Monday, May 21, 2007

ஓமந்தை மேற்கில் கிளைமோர் தாக்குதல் - இரு இராணுவம் பலி.

திங்கள் 21-05-2007

இன்று காலை 8.14 மணியளவில் ஓமந்தை மேற்கு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும் சிறீலங்கா இராணுவம் இச்சம்பவமானது இரணை இலுப்பைக்குளம் பகுதியில் காலை 7.15 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை மணலாறு வெலிஓயா முன்னரங்க நிலைகளில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்களின்போது மேலும் இரு படையினர் கொல்லப்ட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த வவுனியா ஓமந்தை முன்னரங்க சோதனைச்சாவடி இன்று காலை 9.15 மணியளவில் மீளவும் பொதுமக்கள் போக்குவரத்திற்கா திறந்துவிடப்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பல் கலைக்கழக பாதுகாப்பு ஊழியருக்கு எச்சரிக்கை: போடப்பட்ட முறைப்பாடு மீளப்பெறப்பட்டது.

திங்கள் 21-05-2007

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களுக்கு நள்ளிரவு நேரம் உந்துருளியில் வரும் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் ஆயுத ஒட்டுக்குழுவினால் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் அத்து மீறிப்பிரவேசித்த இராணுவத்தினர் மற்றும் ஆயுத ஓட்டுக் குழுவினர் பல்கலைக்கழக ஊழியரைத் தாக்கியதுடன் கிழக்கு மாகாண மக்களின் துயர்துடைப்பு நிதி உண்டியலையும் உடைத்து பல லட்சம் ரூபாக்களை கொள்ளையடித்தும் சென்று இருந்தார்கள்.

இது சம்பந்தமாக குறிப்பிட்ட பாதுகாப்புக் கடமையில் இருந்த ஊழியர் இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுசரனையுடன் செய்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் நள்ளிரவு நேரம் குறிப்பிட்ட நபர் கடமையில் இருந்து வேளையில் பல்கலைக்கழக பின்புற மதில் பாய்ந்து உள்ளிறங்கிய குறிப்பி;ட்ட குழுவினர் குறிப்பிட்ட பாதுகாப்பு அலுவலரின் தேசிய அடையாள அட்டை உட்பட அனைத்து அடையாள அட்டையையும் பறித்துக் கொண்டு உடனடியாக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை மீளப் பெறவேண்டும் எனவும் இல்லதுவிட்டால் கொலை செய்யப்படுவார் என்று பயமுறுத்தியதைத் தொடர்ந்து செய்த முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது.

தற்போது பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் இரவில் கடமை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடிக்குள் உள்ளாகி வருகின்றமையால் கடமையைச் செய்ய முடியாத நிலமைக்குள் காணப்படுகின்றார்கள்.

வட பகுதியில் பதற்றமான சூழ்நிலை மீண்டும் போர் வெடிக்கும் அபாயம்.


திங்கள் 21-05-2007

வடபகுதி பிரதேசங்களான யாழ்ப்பாணம், மன்னார்,
வவுனியா மற்றும் வன்னியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னரங்க நிலைகளில் பரஸ்பரம் இருதரப்பும் மேற்கொள்ளும் படைக்குவிப்பு மற்றும் கடும் எறிகணைத் தாக்குதல்கள் என்பன மீண்டும் போர் வெடிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கண்காணிப்பு குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மேலும் கூறியதாவது, .

மன்னார், மடுப் பிரதேசத்தில் இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. இருதரப்பும் பாரிய படை நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, May 3, 2007

மகிந்தவின் பயணங்கள்.

