Monday, September 24, 2007

நியூயோர்க்கிலுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை

திங்கள் 24-09-2007

நியுயோர்ல் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தினை இந்த வருடம் இறுதிக்குள் முன் வைத்துள்லதாக ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் இதன் போது தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகபாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் 62 வது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாளை இடம் பெறவுள்ள அமர்வில் உரையாற்றவுள்ளார்.

பெற்றோலிய பொருட்களின் விலை விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் அமெரிக்காவில் அமைச்சர் பௌசி

திங்கள் 24-09-2007

பெற்றோலிய பொருட்களின் விலையை விரைவில் அதிகரிக்க நேரிடும் என பெற்றோலிய மற்றும் கனியவள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பௌசி, வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை 85 டொலர் வரை அதிகரிக்குமாயின் இலங்கையில் எண்ணெய் விலையை அதிகரிப்பதை தவிர்க்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலக அரசியல் நிலைமையை கருத்தில் கொள்ளும்போது இந்த வருட இறுதியில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை நூறு அமெரிக்க டொலராக உயரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் எண்ணெய் வளம் தொடர்பாக ஆராய வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதே அமைச்சரின் அமெரிக்க விஜயத்தின் நோக்கமாகும்.

மன்னார் தம்பனையில் மோட்டார் எறிகணைத் வீச்சு: படைத்தரப்பில் 2 பேர் பலி! மேலும் 8 பேர் படுகாயம்

திங்கள் 24-09-2007

மன்னார் தம்பனை முன்னரங்க நிலைகளில் விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் இருவர் கொல்லபட்டு மேலும் 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

முதலில் விடுதலைப் புலிகள் தம்பனை முன்னரங்க நிலைககளை இலக்கு வைத்து மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்திய போது படையினரும் பதிலுக்குத் ஆட்டிலறி மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் சிறீலங்கா தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

போரை முடிவுக்கு கொண்டுவர அவுஸ்திரேலியா, நியூசிலாந்து வலியுறுத்தல்

திங்கள் 24-09-2007

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு நாடுகளும் இதனை வலியுறுத்தின.

இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நியூசிலாந்து பிரதிநிதி ஆமி லௌரென்சன் பேசியதாவது:

இலங்கையின் தற்போதைய மோதல்களால் பாரிய மனித உரிமை மீறல்கள் நிகழ்வது கவலைக்குரியதாக உள்ளது. இருதரப்பும் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு அமைதிப் பேச்சுக்களுக்கு திரும்ப வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையர் லூய்ஸ் ஆர்பர் அடுத்த மாதம் இலங்கைக்குச் செல்வதை நியூசிலாந்து முழுமையாக ஆதரிக்கிறது. இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கான அனைத்துலகத்தின் முயற்சிகளை நாம் ஏற்கிறோம் என்றார் அவர்.

அவுஸ்திரேலியாவின் பிரதிநிதி கை ஓப்ரெய்ன் பேசியதாவது:

இலங்கையின் இனமோதல் அதிகரித்து வருவதால் அதிக அளவிலான இடப்பெயர்வு நிகழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கவலை அளிக்கிறது. அனைத்து வகையான சிறார் கடத்தல் மற்றும் படையணிகளில் சேர்ப்பை அனைத்துத் தரப்பும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளாலும் கருணா குழுவினராலும் சிறார்கள் தொடர்ந்தும் படையணிகளில் சேர்க்கப்படுவதாக அறிக்கைகள் வெளியாவது கவலைக்குரியது என்றார் அவர்.

Sunday, September 23, 2007

பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல்

ஞாயிறு 23-09-2007

விஸ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் சனிக்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் பேசும் போது, ராமரை இழித்துப் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதியின் தலை மற்றும் நாக்கை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடைக்கு தங்கம் வழங்கப்படும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பதட்டம் அதிகரித்து வருகின்றது.

சனிக்கிழமையன்று இந்துத்துவா சக்திகளை கடுமையாக கண்டித்து மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்து இருந்தார்.

ஞாயிற்றுகிழமை தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் பாரதிய ஜனதா அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தின் ஜன்னல்கள், கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு காவல்துறையினரே காரணம் என்றும், காவல்துறையினர் தங்களது கடமையை சரிவர செய்யவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் குமாரவேலு குற்றம்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் சிறுவன் சுட்டுக்கொலை

ஞாயிறு 23-09-2007

மட்டக்களப்பில் 16 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

மட்டக்களப்பு வெல்லாவெளிப் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இச்சம்பவம் நடந்துள்ளது.

