Tuesday, April 17, 2007

அமெரிக்க பல்கலைக்கழக மாணவனின் வெறியாட்டத்தில் - தமிழ் பேராசிரியர் உட்பட 32பேர் பலி.


அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்குள் (Virginia Tech University) புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 32 பேர் பரிதாபமாக பலியாயினர். இதில் இந்திய பேராசிரியரான லோகநாதன் என்பவரும் அடக்கம்.

அதே போல துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவியான மீனாள் பஞ்சால் என்பவரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

இத்தனை பேரை சுட்டுக் கொன்ற அந்த மர்ம நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பிளாக்ஸ்பெர்க் நகரில் உள்ளது விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம். இங்கு அமெரிக்க நேரப்படி நேற்று காலை 7.15 மணிக்கு, வெஸ்ட் ஆம்ப்ளர் ஜான்ஸ்டன் ஹால் என்ற மாணவர் தங்கும் விடுதி மற்றும் வகுப்பறைகள் உள்ள பகுதியில் ஒரு மர்ம நபர் நுழைந்தார்.

அப்போது வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் போலத் தோன்றிய அந்த நபர் நல்ல உயரமாக இருந்தார். ஜெர்மன் மொழி வகுப்பறைக்குச் சென்ற அந்த நபர் தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால் முதலில் ஒரு ஆசிரியரையும், மாணவரையும் சுட்டுக் கொன்றார். பின்னர் வகுப்பறையில் இருந்தவர்களை சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். ஆனால் வகுப்பறையை விட்டு யாரும் வெளியேறி விட முடியாதபடி வகுப்பறைக் கதவை சங்கிலியால் மூடி விட்டார் அந்த கொலைகார ஆசாமி.

அந்த நபரிடமிருந்து தப்பிப்பதற்காக பல மாணவர்கள் வகுப்பறை ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். வகுப்பறையில் 20 பேர் வரை இருந்ததாகவும், அத்தனை பேரையும் அந்த மர்ம நபர் சுட்டதாகவும் குண்டுக் காயம் அடைந்த டெரிக் ஓ டெல் என்ற மாணவர் கூறினார்.

மொத்தம் இரு இடங்களில் அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். வெஸ்ட் ஆம்ப்ளர் ஜான்ஸ்டன் ஹால் பகுதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நோரிஸ் ஹால் என்ற இடத்திற்குச் சென்று அங்கும் துப்பாக்கியால் சுட்டார் அந்த மர்ம நபர்.

இதில் அந்த வகுப்பறையில் சுற்றுச்சூழல் பொறியியல் குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் என்பவர் மீதும் குண்டு பாய்ந்தது. அதில் அவரும் அந்த இடத்திலேய பலியானார்.

லோகநாதன் பலியாகிவிட்டதை அவருடன் பணியாற்றும் பேராசிரியர் ராமன் குமார் என்பவர் உறுதி செய்தார்.

2 மணி நேர இடைவெளிக்குள் இரு இடங்களிலும் தனது கொலை வெறி ஆட்டத்தை நடத்தியுள்ளார் அந்த நபர்.

இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் 32 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 32 பேரின் உயிரை வாங்கிய அந்த மர்ம நபர் மோரிஸ் ஹால் பகுதியில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதார்.

முதல் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோதே மாணவர்களை சரியான முறையில் எச்சரித்து உஷார் படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தம் 12 ரவுண்டுகள் அந்த நபர் சுட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அதிபர் ஜார்ஜ் புஷ் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கல்வி நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடப்பது வெகு சகஜமானது. யார் வேண்டுமானாலும் கைத் துப்பாக்கி வைத்திருக்க அந்த நாட்டு சட்டத்தில் படு தாராளம் காட்டப்பட்டிருப்பதால் துப்பாக்கி இல்லாமல் யாரையும் அங்கு பார்க்க முடியாது.

அதிகரித்து வரும் துப்பாக்கிகளின் பெருக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது அங்கு சகஜமாகி விட்டது.

கடந்த 1966ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் 25 வயது மாணவர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 13 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 1999ம் ஆண்டு கொலராடோவில் உள்ள கொலம்பியன் உயர் நிலைப் பள்ளியில், 2 மாணவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 12 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இரு மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் துப்பாக்கிச் சூட்டில் இறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 கோடி துப்பாக்கிகள் அங்கு தனிநபர்களிடம் புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 பேர் உயிரிழந்துள்ள விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகதத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாம். 2600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் மொத்தம் 100 கட்டடங்கள் உள்ளன. 26 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 700 பேர் இங்கு படிக்கிறார்கள். 50 இந்தியர்களும் ஆசிரியர்களாக உள்ளனர்.

அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் பற்றி விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக மாணவி ஷீஹான் என்பவர் கூறுகையில்,

துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் இளைஞர் தான். கருப்பு நிற சட்டை அணிந்து இருந்தார். மிக அமைதியாக இருந்தார்.

காலை 7.15 மணியளவில் ஜெர்மன் மொழி வகுப்பறைக்குள்ளே நுழைந்த அந்த நபர் திடீெரன துப்பாக்கியால் மாணவர்களை நோக்கி சராமரியாக சூட்டார். அலறியடித்துக் கொண்டு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக வகுப்பறைத ஜன்னல் வழியாக குதித்து தப்பித்தோம்.

இப்படி குதித்தபோது பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர் என்றார்.

1 Comments:

At April 17, 2007 at 9:39:00 PM GMT+1 , Blogger ஷைலஜா said...

வேதனையான செய்தி..உயிரின் விலை இதுதானா அப்படி என்ன மனிதாபிமானமே இல்லாத அரக்கனா அவன்? வர்ஜீனியாவில் 4மாதமாய் இருக்கும் எனக்கு இந்த அதிர்ச்சி நேற்றுமாலைச் செய்தியில் சுட்டவன் சென்டர்வில் பகுதியில் இருந்ததாய் கேட்டதும் இன்னமும் அதிர்ச்சியானது நான் இருப்பது அங்குதான்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home