வியாழன் 03-05-2007

-மனோகரன்-

சிறிலங்கா ஜனாதிபதி இந்தவாரம் மீண்டும் நாட்டைவிட்டுப் பயணமாகியிருக்கிறார். இந்தப்பயணத்துக்குப்பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிறிலங்காவைப்பொறுத்தவரையில் அடுத்த ஜூலை மாதம் வரை பல நெருக்கடிகளையும் அழிவுகளையும் சந்திக்கவேண்டிய நிலை தென்படுவதாகவும், நாட்டின் தலைவர்களுக்கு உயிராபத்துகள் ஏற்படக்கூடிய பேரபாயங்கள் உண்டென்றும் சோதிடர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதனால் யாரெல்லாம் தம்மைத்தலைவர்களாகக் கருதினார்களோ அவர்களெல்லாம் நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்போகிறவர்கள் ஒவ்வொரு சாட்டுடனும் ஒவ்வொரு வேலையோடும் போகிறார்கள். அப்படித்தான் எதிர்க்கட்சித்தலைவர் ரணிலும் போயிருக்கிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் போயிருக்கிறார்.

சிங்கள ஆட்சியாளர்கள் தங்களை நம்புவதை விடவும் அதிகமாக சோதிடத்தை நம்புகிறார்கள். இதில் மகிந்த ராஜபக்ஸ இன்னும் கூடுதலான ஈடுபாடுடையவர். அதனால், அவர் நாட்டுக்கு வெளியே நிற்பதையே விரும்புகிறார். அதுதான் தனக்குப்பாதுகாப்பானதெனவும் அவர் கருதுகிறார்.

அடுத்த காரணம் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளால் சம்மதிக்கப்பட்ட நிதி இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, அதனைப்பெற்றுக்கொள்தற்கான ஏற்பாடுகளை இந்தச்சந்தர்ப்பத்தில் கவனிப்பது என்பது.

இன்னொரு காரணம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்காவுக்கு அண்மையில் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்திகளையும் நெருக்கடிகளையும் தணிக்கும் பொருட்டான சூழலை உருவாக்குவது. இந்தப்பிரச்சினைதான் இப்போது சிறிலங்காவுக்குள்ள ஆகப்பெரும்; நெருக்கடியைத்தருவது. இதுதான் முழுஅளவில் யுத்தத்தைச் செய்யவிடாமல் இடைஞ்சலாக இருப்பதும்.

இவ்வாறு தன்னைச்சூழவுள்ள நெருக்கடிகளைத்தணிக்கும் அவசியத்தோடு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. முதலில் சோதிடம் என்ன சொல்லியிருக்கிறது என்பதைவிட அதில் சொல்லப்பட்ட விசயம் என்னவென்று பார்க்க வேண்டும். அடுத்து வரும் மாதங்களில் சிங்களத் தலைவர்களுக்குப் பெருங்கெடுதி என்று சொல்லப்படுகிறது. இதில் என்ன ஆச்சரியமிருக்கமுடியும்?

தமிழர்களின் மீது பெரும்போரைத் தொடுத்துக்கொண்டிருந்தால் தமக்கு ஆபத்துவராதென்று இவர்களால் எப்படிக்கருத முடியும். வினைவிதைத்தவர் வினையை அறுக்கத்தானே வேண்டும். அதிலிருந்து தப்பமுடியுமா.

இதில் சோதிடர்கள் மிகச்சரியான அரசியல் அவதானிகளாக இருக்கிறார்கள். அவர்கள் நடக்கவுளள்ள நிகழ்ச்சிகளை சரியாகத்தான் கணித்துள்ளார்கள் போலுள்ளது.

அடுத்தது, உதவிவழஙகும் நாடுகளால் வாக்களிக்கப்பட்ட நிதி இன்னும் வந்து சேரவில்லை என்பது. இந்த நிதி இன்னும் வழங்கப்படாததற்கு நிறையக்காரணங்களுண்டு.