தனது நண்பர்களுடன் விளையாடி விட்டு வீடு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் செல்வகுமார் ராஜ்குமார் என்றும் சங்கபுரம் 16 ஆம் கொலனியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுடனான சடலம் ஒன்றை களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறையினர் இன்று காலை குருமன்வெளிப் பகுதியில் மீட்டுள்ள்னர்.

அது நேற்று காணாமல் போன ஆறுமுகம் முருகன் (வயது 35) என்ற நபரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாணவர், ஆசிரியர்களின் பாதுகாப்பை ஐ.நா சிறுவர் நிதியம் உறுதி செய்ய வேண்டும்: முல்லை. வலயக் கல்விப் பணிப்பாளர்

ஞாயிறு 23-09-2007

20 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உறுதி செய்ய வேண்டும் என்று முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் அரியரட்னம் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (20.09.07) நடத்தப்பட்ட வான் தாக்குதலினால் மாணவர்கள் எதிர்கொண்ட பாதிப்பை வெளிப்படுத்தி நேற்று முன்நாள் புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட கண்டனப் பேரணியின் முடிவில் அவர் ஆற்றிய உரை:

முல்லைத்தீவு வலயத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வி கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதை மனிதநேய அமைப்பினர் அனைவரும் அறிவர்.

இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதான வானூர்தித் தாக்குதல்களை இங்கு பணியாற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும் அறியும்.

இத்தகைய வான் தாக்குதல் சம்பவங்கள் நவாலித் தேவாலயத்தில் தொடங்கி நாகர்கோவில் அரச பாடசாலையில் இன்னுமொரு புதிய வடிவம் பெற்றது.

2006 ஆம் ஆண்டு செஞ்சோலை வளாகத்தில் அதிகமான உயிர்களைப் பலி கொண்டது.

இதன் பின்னர் தொடர்ந்தும் மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களைப் பாதிக்கின்ற வானூர்தித் தாக்குதல்கள் பல நடைபெற்று வருகின்றன.

வேணாவில் முருகானந்தா பாடசாலையை அண்மித்த பகுதியில் கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டதால் மாணவன் ஒருவர் காயமடைந்திருந்தார். ஏனைய மாணவர்கள் பாதுகாப்புத் தேடி தப்பி ஓடினர். இதனால் பெருமளவான உயிரிழப்புக்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

பாடசாலை நடந்து கொண்டிருக்கின்ற போது வியாழக்கிழமை வான்பரப்பில் பிரவேசித்த வானூர்திகள் மிகவும் நெருக்கமான மக்கள் நடமாட்டப் பகுதிகளில் தாக்குதல் நடத்தின. இதனால் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

இந்த நேரத்தில் முக்கிய கல்லூரிகளான புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, வேணாவில் முருகானந்தா, சிறிசுப்பிரமணிய வித்தியாலயம், கோம்பாவில் விக்கினேஸ்வரா போன்ற பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகியிருந்தனர்.

தமது உயிரைக் காத்துக் கொள்வதற்காக பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் அனுமதியின்றி வீடுகளுக்குச் சிதறி ஓடினர்.

இதன் பின்னர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் அதிபர்களிடம் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பாடசாலை அதிபர்கள் என்னிடம் இந்த நிலைமையைக் கூறினார்கள். பெற்றோரின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானது. ஏனெனில் பாடசாலைக் கல்வியை மிகவும் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாது கற்க வேண்டும்.

இப்பிரதேசத்தில் தினமும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வந்தால் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப மாட்டார்கள். அபாயம் மிக்க கல்வியை விடப் பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் உயிர் மேலானதாக இருக்கும். இது தவிர்க்க முடியாத ஒன்று.

அபாயம் நிறைந்த இந்த நிலையால் முல்லை மாவட்டத்தில் முழுமையான கல்வியும் ஸதம்பிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அளம்பிலில் ஒரு மாணவர், தனது இரண்டு கால்களையும் இழந்திருக்கிறார்.

வான் தாக்குதல்களாலும் கடற்படைத் தாக்குதல்களாலும் அந்தப்பகுதிப் பாடசாலைகளின் கல்வி மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

புதுக்குடியிருப்புப் பகுதியில் கடந்த வாரமும், நேற்றும் நடைபெற்ற சம்பவங்களால் இந்தப் பகுதிப் பாடசாலைகளிலும் கல்வி மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.

