கு உதவாத அவலம் விளைவிக்கும் போக்கு.

ஞாயிறு 04-03-2007
யாழ். குடாநாட்டில் இளம் தலைமுறையினர் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இலக்கு வைத்துக் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் பெரும் பீதியையும் அச்சத்தையும் பதற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.
அரசாங்கத்தின் அரச படைகளின்கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ். குடாநாட்டில் மனிதாபிமானமே இல்லாத ஈவிரக்கமற்ற கொடுமைகள் கட்டுமட்டில்லாமல் அரங்கேறிவருகின்றன.

"புலிப் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெற்றிகொள்ளுதல்' என்ற இராணுவப் போக்கிற்கு கொழும்பு அரசு காட்டிய "பச்சைக் கொடி' யின் விளைவுகளை யாழ். குடாநாடு இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றது என்று குடாநாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகிற்கே தெரிந்த உண்மை.

"சமாதானத்துக்கான யுத்தம்' என்ற தமது விநோதக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்க முயன்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அதனடிப் படையில் மிக மோசமான, மிகக் கொடூரமான, சரித்திரத்தில் முன்னெப்போதும் இல்லாத பயங்கரப் போரை தமிழர் தாயகத்தின் மீது தொடுத்தார். பேரழிவுகளையும் பெரு நாசங்களையும் தமிழர் தாயகம் அதனால் எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. ஆனால், ஜனாதிபதி சந்திரிகாவின் சமாதானத்துக்கான போர் அவருக்கோ அவரது சிங்கள தேசத்திற்கோ சமாதானத்தையும் தரவில்லை; அமைதியையும் தரவில்லை; நிம்மதியையும் தரவில்லை; வெற்றியையும் தரவில்லை.

"சமாதானத்திற்கான யுத்தம்' மூலம் சமாதானத்திற்கான வாய்ப்புக்களைத் தொலைத்ததைத் தவிர வேறு நற்பயன் ஏதும் சந்திரிகா அரசுக்குக் கிட்டவில்லை. கிஞ்சித்தும் எதிர்பாராத இராணுவத் தோல்விகளையும் சந்தித்து, சமாதான முயற்சிகளையும் முன்னெடுக்கமுடியாமல் யுத்தத்தையும் தீவிரப்படுத்தமுடியாமல் "இருதலைக் கொள்ளி எறும்பு' போன்ற நெருக்கடி நிலைக்குள் சிக்கியிருந்தது அவரது அரசு.

எடுத்த எடுப்பில் அவரது "சமாதானத்துக்கான யுத்தம்' தந்த சில வெற்றிகள் திருப்திகள், அந்தச் சகதிக்குள் நிரந்தரமாகவே அவரது அரசை மூழ்கவைத்து அமைதிவழிப் பாதைக்கு மீளமுடியாத நிலைக்குத் தள்ளிற்று.

அதேபோன்ற ஓர் கோட்பாட்டையே கருத்தியல் சிந்தனையையே தமிழர் தாயகத்தில் இப்போது கட்டவிழ்த்துவிட்டு நடைமுறைப்படுத்த எத்தனிக்கிறது மஹிந்தரின் அரசு.

இராணுவச் சிந்தனைப் போக்காளர்களின் கருத்தாக்கத்தில் சிக்கிய சந்திரிகா அரசு எவ்வாறு இராணுவ முனைப்புப் போக்கின்மூலம் சமாதானத்தை எட்டலாம் என்று கனவுகண்டதோ அதேபோன்று "ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் என்ற பயங்கரவாதத்தை பதில் பயங்கரவாதத்தால் வெற்றி கொள்ளலாம்' என்ற இராணுவப் போக்காளர்களின் மாயைச் சிந்தனை வலையில் சிக்கி நிற்கிறது மஹிந்தரின் இந்த அரசு.