மேற்குலகத்தின் ஆசீர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்டுவந்த விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைய அரசாங்கம் காரணமாக இருந்தது. இதற்கடுத்தது, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டபோதும் அது முன்வைக்கப்படுவதற்கான எந்த சாத்தியங்களும் காணப்படவில்லை என்பது. இப்படியானதொரு சூழலில் தம்மால் இலங்கைக்கு உதவியாக வழங்கப்படும் நிதி பெறுமதியான முறையில் செலவழிக்கப்படுமா என அந்த நாடுகள் சந்தேகம் கொள்வது. யுத்தம் இல்லாத சூழலில்தான் வழங்கப்படும் நிதி முழமையான பயனைத்தரும் என்றும் இல்லையென்றால் இந்;த நிதி வீணாக அழிவுகளுக்கே செலவழியும் எனவும் காலி மாநாட்டில் உதவும் நாடுகள் தெரிவித்திருந்ததை இங்கே நினைவிற்கொள்ளலாம்.

ஏற்கனவே சுனாமி நிவாரணமாக வழங்கப்பட்ட நிதியை தமிழருக்குரிய வகையில் பொதுவாகப் பகிரவில்லை என்ற குற்றச்சாட்டுண்டு சிறிலங்கா அரசாங்கத்தின்மீது.

போர்ச்சூழல் குறைந்தாலே அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் இந்த உதவிவழங்கும் நாடுகளின் மாநாடு காலியில் நடந்தபோது இந்த நாடுகள் தெரிவித்திருந்தன. அத்துடன் வழங்கப்படும் நிதியும் அந்த நிதியைப்பயன்படுத்தப்படும் விதத்தைப்பொறுத்தே அமையுமென்றும் அதுவும் கட்டம் கட்டமாகவே வழங்கப்படுமென்றும் அங்கே தெரிவிக்கப்பட்டிருந்தது.

உதவிவழங்கும் நாடுகளின் அறிவுறுத்தல்கள் எதனையும் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டு இப்போது காசுக்கு அலைகிறார் மகிந்த ராஜபக்ஸ.

பேச்சுவார்த்தைச்சூழலை இல்லாமற்செய்தது தொடர்பாக மேற்குலகத்துக்கு உள்ளுர சிறிலங்கா அரசின்மீது வருத்தமுண்டு. குறிப்பாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவையும் நோர்வேயையும் பல சந்தர்ப்பங்களில் அது பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது தொடர்பாகவும் மேற்குலகம் அதிருப்தி கொண்டுள்ளது. ஆனால் அதனை வெளிப்படையாக தெரிவிக்கவோ இதைவைத்து அரசாங்கத்துக்கு நேரடியாக அழுத்தம் கொடுக்கவோ மேற்குலகம் தயாராகவில்லை என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். அப்படி கண்டிக்கும்போது சிறிலங்கா சீனாவின் பக்கம் அதிகமாக சாய்ந்து விடும் என்று மேற்குலகம் அஞ்சுகிறது. சிறிதோ பெரிதோ சீனாவுக்கு ஆதரவு வட்டம் பெருகுவது மேற்;குலுகத்துக்குச் சவாலானதே. அதேவேளை அவசரமான முறிவுநிலையை மேற்குலகம் இலங்கையைப்பொறுத்து இப்போது விரும்பவில்லை. முறிவோ விலகலோ ஏற்படாமல் பொறுமையைக்கடைப்பிடித்து பிரச்சினையைக் கையாளலாம் என்றும் அது நம்புகிறதாகத் தெரிகிறது.

இதற்கமையவே இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் பிரச்சினையை அது கையாள்கிறது. மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் வகையில் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பெரும்பிரச்சாரத்தைச் செய்வதன் பின்னணியும் இதுதான்.

மனித உரிமைப்பிரச்சினைகளை ஐரோப்பாவும் அமெரிக்காவும் சமநேரத்தில் கையாள்கின்றன. இப்போது சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியவகையில் இருப்பதும் இந்தப்பிரச்சினைதான். இந்தப்பிரச்சினையை அவை தூக்குவதன் மூலம் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்கிறார்கள் என்ற கண்டனத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். இலங்கையைப்பொறுத்து ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும் வெளிச் சக்திகளுக்கெதிரான கலகக்குரலோடு எப்போதுமிருப்பவை. அதிலும் அவை மேற்குலகத்தை கடுமையான தொனியில் விமர்சிப்பவையும்கூட அதேவேளை அண்மைக்கால சிங்கள அரசியலில் கணிசமான செல்வாக்கை இவை செலுத்துபவையுமாகும்.

