Sunday, April 15, 2007

ஒரு மார்க்கிற்கு ஜந்து முத்தம் தா! - பல்கலைகழகங்களில் நடக்கும் அட்டூழியங்கள்.

ஞாயிறு 15-04-2007

பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இது செக்ஸ் சில்மிஷ சீஸன் போலிருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இன்ஜினீயரிங் மாணவி சேட்னா, பல்கலைக்கழக விடுதியில் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக ரகுராமன், மணிக்குமார் ஆகிய இரண்டு பேராசிரியர்கள் சஸ்பெண்ட் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது ஆனார்கள்.

அடுத்ததாக, மதுரையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பணிபுரியும் பாண்டியம்மாள் என்பவர் அந்தக் கல்லூரி முதல்வர், நூலகர் ஆகியோர் மீது பகீர் செக்ஸ் டார்ச்சர் புகாரைப் போட, போலீஸார் அதை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, கோவை விவசாயப் பல்கலைக்கழகத்திலும் ஒரு குபீர் செக்ஸ் புகார். ‘உனக்கு பிராக்டிகலில் ஒழுங்காக மதிப்பெண் போட வேண்டுமென்றால், ஒரு மார்க்கிற்கு ஐந்து முத்தம் தா’ என்று பேராசிரியர் ஒருவர் மிரட்டியதாகக் குற்றம்சாட்டி, மாணவி ஒருவர் விஷம் குடித்து... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ‘ஐந்து முத்தம் புகழ்’ பேராசிரியர், போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த மாணவியின் பெயர் லீனா. பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த தனவேல் என்பவரது மகள். இருபத்து மூன்று வயதான லீனா எம்.எஸ்ஸி. அக்ரி, இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். இதே பல்கலையில் அக்ரி எக்ஸ்டென்சன் மற்றும் ரூரல் சோஸியாலஜி துறைப் பேராசிரியராக வேலை பார்ப்பவர் பிலிப். மாணவி லீனாவுக்கு இவர் துறை வழிகாட்டி. இதன் காரணமாக லீனா அடிக்கடி பேராசிரியர் பிலிப்பை அவர் துறையில் சந்தித்து, சந்தேகம் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிலிப், சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் சாக்கில் மாணவியிடம் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவாராம். அதில் செக்ஸ் விஷயங்கள் நிறைய வந்ததால் அதிர்ச்சியான லீனா, தன் சக மாணவிகளிடம் இதுபற்றி அடிக்கடி சொல்லி வந்திருக்கிறார். ‘‘ஏய்! அவர் எங்களிடமும் அப்படித்தான்டி பேசுறார்’’ என்று சக மாணவிகள் சலித்துக் கொண்டுள்ளனர். இருந்தாலும் பிராக்டிகல் மார்க் போடும் துருப்புச் சீட்டு பேராசிரியர் பிலிப்பின் கையில் இருந்ததால், அவர் மீது புகார் கூறுவதை மாணவிகள் தவிர்த்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 29ம் தேதி மாலை, ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பிலிப்பின் அறைக்குப் போயிருக்கிறார் லீனா. அங்கே வழக்கம் போல இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி பிலிப், ‘‘உனக்கு நான் பிராக்டிகல் மார்க் போடவேண்டுமென்றால் ஏதாவது ஸ்வீட் தர வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார். ‘‘ஸ்வீட்தானே வாங்கித் தர்றேன்’’ என்று வெகுளியாகச் சொல்லியிருக்கிறார் லீனா. அதற்கு பேராசிரியர், ‘‘நான் கேட்டது சாப்பிடுற இனிப்பு இல்லை. கொடுக்கிற இனிப்பு’’ என்று நாக்கை சப்புக் கொட்டி, நாக்கால் தனது உதட்டைத் தடவியிருக்கிறார். ‘‘உனக்கு பிராக்டிகலில் மார்க் போட வேண்டுமென்றால் தினமும் ஒரு மார்க்கிற்கு ஐந்து முத்தம் தரவேண்டும்’’ என்று தூண்டில் வீசியிருக்கிறார்.