சந்திரிகாவின் "சமாதானத்துக்கான யுத்தத்தின்' ஆரம்பத்தில் சந்திரிகா அரசுக்கு சில இராணுவ வெற்றிகளும், திருப்திகளும் கிட்டியமை போல, இப்போது மஹிந்தரின் அரசின் "பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெல்லுதல்' என்ற கோட்பாட்டிலும் ஆரம்ப வெற்றிகள் சில மஹிந்தரின் அரசுக்குக் கிட்டாமல் இல்லை.

ஆனால், அது நிரந்தரப் பலன்தருமா என்பதே கேள்வி. இந்த மோசமான கொடூரமான படு பயங்கரமான அழிவுச் சித்தாந்தத்தின் விளைவும், பெறுபேறும் எப்படி அமையும் என்பது குறித்து உருப்படியான சிந்தனைத் தெளிவோ, தெளிவான தீர்க்கதரிசனமோ இல்லாமல் அது முன்னெடுக்கப்படுவதால், விதைத்தவற்றையே வினையாகவும், விளைவாகவும் அறுக்கவேண்டி நேரலாம். முந்திய பாடத்திலிருந்து உணரலாம்.

ஈழத்தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டம் அதன் ஆரம்ப காலகட்டத்தில் சுமார் இரண்டரை தசாப்தகாலம் காந்திய வழியில், அஹிம்சைப் பாதையில், சாத்வீக முறையில் நெறிப்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டது.

காந்திய நெறியின் உயரிய விழுமியங்களைப் புரிந்துகொள்ளாத பேரினவாதம், அதனை அரச பயங்கரவாதம் மூலம் பலாத்காரம் மூலம் அடக்கி ஒடுக்க முயன்றது. அத்தகைய கொடூரப் போக்கின் விளைவாகவே தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதம் தாங்கிய எதிர்ப்புப் போராட்டமாக வடிவெடுத்தது.

இந்தத் தாற்பரியத்தை காரண, காரியத்தை புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள விரும்பாத தென்னிலங்கை மீண்டும் மீண்டும் அதே வழியில் தவறிழைக்க முனைப்புடன் முயல்கிறது.

சட்டரீதியான அரசாக உலகின்முன் தன்னைக் காட்டிக்கொள்ளும் பிரகடனப்படுத்திக்கொள்ளும் கொழும்பு அரசு, தமிழர் தாயகத்தில் சட்டமுறையற்ற செயல்வடிவம் கொண்ட ஒரு போரியல் வடிவத்தை ஏவிவிட்டிருக்கின்றது.

மரணங்களும், படுகொலைகளும், கோர வன்முறைகளும் இனந்தெரியாத தரப்புகளினால் புரியப்படுகின்றன எனக் கூறப்படுவதற்கு அந்த வன்முறைகள், கொலைகள் போன்றவை தொடர்பாக உரிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக இருக்கலாம். மனித உரிமை அமைப்புகளையும், சர்வதேச சமூகத்தையும், நீதியின் பாற்பட்ட செயற்பாடுகளையும், நீதிமன்றங்களையும் ஏமாளியாக்க இவ்வாறு சாட்சியங்களற்ற வகையில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அராஜகம் பயங்கரவாதம் உதவலாம்.

ஆனால், மக்களின் மனதை வெல்ல அவை உதவமாட்டா. அதற்கு மாறாக இத்தகைய வன்முறைக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழவைக்கும் பற்றுறுதியையும், உணர்வெழுச்சியையுமே அவை மக்களுக்குத் தரும். அதனால், வினை விதைத்தவர்களுக்கு எதிராகவே விளைவு மோசமாகக் கிளம்பும் என்பது யதார்த்தம். உலக சரித்திரம் தந்த பாடமும் அதுவே.

தமிழர் தாயகத்தை வன்முறைப் புயலில் சிக்க வைப்பதன் மூலம் அமைதி பிறக்காது. இலங்கைத் தீவு முழுவதும் பரவவே அது வழிசெய்யும். இதுவே மெய்யுண்மை நிலையாகும்.