சிங்களவரின் இன, மத உணர்வைத்தூண்டும் இந்தச்சக்திகள் குறித்த அவதானத்தை மேற்குலகம் கொண்டுமுள்ளது. இந்த உணர்வுகளைத்தாண்டி மக்களை எந்த வழியிலும் தமக்கெதிராக திசைதிருப்பமுடியும் என்பதால் அது இது தொடர்பாக கவனமாக இருக்கவே விரும்புகிறது.

சமாதானப் பேச்சுவார்த்தையின் அனுசரணையாளராக இருந்த நோர்வேக்கெதிராக ஒரு படிமத்தை இந்தச்சக்திகள் உருவாக்கிவிட்டன. இப்போது சிங்களவர்களைப்பொறுத்தவரையில்; நோர்வே தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது என்றே நம்புகிறார்கள். அப்படியான படிமத்தை ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும் சிங்கள ஊடகங்களும் சிங்கள மக்களிடத்தில் உருவாக்கி விட்டன. இந்த முன்னனுபவத்தின் படியே தொடரும் பிரச்சினைகளைக் கையாளச் சர்வதேச சமூகம் விரும்புகிறது. குறிப்பாக மேற்குலகம்.

சர்வதேச மன்னிப்புச்சபையின் மூலமாக ஐரோப்பாவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூலமாக அமெரிக்காவும் இந்த அழுத்தத்தை சிறிலங்காவுக்கு ஏற்படுத்த முனைகின்றன. மேற்குலக கனவான் மரபின்படியும் நேரடியாக உள்நாட்டரசியலில் தலையிடாமல் மனித உரிமை விவகாரங்களைப் பேசுவதன் மூலமும் மதிப்புமிக்க நிலையை அவை பேணுகின்றன.

ஆக, இவ்வாறான பலமான அழுத்தங்கள், பிரச்சினைகளின் மத்தியில் தனக்கான ஸ்திரத்தன்னையை நிலைநிறுத்த வேண்டுமாயின் அதற்கான பிரயத்தனங்களில் விரும்பியோ விரும்பாமலோ ஜனாதிபதி ஈடுபட்டேயாக வேண்டியுள்ளது.

முதலில் அவர் உதவி நிதியைப்பெற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஜேர்மனியோடு சிறிலங்காவுக்கு அண்மைக்காலத்தில் அக முரண்பாடுகள் அதிகரித்துள்ளன என்பதையும் இங்கே நாம் கவனிக்கலாம். இந்தப்பின்னணியில் மகிந்த ராஜபக்ஸ புதிய உபாயத்தைக் கையாள முற்பட்டிருக்கிறார்.

ஐரோப்பா, அமெரிக்கா அடங்கிய மேற்குலகத்தில் புனித பாப்பரசருக்கு பெரும் மதிப்புண்டு. சிறிலங்கா அரசின்மீது முன்வைக்கப்பட்டுவரும் பல வகையான குற்றச்சாட்டுகளையும் போக்குவதற்கு மகிந்த ராஜபக்ஸ பாப்பரசரைப் பயன்படுத்த முனைகிறார். பாப்பரசரை தனக்குச்சாதகமாக பேச வைப்பதன்மூலம் இதனைச்சாதித்து விடலாம் என்றும் அவர் வலுவாக நம்புகிறார்.