அவ்வளவுதான். லீனாவுக்கு முகம் ஜிவுஜிவுவென்று சிவந்து விட்டது. அவமானம் தாங்காமல் வெளியே ஓடியிருக்கிறார். இரண்டு, மூன்று நாட்கள் விடுதி மாணவிகளிடம் எதுவும் பேசாமல் பித்துப் பிடித்தவர் போல இருந்த அவர், பிறகு என்ன நினைத்தாரோ? கடந்த புதன் கிழமை மதியம் தன் அறையில் சாணிப்பவுடரை நீரில் கலக்கிக் குடித்துவிட்டு, மயங்கி விழுந்திருக்கிறார்.

அதிர்ந்துபோன மற்ற மாணவிகளும், விடுதி ஊழியர்களும் லீனாவைத் தூக்கிக்கொண்டு ஓடி, அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்திருக்கிறார் லீனா. ‘‘பேராசிரியர் பிலிப்பின் செக்ஸ் டார்ச்சரால்தான் நான் தற்கொலைக்கு முயன்றேன்’’ என்று அவர் சொல்ல, அன்றே பிலிப் மீது வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர் போலீஸார்.

பேராசிரியர் பிலிப் விஷயத்தில் இன்னொரு வேதனையான சுவாரஸ்யம். இவரது மனைவி பெயர் ஷெரீன். கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலராக ஷெரீன் பணிபுரிந்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு கல்லூரிப் படிப்பு படித்து வரும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். இப்படி கல்லூரியில் படிக்கும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில்தான் லீனாவிடம் முத்தம் கேட்டு மன்மதத் தூது விடுத்திருக்கிறார் பிலிப்.

பிலிப் கைதான அதே நாளில் அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன், வழக்கறிஞர்கள் நடத்திய பெண்கள் கருத்தரங்கம் ஒன்றில் ஷெரீன் கலந்துகொண்டு, அதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அதிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியெல்லாம் பொளந்து கட்டியிருக்கிறார்.

‘‘பெரும்பாலான பெண்கள் கணவன்மார்கள் மீது வீணாகச் சந்தேகப்படுகிறார்கள். இதனால் குடும்பங்களில் துன்பம் ஏற்படுகிறது. கணவர்கள் வழிதவறி மற்ற பெண்களிடம் செல்ல இதுவும் ஒரு காரணமாகி விடுகிறது’’ என்றும் விளாசித் தள்ளியிருக்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் இங்கே பிலிப்பின் கையில் காப்பு மாட்டியிருக்கிறார்கள் போலீஸார்.

அடுத்த நாள் இந்த இரண்டு செய்திகளுமே பத்திரிகைகளில் வெளிவர, கோவை முழுவதும் ஒரே குபீர் சிரிப்பு. கோவை கோர்ட் வளாகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் காவல்துறை வட்டாரங்களில் இந்தச் செய்திகள் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தன.

விஷம் குடித்து சாவின் விளிம்புக்குப் போய்த் திரும்பிய மாணவி லீனாவை, அவர் சிகிச்சை பெற்று வரும் ஆரோக்யா மருத்துவமனைக்குச் சந்திக்கச் சென்றோம். அவரைப் பார்க்கக் கூட அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை. லீனாவின் சித்தப்பா மகன்கள் இருவர் மட்டும், ‘‘சம்பவம் நடந்தது உண்மை. இன்னமும் எங்க தங்கச்சிக்கு இரண்டாண்டு படிப்பு பாக்கியிருக்கு. இதனால் புகார் கொடுக்கக் கூட லீனா ஆரம்பத்தில் பயந்தாள். அதன்பிறகு படாதபாடு பட்டு ஒப்புதல் வாங்கித்தான் புகார் தந்தோம். இங்கே இனியும் ஒரு பேராசிரியர் மாணவிகளிடம் வாலாட்டக் கூடாது என்றுதான் இந்த அளவுக்காவது புகார் கொடுத்தாள். இதற்கு மேல் எங்களை எதுவும் கேட்காதீர்கள்’’ என்று கையெடுத்துக் கும்பிட்டனர்.

விவசாயப் பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரிக்கப் போன போது, ஊழியர்கள் பல தகவல்களை நம்முடன் பரிமாறினர்.