Uthayan

Saturday, March 3, 2007

சடுதியான மாற்றங்கள் நிகழப்போகின்றன - நாம் எமது தேசத்தினை பிரகடனப்படுத்தும்போது அதனை அங்கீகரியுங்கள்.

சனி 03-03-2007
தமிழ் நாட்டு மக்கள் எமக்கு உதவும் வழிகள் இவைதான்.
1. அங்கேயுள்ள எமது மனிதர்களை மதியுங்கள். மனிதர்களாய்.
2. ஈழத்தமிழர்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவுகளை இந்திய அரசு
எடுக்காமல் முடிந்தவரை தடுத்து நிறுத்த முயலுங்கள்.
3. நாம் எமது தேசத்தினை பிரகடனப்படுத்தும்போது அதனை அங்கீகரியுங்கள். இந்திய அரசின், உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெற்றுத்தருவதற்கான அழுத்தங்களை மக்கள் கூட்டமாக வழங்குங்கள்.

வரலாற்றின் ஓட்டத்தின் குறித்த காட்சியின் சாட்சிகளாய் நிற்கிறோம். அவரவர் அரசியல் கடமைகளை உணர்ந்தாகவேண்டும்.


அறிவுமதியின் வலி

"இந்தியாவின் அரசியல் நிலைப்பாடுகளில் தமிழ்நாடு பெரிதாக எந்தத் தாக்கத்தினையும் சாதித்துவிட முடியாது. ஆனால் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடிய எந்த முடிவையும் இந்தியாவால் எடுக்க முடியாது"

இது தற்போது விடுதலைப்புலிகளின் தலைமையில் நிகழும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுக்கட்டத்தில் பலரும் பேசும் ஒரு பிரபல சமன்பாடு.

ஆரம்பத்திலிருந்தே மக்களின் அடிப்படைத்தேவைகளை, முரண்பாடுகளை, உரிமைப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மக்கள் நிலைப்போராட்டமாகவன்றி, சூழ்ச்சிகளாலும் சதிவேலைகளாலும் திரைமறைவு அரசியலாலும் அவற்றையெல்லாம் மறைத்து, சோடித்துக்குக்கட்டும் உணர்வெழுகைக் கதையாடல்களாலும் கட்டமைக்கப்பட்டது தமிழீழ விடுதலைப்போராட்டம்.

இன்றும் அது அப்படித்தான்.

இறுதி இலக்காக "தமிழீழம்" என்பதை வைத்துக்கொண்டு அந்த ஒன்றை மட்டுமே இலக்காகக்கொண்டு கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் அந்த இலக்கை நோக்கிய பயணத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நகர்கிறது இந்தப்போராட்டம். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் நிகழ்ந்த அநியாய இழப்புக்களையும் ஊதாரித்தனமான உயிர், பொருள், இராஜதந்திர செலவுகளையும் இலக்கை அடைதல் ஒன்றே நியாயப்படுத்திவிடும் என நம்பிக்கொண்டு இந்தப்போராட்டம் பயணப்படுகிறது.

இந்த முறைவழியை ஏற்றுக்கொள்ளுகிறோமோ அன்றி எதிர்க்கிறோமோ என்பதல்ல இங்கே பிரச்சினை.

இந்த உயிர்ப்பான யதார்த்தத்தின் முப்பரிமாணத்தோற்றத்தினை புரிந்துகொண்டு அங்கே நாம் வகிக்கவேண்டிய அரசியல் வகிபாகத்தினை உணர்ந்து செயற்படுகிறோமா என்பதில் தான் கவனமாக இருக்கவேண்டும் என தனிப்பட நம்புகிறேன்.

இந்த பின்னணியில் தமிழ்நாட்டுடனான எமது அரசியல் தொடர்பாடல் மிக முக்கியமானது.

தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் எந்த அரசியல் முடிவையும் இந்தியா எடுக்காது என திடமாக நம்புகிற அரசியல் ஆய்வாளர்களைக்கொண்ட எமது தரப்பு அந்தத் தமிழ்நாட்டை ஆழ்ந்த அதிர்சிக்குள்ளாக்கும் முடிவை ஒருகாலத்தில் எடுத்தது. அதன் விளைவாக பாரியளவான விலையையும் கொடுத்தது.