ஆக பாப்பரசரை நேரில் சந்திப்பதன்மூலமும் அவருக்கு தனது அரசு இனப்பிரச்சினையைத்தீர்ப்பதறகாக அரப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சொல்வதன் மூலமும் மனித உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் தான் கூடிய அக்கறையுடன் செயற்படவுள்ளதாக வாககுறுதியளிப்பதனூடாகவும் ஒரு புதிய சாதக நிலையைத் தோற்றுவிக்கலாம் என்பதே அவரின் நிலைப்பாடு.

அத்துடன் புனித பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ற் ஜேர்மனியைச்சேர்ந்தவர் என்பதையும் இங்;கே கவனிக்க வேண்டும்.

இலங்கையில் இனப்பிரச்சினையைத்தீர்பபதற்கு முன் பயங்கரவாதப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியுள்ளதாக மகிந்த ராஜபக்ஸ பாப்ரசரிடம் சொன்னதாவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதப்பிரச்சினை எனபது சர்வதேசப் பிரச்சினை என்றும் அதனால் அந்தப்பிரச்சினைக்கு தாம் தவிர்க்க முடியாமல் முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் பாப்பரசருக்கு (கயிறு விட்டிருக்கிறார்) சொல்லியிருக்கிறார்.

தனது இந்த நடவடிக்கையை சில தரப்புகள் தவறாக புரிந்து கொண்டு மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் தொடருகின்றன என்று பெரிது படுத்;துகின்றன என்றும் அவர் பாப்பரசருக்கு விளக்கமளித்துள்ளார். இப்போது மகிந்த ராஜபக்ஸ விரும்புவது, தான் சொன்னவற்றை பாப்பரசர் ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே. ஆனால் அது எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்ற பிரச்சினையுண்டு.

மகிந்த ராஜபக்ஸ பாப்பரசரைச் சந்திக்கமுன்னரே மனித உரிமைகள் கண்காணிப்பகமும் பிற அமைப்புகளும் பாப்பரசருக்கு உண்மை நிலைமைகளைச்சுட்டிக்காட்டி கடிதங்களையும் தகவல்களையும் அனுப்பிவிட்டன.

இந்த நிலையில் பாப்பரசர் எத்தகைய தெரிவிப்புகளை மேற்கொள்வார் என்றே இப்போது மகிந்த ராஜபக்ஸவும் பிற தரப்பினரும் மக்களும் எதிர்பார்க்கின்றனர். பாப்பரசர் தனக்குச்சாதகமான நிலைப்பாட்டை எடுப்பாராக இருந்தால் ஏற்பட்டிருக்கிற நெருக்கடிகளை ஓரளவுக்குத் தாண்டிவிடலாம் என்றே ராஜபக்ஸ நம்பியிருக்கிறார்.

இதேவேளை கலங்கிய குளத்தில் மீனைப்பிடிக்க இதுதான் சந்தர்ப்பம் என்று மனித உரிமை மீறல்கள் தொடரபாக எழுந்துள்ள சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பலைகளை தனக்கான அரசியல் தளமாக்க முனைகிறார் ரணில். ரணிலுக்குக் கிடைத்துள்ள ஆகக்கூடுதலான துருப்புச்சீட்டு இப்போது இதுமட்டும்தான்.

எனவே ரணில் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இதைப்பெருப்பிக்க முனைகிறார். இதற்காக அவர் இப்போது வெளிநாடுகளில் ஆதரவுதேடும் பயணங்களில் ஈடுபட்டுள்ளார். இது மகிந்தவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற இன்னொரு காரியம். ஆனாலும் மகிந்த இதையெல்லாம் கடந்துதான் ஆகவேண்டும்.