கைவேலி கணேசா பாடசாலையில் நடைபெற்ற தாக்குதல்களால் தற்போது அங்கு மாணவர்கள் வரவு மிகவும் மோசமாகக் குறைந்துள்ளது. இத்தகைய நெருக்கடி நிலை காரணமாகப் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஆகவே எமது மாணவர்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு அனைத்துலக நிறுவனங்கள் கண்காணிப்பாளர்கள் அரசின் இத்தகையத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். அந்த வகையில் எமது பிரதேசத்தில் பல்வேறு செயற்பாடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் ஏனைய நிறுவனங்களிற்கும் பாடசாலை அதிபர்களால் தரப்பட்ட மனுவை நான் கையளிக்கின்றேன். மாவட்டத்தில் கல்வி கற்கும் 20 ஆயிரம் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் பாடசாலைச் செயற்பாடுகளிற்குப் பாதுகாப்பு வழங்க உறுதி தர வேண்டும் என்றார் அவர்.

சந்திரிகா-மன்மோகன் ஆலோசனை: அதிருப்தியில் மகிந்த

ஞாயிறு 23-09-2007

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் புதுடில்லியில் ஆலோசனை நடத்தியமையானது தமது "ஆட்சியை கவிழ்க்கத்தானா" என்பதை அறிந்து கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முனைப்புக் காட்டினார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தெரிவித்துள்ளது.

சந்திரிகாவின் இந்தியப் பயணம் குறித்து சண்டே ரைம்ஸ் வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா இந்தியா சென்றார். முதலில் சென்னையில் சந்திரிகா தங்கினார். சந்திரிகாவின் நெருங்கிய நண்பரும் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக சந்திரிகாவினால் சிறிலங்காவின் தேசிய கௌரவத்தை பெற்றவருமான "இந்து" ஏட்டின் ஆசிரியர் என்.ராமின் விருந்திரான சென்னையில் தங்கினார் சந்திரிகா. அதன் பின்னர் புதுடில்லி செல்ல சந்திரிகா திட்டமிட்டார். சென்னையில் சந்திரிகா இருந்தபோது அவருக்கு ஆச்சரியமடையும் வகையில் இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டது. புதுடில்லிக்கு சந்திரிகா சென்றடையும்போது பிரதமர் மன்மோகன்சிங்குடன்
பிற்பகல் உணவு விருந்தில் சந்திரிகா பங்கேற்க இயலுமா என்று கேட்கப்பட்டதுதான் அந்த ஆச்சரியம். சந்திரிகாவும் உடனே ஒப்புக் கொண்டார்.

அந்த பகல் விருந்தில் முக்கிய பிரமுகர்கள் அணிவகுத்து வந்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காமையினால் அவரது மகன் ராகுல் காந்தி, வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் இரண்டு கபினட் அமைச்சர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் மகிந்த அரசாங்கம் தாமதிப்பது, வடக்கு - கிழக்கு பிரிப்பு தொடர்பிலான இந்தியாவின் அதிருப்தி, மனித உரிமைகள் சீர்குலைவுகள் தொடர்பிலான உறுதிமொழிகளுக்கு மாறான சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு ஆகியவை தொடர்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அப்போது இந்திய அமைச்சர் மணிசங்கர் ஐயரிடம் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் பேசியுள்ளார். அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைப்பது தொடர்பாக சந்திரிகாவும் மன்மோகன்சிங்கும் ஆலோசனை நடத்தினார்களா என்பதை கண்டறிவதற்காக மணிசங்கர் ஐயரை மகிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டுள்ளார். கொழும்பில் "இந்து" ஏட்டின் ஆசிரியர் ராம் இருந்தபோது அவரை இரவு விருந்துக்காக மகிந்த ராஜபக்ச அழைத்துள்ளார். மகிந்தவும் ராமும் இரண்டரை மணி நேரம் நடத்திய பேச்சுக்களின் போதும் சந்திரிகாவின் இந்தியப் பயணம் தொடர்பில் பலமுறை மகிந்த கேட்டுள்ளார் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் கோத்தபாய!

ஞாயிறு 23-09-2007

சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் இன்று ஐலண்ட பத்திரிகைக்கு தெரிவித்த செவ்வியில் விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைக்கு திரும்பும் பட்சத்தில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கையினை மேற்கொள்ளமாட்டார்கள் எனத்தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோட்டபாய ராஜபக்ஸ சிலதினங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அர்த்தமற்ற செயல் எனவும் இராணுவத்தீர்வின் மூலமே தீர்வு எய்தப்படலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போது நியூயோர்க் நகரில் ஐக்கியநாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தொடரில் சிறீலங்கா ஜனாதிபதி பேசவிருக்கும் இத்தருணத்தில் கோத்தபாய இவ்வாறு குத்துக்கரணமடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகவும்.