அந்த கவலையின் அடிப்படையில்தான் "இந்த சர்வதேச சமூகம் என்றால் யார் மச்சான்" என்ற என் முந்தைய வலைப்பதிவில் உலகம்பூராக போட்டோ காட்டுவதிலும் பார்க்க தமிழ்நாட்டில் ஒரு போஸ்டர் ஒட்டுவது மிகுந்த பயன்ளிக்கும் என்ற என் கருத்தை பகிர்ந்துகொண்டிருந்தேன்.

தற்போது தமிழ்நாட்டில் ஒருவித அரசியல் அக்கறை அலை எழுவதுபோன்ற தோற்றம் ஏற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

விடுதலைப்புலிகள் பற்றி முடிந்தவரை பேசாமல் தவிர்த்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை பேசுபொருளாக்கிக்கொள்வது இந்த அக்கறை அலையின் இன்றைய செல்நெறி.

உணர்வை எழுப்பும் கதையாடல்களைத்தாண்டி, ஈழத்தமிழ் மக்கள் பற்றிய உண்மையான அக்கறை எவ்வளவு தூரம் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது என்கிற கேள்வியை அறிவுமதியின் "வலி" என்கிற சிறு நூல் எழுப்ப முயன்றிருக்கிறது.

---

இந்தியா நோக்கி உயிரைப்பணயம் வைத்து ஓடும் ஈழத்தமிழ் மனிதர்களுக்கு பல்வேறு நோக்கங்கள் உண்டு.

வெளிநாட்டுக்காசு கிடைக்க வழியற்ற அடிமட்ட மனிதர்களே பெரும்பாலும் இந்த முடிவை எடுக்கிறார்கள்.

அவர்களது தேவை ஒரு வேலைவாய்ப்பாகவும் கூட இருக்கலாம்.

---

தமிழ்நாட்டின் தமிழ் மனிதர்கள் தம் கண்முன்னால் காணக்கூடிய ரத்தமும் சதையுமான ஈழத்தமிழ் மக்கள் இந்த அகதிகள் தான்.

தமிழ் நாட்டு அரசினதும் மக்களினது உணர்வு பூர்வமான தமிழீழ ஆதரவின் உரைகல்லும் இந்த மக்கள் தான்.

---

அறிவுமதியின் "வலி" எழுப்பும் கேள்விக்கு முன்னால் தமிழின உணர்வு, தேசிய உணர்வு எல்லாம் வடிந்து இன்னுமொரு சர்வதேசப்பொதுவான அரசியல் எஞ்சுகிறது.

மலையகத்திலிருந்து அடிபட்டு வன்னியில் குடியேறிய மனிதர்களுக்கு "தோட்டக்காட்டான்' வசை.
தொண்ணூறுகளில் திருக்கோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்தை தாய்மண்ணாய் நினைத்து ஓடிய என் அயலவர்கள் தண்ணீரைத்தொட அனுமதிக்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு துரோகிகளே விளிப்பு.

இந்த அரசியலின் தொடர்ச்சி ஈழ மனிதர்கள் பற்றிய தமிழ்நாட்டின் நடத்தையில் வெளிப்படுகிறது.

---

பிறந்த வீட்டில்
கறுப்பி

அண்டை நாட்டில்
சிலோன் அகதிப்பொண்ணு

இலங்கை மத்தியில்
"தெமள"

வடக்கில்
கிழக்கச்சி

மீன்பாடும் கிழக்கில்
நானோர் மலைக்காரி

மலையில்
மூதூர்க் காரியாக்கும்

ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா!
பழையபடி நான் கறுப்பியானேன்


-ஆழியாள்
(துவிதம்)

---

அறிவுமதியின் வலி தொகுப்பில் பொறுக்கியெடுத்த வரிகள் சில,

---

வயசுக்கு வந்த மகள்
தூங்குகிறாள்

இல்லறம்

எங்களைப்
பொறுத்தவரை
இயலாத அறம்

---

அங்கே
அவனா என்று கேட்டு
அடித்தார்கள்
வலிக்கவில்லை

இங்கே
திருடனா என்று கேட்டு
அடிக்கிறார்கள்

வலிக்கிறது.