போரைச் செய்வதற்கு அரசாங்கத்துக்குப் பெருமளவு நிதி தேவை. அந்த நிதியை சிறிலங்காவின் தேசிய வருமானத்திலிருந்து ஒருபோதும் பெற்றுக்கொள்ளமுடியாது. எனவே வெளியிலிருந்து பெறப்படுகின்ற நிதியையும் பிற உதவிகளையும் வைத்துத்தான் இதுவரையும் தமிழருக்கெதிரான போரை நடாத்தி வந்தன இதற்குமுன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள். இதே ஆதரவை தானும் பெற்றுவிடலாம் என்றுதான் நினைத்தார் மகிந்தவும். ஆனால் இது இப்போது கொஞ்சம்; சிக்கலாகியிருக்கிறது. மகிந்த உள்நாட்டில் ஆதரவைப்பெற்றுள்ள அளவுக்கு வெளியுலகத்தில் செல்வாக்கைத்தேடவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் சிங்கள மக்களிடம் அவர் போரைச் செய்வதற்கான ஆதரவுத்தளத்தை உறுதியாக்கியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கன்றன. போருக்கான ஆதரவைப் பெற்றுவிட்டால் மனித உரிமைப்பிரச்சினைகளைப்பற்றி எவரும் வாய்திறக்கமாட்டார்கள்.

அப்படியென்றால் அந்தளவுக்கு சர்வதேச ஆதரவைப்பெறுவதில் அவர் அக்கறை கொள்ளவில்லையா அல்லது அதற்குரிய ராஜதந்திர முதிர்ச்சியை அவர் பெறவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மகிந்த சிந்தனையும் ஜே.வி.பி யும் பிரதான காரணங்களாகியிருக்கின்றன.

மகிந்த சிந்தனை மேற்குலகத்துக்கு அதிகம் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கவில்லை என்பதை இங்கே நாம் கவனிக்கவேண்டும். தவிர நெகிழ்ச்சிக்குரிய எந்தத்தன்மையையும் அவருடைய அணுகுமுறையிலும் அவருடைய சகாக்களிடமும் மேற்குலகம் காணவில்லை என்றும் சொல்கிறார்கள். எப்போதும் முரண்தன்மைகளையுடைய பேச்சுகளிலும் நடவடிக்கைகளிலுமே மகிந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என்ற விமரிசனம் வெளிநாட்டு ராஜதந்திரிகள் வரையில் மகிந்த அரசாங்கத்தப்பற்றி உருவாகியிருக்கிறது.

இத்தகைய அக,புறச்சூழலில் தடைகளைத்தாண்ட முற்படும் மகிந்த கையாளும் சூழ்ச்சிகளை விடவும் அதிக வல்லமை கொண்டவை வெளியே திரண்டிருக்கிற அதிருப்தி அலைகளும் எதிர்ப்புணர்வும். இது தமிழர்களுக்கான ஒரு சந்தர்ப்பம். அரசியலிலும் போரிலும் தமிழர்கள் வெற்றிகொள்வதற்கான தருணம்.

இதை தமிழர்கள் எவ்வாறு பயன்படுத்;தப்போகிறார்கள் என்பது முக்கியமானது. தாய்நிலமும் புலமும் இதற்கான பதிலை விரைவில் தரத்தான் போகின்றன. சிங்கள தேசத்தின் போர்வெறிக்கான தண்டனை நிச்சயம் கிடைக்கத்தான் போகிறது.

சிறிலங்காவின் புலனாய்வுக்கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுகின்றது.

வியாழன் 03-05-2007

-ச.சங்கரன்-

உலகில் பெண்கள் சிறந்த ஒற்றர்களாக விளங்குகின்றனர் அவர்கள் ஆண்களிடம் இருந்து புலனாய்வு தகவலகளை தந்திரமாகப் பெறுகின்றனர் அந்த வகையில் இலங்கை அரச புலனாய்வு நிறுவனமும் பெண் உளவாளிகளின் எண்ணிக்கையினை மிக வேகமாக அதிகரித்துள்ளது.