‘‘இங்கே ஒரு பேராசிரியர் மட்டுமில்லை, பல பேராசிரியர்கள் மாணவிகளிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். ஒரு பேராசிரியர், பிராக்டிகல் மார்க் போடும்போது மாணவிகளைத் தன் மடியில் உட்காரச் சொல்லுவார். இன்னொரு பேராசிரியரோ, விடுமுறை நாட்களில் காதலர்கள் கூடும் பொட்டானிக்கல் கார்டனுக்கு மாணவிகளை அழைத்து வந்து கடலை போட வற்புறுத்துவார். அப்படி கம்பெனி கொடுக்கும் மாணவிகளுக்கு மட்டும்தான் மார்க்கை அள்ளிவிடுவார்.

மாணவிகளுக்கு பிராக்டிகல் மார்க் என்பது ஐந்து அல்லது பத்து மார்க்தான். அதற்கு இந்தப் பேராசிரியர் ஒரு மார்க்கிற்கு ஐந்து முத்தம் கேட்டாரென்றால் ஐந்து மார்க்கிற்கு இருபத்தைந்து முத்தம் ஆயிற்றே! அந்த மாணவி அப்படி ஒருவேளை முத்தம் தந்திருந்தால் கூட பேராசிரியர் விட்டிருப்பாரா? அடுத்த கட்ட மன்மத லீலைக்கு அந்த மாணவியை அழைத்து கவிழ்த்திருப்பாரே. சென்ற வருடம் ஒரு மாணவியிடம் விரிவுரையாளர் ஒருவர் இப்படி அத்து மீறியதால் அந்த மாணவி ஊருக்குப் போய் தற்கொலையே செய்துகொண்டார். பாவம். மாணவியின் பெற்றோர் ஏழைகள் என்பதால் உயரதிகாரிகள் அவர்களைச் சரிக்கட்டி அமுக்கிவிட்டனர்.

இங்குள்ள உயரதிகாரிகள் எல்லாம் யோக்கியமில்லை. இவர்கள் ஏற்கெனவே பேராசிரியர்களாக இருந்தவர்கள்தான். இவர்கள் எல்லோருமே மாணவிகளிடம் மட்டுமல்ல, பெண் உதவியாளர்களிடமும் செக்ஸ் தாகத்தைத் தணித்துக் கொள்பவர்கள். இங்கு ஏற்கெனவே பெரிய பொறுப்பில் இருந்த மூத்த கல்வியாளர் ஒருவர், தன் பெண் உதவியாளரிடம் பட்டப்பகலிலேயே அனைத்தையும் முடித்துக் கொள்வார். அதற்காக பிரத்தியேக அறையையே உருவாக்கி வைத்திருந்தார்.

இன்னொரு பொறுப்பான அதிகாரி. இவர் பகலில் ராமன் போல நடிப்பார். இரவானால் தினம் ஒரு பெண்ணைத் தள்ளிக் கொண்டு வந்து விடுவார். அதற்கு வசதியாக இங்கே பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய கட்டடங்கள் கடல் போல கிடக்கின்றன. அதில் ஏதாவது ஒரு மூலையில் தப்பு நடந்தால் யாருக்குத் தெரியப் போகிறது? அத்துடன், இங்கே வரும் அரசியல் வி.ஐ.பி.களுக்கு பெண் சப்ளை செய்யும் பேராசிரியப் பெருமக்களும் இருக்கிறார்கள்.

இங்கேயிருக்கிற ஊழியர்களுக்கும், இது தெரியும். ஆனால் வேலை போய்விடும் என்ற பயத்தில் யாரும் மூச்சு விடமாட்டார்கள். மாணவ, மாணவிகளும் எதிர்காலம் போய்விடும், பிராக்டிகல் மார்க் போய்விடும் என்ற பயத்தில் சத்தம் காட்ட மாட்டார்கள்.

இப்போது லீனா விஷயம்கூட சாதாரணமாக வெளியில் வரவில்லை. இந்த மாணவி பா.ம.க. எம்.எல்.ஏ. ஒருவரின் நெருங்கிய உறவினர். அவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு கோட்டை வரை பேசி பிரஷர் கிளப்பியதால்தான் போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளே நேரில் வந்து விசாரித்து பேராசிரியரைக் கைது செய்துள்ளனர்!’’ என்று குமுறித் தீர்த்தனர் ஊழியர்கள்.