---

அங்கே
சிங்களத்தில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டினார்கள்
புரிந்தது.

இங்கே
தமிழில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டுகிறார்கள்
புரியவில்லை


---

பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்
போகிறீர்கள்

உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்

---

தமிழில்தான்
விசாரித்தார்கள்

தமிழர்களாய்
இல்லை

---

மன்னாருக்கும்
மண்டபத்துக்கும்
இடையே
இருப்பது
வளைகுடா இல்லை

தமிழர்
சதுக்கம்

---

அங்கே
கேட்டுக் கேள்வி இல்லாமல்
கொன்றார்கள்

இங்கே
கேள்வி கேட்டுக்
கொல்கிறார்கள்

---

படகில்
ஏறினோம்

படகுகளை
விற்று


---

தவறியவர்கள்
மீன்களுக்கு
இரையேனோம்

தப்பித்தவர்கள்
ஏன்களுக்கு
இரையானோம்

---

எங்களால்
இறங்கி
வந்து
கரையேற முடிகிறது

உங்களால்
இரங்கி
வந்து
உரையாட
முடியவில்லை


---

நாட்கணக்காக அரசியல் வகுப்பெடுத்தாலும் புரியாத விடயங்களை கவித்துவமான ஒரு சில வரிகள் புரியவைத்துவிடும்.
அப்படி "புரிய வைக்கக்கூடிய" வரிகள் இந்த தொகுப்பில் இருக்கின்றன.

ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்சினைகளை தமிழ் நாட்டு மக்களுக்கு கவனப்படுத்தும் முயற்சிகள் வளர்த்தெடுக்கப்படவேண்டியன.
ஈழத்தின் அடிமட்டங்களிலிருந்து வரும் மனிதர்கள் அவர்கள்.

அவர்கள் எண்ணிக்கைகளோ சன் ட்டீ வீ யின் செய்திகளோ அல்லர்.

---

நந்தா என்றொரு படம் இவை பற்றி பேசியது.
பாட்டுக்களோடும், பகட்டாகவும்.

அந்த பாட்டுக்களும் பகட்டுமே கடைசியில் எஞ்சியது.

கன்னத்தில் முத்தமிட்டால் சுயநலத்தோடு இந்த பிரச்சினைகளை திரிபுபடுத்தியது.

அறிவுமதி,

இந்த பிரச்சினையை அழகான புட்டி ஒன்றில் அடைத்து உயர்தர மாளிகைகளுக்கு விருந்துகொடுத்துவிட்டார்.

வலி தொகுப்பின் விலை எழுபது இந்திய ரூபாய்கள்.

இந்த வழவழ தாள்களும், அழகான வண்ணப்பட அட்டைகளும் அல்ல இந்த உணர்வூட்டும் வரிகளை காவிச்செல்லவேண்டியவை.

அந்த அகதி மனிதர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், அந்த மனிதர்களோடு உறவாடும் ஆட்களிடம் இது கொண்டு சேர்க்கப்படவேண்டும்.
அந்த வகையில் இந்த புத்தகம் தோற்றுப்போய்விட்டது.

சிறு பிரசுரமாக அறிவுமதி இதனை அச்சிட்டு சேர்க்கப்பட வேண்டியவர்களிடம் கொண்டு சென்று சேர்திருப்பாரானால் அவரது மனிதாபிமானமும், உணர்வுகளும் மதிக்கப்படக்கூடியனவாயிருந்திருக்கும்.