சிறிலங்காவில் பெண் புலனாய்வாளர்களின் பங்கு 1998ம் அண்டு மொத்தப்புலனாய்வு மனித வளத்தில் 12வீதமாக இருந்தது என்றும், இது 2007ம் ஆண்டு 33வீதமா அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கம் தமது பெண் புலனாய்வாளருக்கான ஆட்கள் தெரிவினை இஸ்லாமியத் தமிழர் மத்தியிலும் சில மலையகத் தமிழர் மத்தியில் இருந்தும் மேற் கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

அதன் ஒரு கட்டமாக சமுர்த்தி என்றழைக்கப்படும் புனர்வாழ்வுத்திட்டத்தில் புலனாய்வுக்கான அடிப்படைத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. சமுர்த்தி திட்டமும் சிறிலங்காப் புலனாய்வுக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டாலும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் புலனாய்வு அதிகாரிகளாக உள்ளனர் சமுர்த்தி திட்டத்திலும் அதிக பெண்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆனால், பணியாளர்களாக கடமையாற்றுவோர் புலனாய்வு வேலை என்பதை தெரியாமலேயே பணியாற்றுகின்றனர்.

சிறிலங்காப் புலனாய்வுச் சேவையில் முன்னர் ஆண்கள் ஆற்றி வந்த வேலையின் ஒரு பகதியை இன்று பெண்கள் செய்கின்றனர் பெண்களினால் பல ஆண்களிடம் இருந்து தகவல்களைப் பெற முடிகின்றது 10 ஆண் புலனாய்வாளர்களின் வேலையினை 7 பெண்கள் செய்வதாக கூறப்படுவதுடன் அதனால் எதிர் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்கும் திட்டம் பலனாய்வுத்துறையினருக்கு உண்டு.

உலகெங்கிலும் சில வருடங்களாக இரகசிய புலனாய்வுச் சேவையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வந்த போதிலும் அவர்களின் பங்குபணிகள் பெருமளவில் மறைக்கப்பட்டே வந்தன. அதனால் அவர்கள் இலகுவாக பணியாற்றக் கூடியவாறும் இருந்தது.

பெண்களினால் பலரை இலகுவில் வசப்படுத்த முடியும் என்பதனாலும் உடல் கவர்ச்சி மூலம் பலரை அரவணைத்துச் செயற்பட முடியும் என்பதினாலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வந்துள்ளது.

சிறிலங்காப் புலனாய்ச் சேவையில் பணியாற்றும் பெண்களில் 80 வீதமான பெண்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் 18- 20 வயதில் இவர்கள் உளவுச் சேவைக்கு இணைக்கப்படுவதாகவும் தெரிய வருகின்றது.

இலங்கை அரச உளவுச் சேவையில் ஒவ்வொரு ஆண் புலனாய்வளார்களும் 10 பெண் முகவர்களை கட்டாயம் கையாள வேணடும் எனவும், அவர்கள் மொத்தம் 40 முகவரை ஒரு ஆண் புலனாய்வாளர் கையாள வேண்டும் எனவும் அரச புலனாய்வு நிறுவனத்தின் கட்டமைப்பு கூறுகின்றது.

பிரித்தானியாவின் புலனாய்வுச் சேவையான ஆ.ஐ-5 இல் 40 வீதம் பெண் புலனாய்வாளர்கள் இருப்பதுடன் 50 வீதத்திற்கு மேலானவர்கள் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது

சிறிலங்காவின் உள்ளகப் புலனாய்வு கட்டமைப்பில் மாத்திரமன்றி வெளியகக்கட்டமைப்பிலும் பெண் புலணாய்வாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கான தூதுவராலயங்களினால் வெளிநாடுகளில் நவநாகரிகத்தில் மூழ்கிப் போன அழகிய பெண்கள் பணியாற்றுவதாக அறிய முடிகின்றது. இவர்களினால் பலர் தேசத்தின் பெயரால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது. தேசத்திற்காக உடலை அர்ப்பணிப்பதாக இவர்களுக்கு உணர்வூட்டப்பட்டு வருகின்றது. அதனால் அவர்கள் பெருமை கொள்கின்றனர்.