பிலிப் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாள் கழித்து, மேற்படி பேராசிரியர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவை விவசாயப் பல்கலைக்கழகம் அமைத்திருக்கிறது. ‘‘எந்தப் பேராசிரியர் மாணவிகளிடம் இடக்கு மடக்காக நடக்க முயன்றாலும், மாணவிகள் பயப்படாமல் புகார் கொடுக்கலாம். பிராக்டிகல் மார்க் குறைந்துவிடும் என்ற பீதியும் வேண்டாம். பிராக்டிகல் மார்க் குறைக்கப்பட்டதென்றால், அதைக் கவனத்தில் எடுத்து மதிப்பெண்ணைத் திரும்ப போட்டுத் தருகிறோம்’’ என்று பல்கலை துணை வேந்தர் ராமசாமியே அறிவித்திருக்கிறார். இப்படி அறிவித்திருந்தும் இதை நம்பிப் புகார் தர எந்த மாணவியும் வரவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

சிதம்பரம், மதுரை, இப்போது கோவை... இனி அடுத்து எந்த ஊர்ப் பல்கலைக்கழகத்தில் எந்தப் பேராசிரியர் ‘மன்மத ராசாவாக மாறுவாரோ?’ என்று மலைத்துப் போய்க் கிடக்கிறார்கள் மாணவிகள்.

மதுரை இறையியல் கல்லூரி நூலகத்தில் பணி புரியும் தலித் வகுப்பைச் சேர்ந்த பாண்டியம்மாளை, நூலகர் அகஸ்டின், காலை எட்டரை மணிக்கே வேலைக்கு வரச் சொல்லி, இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். இதுபற்றி கல்லூரி முதல்வர் மோகன்லார்பீரிடம் பாண்டியம்மாள் புகார் செய்தபோது, முதல்வர் உதிர்த்த முத்தான வசனம் இதுதான்.

‘‘நூலகரிடம் அனுசரித்துப் போ!’’ பண்டியம்மாளின் கணவர் பாண்டியன் இது தொடர்பாக முதல்வரைச் சந்திக்க முயல, அவரை அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள் கல்லூரி நிர்வாகிகள். அதன்பிறகு முதல்வர் மற்றும் நூலகர் மீது நடவடிக்கை கோரி போலீஸ§க்குப் போயிருக்கிறார் பாண்டியம்மாள்.

இந்த செக்ஸ் டார்ச்சர் பிரச்னையில் புரட்சிப்புலிகள் இயக்கம், விஷ்வ ஹிந்து பரிஷத் எல்லாம் மூக்கை நுழைத்து சாதி மத சாயம் பூசுவதால் மருண்டு போய்க் கிடக்கிறது மதுரை.

Kumudam

4 Comments:

At April 15, 2007 at 11:26:00 AM GMT+1 , Blogger மாசிலா said...

வேலியே பயிரை மேய்ந்த கதைதான் போங்க! பெண்கள் சங்கங்களும் இயக்கங்களும்தான் இந்த அட்டூழியங்களை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும். அவங்க கையால அடி பட்டால்தான் இந்த ஜென்மங்களுக்கு புத்தி வரும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு.

பகிர்ந்தமைக்கு நன்றி.

 
At April 16, 2007 at 11:01:00 AM GMT+1 , Anonymous Anonymous said...

VHP is great organization don't pass Sarcastic comment about it.

hari

 
At April 16, 2007 at 11:32:00 AM GMT+1 , Anonymous Anonymous said...

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் என்ன வாழுதாம்? பேராதனைப் பல்கலைக்கழகதில் பலியான பெண்கள் எவ்வளவு தெரியுமா?. அதை விட்டு தொலையுங்க. யாழ் பல்கலைக்கழக அரசியற்துறை விரிவுரையாளர் செய்த பாலியல் கொடுமை நீதிமன்றம் வரை சென்று புகழ் பரப்பியது. இல்லை, ந‌ம்ம‌ நாடு புனித‌ ம‌ண் என‌ க‌விதை எழுத‌ப்போறீங்க‌ளா?

 
At April 18, 2007 at 11:29:00 AM GMT+1 , Blogger R. கரன் said...

வருகை வந்து கருத்து தெரிவித்த அனைத்து பெருமக்களுக்கும் நன்றி.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home