ஈழத்தமிழர் பிரச்சினைகளை அழகான காட்சிப்பொருளாக்கி, கவிதைச்சரக்காக்கி தன் கவிதைகளை தானே கொலை செய்ததுதான் மிச்சம்.

---

சடுதியான மாற்றங்கள் நிகழப்போகின்றன .

தமிழ் நாட்டு மக்கள் எமக்கு உதவும் வழிகள் இவைதான்.

1. அங்கேயுள்ள எமது மனிதர்களை மதியுங்கள். மனிதர்களாய்.

2. ஈழத்தமிழர்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவுகளை இந்திய அரசு எடுக்காமல் முடிந்தவரை தடுத்து நிறுத்த முயலுங்கள்.

3. நாம் எமது தேசத்தினை பிரகடனப்படுத்தும்போது அதனை அங்கீகரியுங்கள். இந்திய அரசின், உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெற்றுத்தருவதற்கான அழுத்தங்களை மக்கள் கூட்டமாக வழங்குங்கள்.


வரலாற்றின் ஓட்டத்தின் குறித்த காட்சியின் சாட்சிகளாய் நிற்கிறோம். அவரவர் அரசியல் கடமைகளை உணர்ந்தாகவேண்டும்.

-Mauran

Friday, March 2, 2007

வவுனியாவில் உயர்பாதுகாப்பு பகுதியில் கிளைமோர் தாக்குதல்.

வெள்ளி 02-03-2007

வவுனியா சிறிலங்காப் படையினரின் உயர்பாதுகாப்பு பகுதியான ஈரப்பெரியகுளத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் நிலை மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரப்பெரியகுளம் தொடரூந்து நிலையத்தில் உள்ள சிறிலங்கா காவல்துறையினரின் நிலை மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலின் போது காவல்துறையினரின் நிலையில் காவல்துறையினர் இருவரும் சிங்கள ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் காவல் கடமையில் இருந்தனர்.

இவர்களில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவரும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவருமாக இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா இராணுவத் தலைமையகமும் விமானப் படைத்தளமும் அடங்கிய யோசப் தளத்துக்கு முன்பாக அதிஉயர் பாதுகாப்புக்களுடன் ஈரப்பெரியகுளம் தொடரூந்து நிலையம் உள்ளது. தெற்கு நோக்கிப் பயணிப்பவர்கள் சோதனையிடப்படும் முதன்மைச் சோதனை நிலையம் ஈரப்பெரியகுளத்தில் ஏ-9 சாலையில் அமைந்துள்ளது.

இராஜதந்திரிகளின் உயிராபத்துக்களுக்கு கோத்தபாயவே காரணம்: மங்கள

வெள்ளி 02-03-2007

"கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் தாக்குதல் இடம்பெற்ற பகுதி மிகவும் உயரதிகாரிகள் செல்லக்கூடிய பாதுகாப்பான பகுதியல்ல. எனவே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இராஜதந்திரிகளுக்கு உயிராபத்தை விளைவிக்கக்கூடிய இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்"

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

"அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி விட்டோம் என பாதுகாப்பு அமைச்சரும், செயலாளரும் கூறிக்கொண்டிருக்கும் போது தங்களிடம் நீண்ட தூர ஆட்லறிகள் இருப்பதை விடுதலைப் புலிகள் நிரூபித்திருக்கின்றனர்.

பாதுகாப்பு நிலைமைகள் உறுதியற்ற பிரதேசத்திற்கு எமது நான்கு நட்பு நாடுகளின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றது அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றது. இதன் முழுப் பொறுப்பும் பாதுகாப்பு அமைச்சையே சாரும்.

நாட்டின் தற்போதைய உண்மை நிலை தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இராஜதந்திரிகள் மற்றும் அமைச்சர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலை நாம் கண்டிக்கின்றோம்.

படையினரின் உயிர்த்தியாகங்களின் மத்தியில் இடம்பெற்று வரும் போரானது சிலரின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் படி நடத்தப்படுகின்றது. இது தொடர்பாக நான் ஆழ்ந்த வருத்தமடைகின்றேன். ஊடகங்களின் பரப்புரைகளினால் களத்தின் உண்மை நிலை மறைக்கப்படுகின்றது.