உளவுத் துறைப் பணியில் ஈடுபடும் பெண்கள் பாலியல் உறவின் மூலம் ஆண்களை வசப்படுத்தி அவர்களிடம் இருக்கும் தகவல்களை அப்படியே திருடுகின்றனர். அவர்களின் வல்லமை கவர்ச்சியால் பாலியல் பலவீனம் உள்ள ஆண்களை பெண் ஒற்றர்கள் தேசத்தின் துரோகிகளாக்கி விடுகின்றனர் அவர்களிடம் இருந்து பெறுமதியான புலனாய்வு தகவல்களைப் பெறுகின்றனர். பாலியல் தொடர்பினைப் பேணும் இப்பெண்களினால் இலகுவில் பெறுமதியான புலனாய்த் தகவல்களை சேகரிக்க முடிகின்றது.

உளவு பார்க்கும் தொழிலில் ஆண்களை விட பெண்கள் திறமையாகப் பணியாற்றுகின்றனர் என புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆராய்ந்து அறியும் திறனும், கூர்ந்து நோக்கும் ஆற்றலும் பெண்களிடம் உண்டு. இதனால் சிறிலங்காவிலும் பெண் உளவாளிகள் உளவுத்துறைக்கு அதிகம் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

சிறிலங்காவில் பயங்கரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவுக்கு பெண்களை இணைத்துக் கொள்ளும் திட்டம் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

சிறிலங்கா உளவுச் சேவையில் பெண்களினால் ஆழமான புலனாய்வு ஊடுருவல் நடவடிக்கை வெற்றி பெறவில்லையாயினும் சாதாரண ஊடுருவல் அதாவது தமிழ் பொதுமக்களிடம் இருந்து தகவல் சேகரிப்பு நடவடிக்கை வெற்றியளி திருப்பதாக கூறப்படுகின்றது.

விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் அரச பெண் புலனாய்வாளர்களின் ஊடுருவல் வெற்றியளிக்கவில்லை என்பதினால் ஆழமான புலனாய்வுத் திட்டங்கள் வெற்றியளிக்க வில்லை.

கடந்த காலத்தில் (2000 .இற்கு முன்) சிறிலங்கா உளவுச் சேவையில் பெண்களின் பங்கு தென் இலங்கையில் காணப்பட்டாலும் 2000ஆம் ஆண்டுக்குப் பின் வடக்கு கிழக்குப் பகதிகளுக்கு விரிவாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரச புலனாய்வு இயந்திரம் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கம் மலையகத் தமிழ் பெண்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் ஊடுருவ எடுத்த பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

வவனியா, மன்னார் மட்டக்களப்பு, யாழ்ப்பாண நகரங்களில் அண்மைக் காலத்தில் அரச பெண் உளவாளிகளின் நடாமட்டங்கள் அதிகரித்துள்ளதினை காண முடிகின்றது.

சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் நடவடிக்கைக்கு என அனுராதபுரத்தில் ஒரு பாலியல் புலனாய்வு மையம் ஒன்றை நடாத்தி வருகின்றது.

வவுனியா மன்னார் பிரதேசத்தில் வாழ்வோரும், வன்னியில் இருந்து வவுனியா மன்னார் செல்வோரும் இங்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் இன்பத்திற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டு அதனை புகைப்படம் எடுத்த பின் அதனை கொண்டு அவர்கள் மிருட்டப்பட்டு அவர்களிடம் இருந்து புலனாய்வுத் தகவல்கள் எடுக்கப்படுகின்றன.

இவ்வாறாக இலங்கைத்தீவில் பல புலனாய்வு பாலியல் நிலையங்களை இலங்கை அரசாங்கம் நடாத்தி வருக்கின்றது என்பது பலருக்குத் தெரியாத விடயம்.

விடுதலைப் புலிகளின் பன்னாட்டுக் கட்டமைப்புக்குள் ஊடுருவல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பெண் உளவாளிகளை பயன்படுத்த அரசாங்கம் திட்டமிக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.

இதில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்