மகிந்தவிற்கு நெருங்கிய நபர் ஒருவர் ஊடகத்துறையின் சுதந்திரத்தில் பல குறுக்கீடுகளை செய்தபடி உள்ளார். அவர்கள் தொடர்பான செய்திகள், நேர்காணல்களை பிரசுரிக்க வேண்டாம் எனவும் தடுத்து வருகின்றார்.

நான் துறைமுகங்கள் சிவில் போக்குவரத்து அமைச்சராக இருந்த சமயத்தில் மகிந்தவின் இந்த நெருங்கிய உறவினர் தமக்கு பிடிக்காத சில பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை கொடுக்க வேண்டாம் எனவும் அதிகாரிகளை மிரட்டியிருக்கின்றார்.

மகிந்தவின் அந்த நெருக்கமானவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே உலகில் ஜனநாயகத்தை ஏற்படுத்த துடிக்கும் அமெரிக்கா, ஜனநாயக அடிப்படைகளில் உள்ள இப்படியான வன்முறைகளை கருத்தில் எடுக்கவேண்டும்.

அந்த நபர் அமெரிக்காவின் கடவுச்சீட்டையும் வைத்திருக்கின்றார். எனவே ஆசியாவிலேயே பழமை வாய்ந்த ஒரு ஜனநாயக நாட்டில் இவரால் மேற்கொள்ளப்படும் ஊடகங்களின் மீதான வன்முறைகள் தொடர்பாக அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும். மேலும் எங்களின் மீது சேறடிப்பதற்காகவே அரச ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சுதந்திரக்கட்சியை ஒரு நடுநிலையான அரசியல் பாதைக்கு கொண்டுவருவதே எனது விருப்பம். அரசுக்கு நான் நிபந்தனைகளை விதிக்கவில்லை அவை வேண்டுகோள்களைத்தான் விடுத்திருக்கின்றேன். சுதந்திரக்கட்சி சர்வாதிகார வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றார் அவர்.

இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமெரிக்க தூதுவர்.

வெள்ளி 02-03-2007

இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற எமது நிலைப்பாடானது கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற தாக்குதலின் மூலம் மாற்றமடையப் போதில்லை என்று சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றோபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பிய பின்னர் இரு நாட்களில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வர்த்தக நிர்வாக முதுமாணிப் பிரிவினரின் பழைய மாணவர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

"தாக்குதலின் பின்னர் கெல உறுமயவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்கத் தூதுவர் இத்தாக்குதலின் மூலம் பாடம் கற்க வேண்டும் எனவும், விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ஒரே வழி இராணுவத்தீர்வு தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது ஒரு வழியல்ல, இராணுவத் தீர்வு இதற்கு வழியாகாது. இரு தரப்புக்களும் ஒன்றாக இணைந்து அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு. சுதந்திரக் கட்சியினால் வழிநடத்தப்படும் அரசு அதன் அதிகாரங்களை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமாக பகிர்ந்தளிக்க வேண்டும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு தர வேண்டும்.

அமைதியை ஏற்படுத்த வேண்டிய அதிகாரம் சிறிலங்காவிடம் உண்டு எனவே அவர்கள் பாரம்பரிய எல்லைக்கோடுகளைத் தாண்டி அதை அடைய வேண்டும். அமைதி முயற்சிகளை முன்னெடுக்க சிறிலங்கா அரசிற்கு நல்ல சந்தர்ப்பம் உள்ளது. எனவே அதனை அடைவதற்கு இரு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மிகத் தீவிரமான அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் தேவை என்பதை சுதந்திரக் கட்சியினால் வழிநடத்தப்படும் அரசு உணர வேண்டும். தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தனது ஆதரவை வழங்க வேண்டும்" என்றார் அவர்.