Sunday, April 15, 2007

படுவான்கரை படையெடுப்பும் திட்டமிட்ட பொருளாதார அழிப்பும்.

ஞாயிறு 15-04-2007

தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட இன ஒழிப்பினையும் சிங்களக் குடியேற்றங்களையும் பொருளாதாரம் மற்றும் வள அழிப்பினையும் அரசு காலங்காலமாக மேற்கொண்டு வருவதை கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களினூடாக அறிய முடியும்.

1956 இனக் கலவரம் முதல் 1983 ஜூலைக் கலவரம், 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களிலும் ஷ்ரீலங்கா அரசும், இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் இணைந்து திட்டமிட்ட இனப்படுகொலைகளையும் பொருளாதார அழிப்பையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

1983 ஜூலை இன அழிப்பின் போது கொழும்பிலுள்ள தமிழ் மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் சொத்துகள் சூறையாடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் விரட்டி அடிக்கப்பட்டனர். அதேபோன்றே தமிழ் மக்களது பாரிய சொத்தாகிய யாழ். பொது நூலகமும் அரசினால் திட்டமிட்டு தீ வைத்து தமிழ் மக்களது கல்விக்கு சாவு மணி அடிக்க நினைத்தது. அதே கைங்கரியத்தையே இன்று மட்டக்களப்பு படுவான்கரை மக்கள் மீதும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்தின் மீதும் திட்டமிட்டு தாக்குதலை நடாத்தி பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம் பற்றியும் அது எதில் தங்கியுள்ளது என்பது பற்றியும் அது எக்காலத்தில் தங்கியுள்ளது என்பது பற்றியும் அரசுக்கு தெரியாமல் இல்லை. அதனை இலக்கு வைத்தே கச்சிதமாக பொருளாதார அழிப்பு நடவடிக்கையினை அரசு மேற்கொண்டுள்ளது.

`தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கான போர்' என சர்வதேசத்துக்கு காட்டிக் கொண்டு தமிழ் மக்களையும் தமிழ் மக்களது பொருளாதார தரத்தையும் திட்டமிட்டு சீர்குலைத்துவிட்டு ஏனைய சமூகத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரியாதவாறு இருட்டடிப்புச் செய்து வருகின்றது.

தமிழ் மக்களது பொருளாதாரம் மற்றும் வளங்களை அழிப்பதனூடாக அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து பிச்சை எடுக்க வைப்பதும் அதனூடாக தமிழரின் உரிமைப் போராட்டத்தை நலிவடையச் செய்வதுமே பேரினவாதிகளின் திட்டம். ஆனால், அதனை சாதித்துவிட முடியாத அளவுக்கு தமிழரின் போராட்டம் வளர்ச்சி கண்டு செல்கின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களது பொருளாதாரத்தை அழிப்பதனூடாக போராட்டத்தை ஒடுக்குவது என்பது புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை நடைபெறப் போவதில்லை.

படுவான்கரை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் சாதிக்க நினைத்தது என்ன? ஏன் திட்டமிட்டு ஒன்றரை இலட்சம் மக்களை ஒரு சில தினங்களில் முழுமையாக வெளியேற்றியது? ஏன் ஆகஸ்ட் மாதம் முதல் தாக்குதல் நடத்தி ஜனவரி, பெப்ரவரியில் மக்களை வெளியேற்றியது? இவை அனைத்துக்கும் வெறுமனே விடுதலைப் புலிகளின் வசமுள்ள 70 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றுவது என்பது மட்டுமல்ல, மறைமுகக் காரணமும் உண்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம் எதில் தங்கியுள்ளது? அது எக்காலப் பகுதியில் தங்கியுள்ளது? என்பது நன்கு தெரிந்தே அவற்றை அழிப்பதற்காகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு அளவிலான பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தினை அரசு நடாத்துகின்றது.

அக்டோபர் நடுப்பகுதியில் விவசாயிகள் நெல் விதைப்பை ஆரம்பிப்பார்கள். ஜனவரி, பெப்ரவரியில் நெல்லை அறுவடை செய்வார்கள். மார்ச், ஏப்ரலில் சிறுபோக செய்கை பண்ணப்படும். இக்காலப்பகுதியில் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமான எறிகணை மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்களை நடத்தினால் மக்கள் வெளியேறுவார்கள். அறுவடை சிறுபோக செய்கை பண்ணப்படமாட்டாது என்பதாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகம் ஒரு இலட்சம் ஏக்கரும் சிறுபோகம் உன்னிச்சை , நவகிரி, புளுக்குனாவ, வாகனேரி, கட்டுமுறி குளங்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கரும் செய்கை பண்ணப்படுவதுடன் உப உணவுப் பயிர்ச்செய்கையும் தோட்டங்களும் செய்கை பண்ணப்படுவதோடு மட்டக்களப்பில் 70 சதவீதமான நிலப்பரப்பைக் கொண்ட படுவான்கரையில் பெருமளவிலான ஆடு மாடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் முதல் ஆரம்பிக்கப்பட்ட கடுமையான தாக்குதல்களால் 20 சதவீதமான நிலப் பரப்பு செய்கை பண்ணப்பட்ட நிலையில் அறுவடை காலப்பகுதியிலேயே உக்கிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

கையிலுள்ள பணத்தினையும் காது கழுத்தில் இருந்த நகைகளை அடகு வைத்து வயலில் இட்ட மக்கள் உக்கிர தாக்குதலால் பல உயிர்களை இழந்த நிலையிலும் நூற்றுக் கணக்கானோர் காயப்பட்டும் பெரும்பாலான வீடுகள் அழிந்த நிலையிலும் 20% வரையிலான வயல் நிலங்கள் அறுவடை செய்த நிலையிலும் ஏனைய வயல் நிலங்கள் அறுவடை செய்யப்பட்டும் செய்யப்படாமலும் சூடு வைத்த நிலையிலும் அறுவடை செய்யப்படாமலும் அறுவடை செய்து துப்புரவு செய்த நெல்லை உரிய சந்தை வாய்ப்பு இன்றி சந்தைப்படுத்தாமல் களஞ்சியப்படுத்திய நிலையிலும் மக்கள் உடுத்த உடுப்புடன் ஓரிரு தினங்களில் இதுவரை வரலாறு காணாத அளவு அதிகமான மக்கள் வெளியேறினர். ஆடு, மாடுகள் தோட்டங்களையும் வயல்களையும் அழித்தனர்.

குண்டு மழையினால் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு வீதிகளிலும் வயல்வெளிகளிலும் இறந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. வயல்களும் சூடுகளும் குண்டு வீச்சினால் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.

எல்லைப் புறங்கள் மீது மட்டக்களப்பு நகரின் பிரதான படைமுகாம்களிலும் இருந்து வீசப்பட்ட குண்டு மற்றும் விமானத் தாக்குதலால் படுவான்கரையே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள வீடுகள் அனைத்தும் சேதமாக்கப்பட்டன.

அத்துடன், நின்று விட்டால் ஓரளவேனும் மக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு சென்று மிஞ்சியுள்ள பொருட்களையாவது மீட்டு இருக்கலாம். ஆனால், இராணுவத்தினரும் சிங்கள மக்களும் இணைந்து படுவான்கரைப் பகுதியில் இருந்த கிராமங்களை சூறையாடி வவுணதீவு ஊடாகவும் எல்லைக் கிராமங்களாகிய புளுக்குனாவ, 39 ஆம் கொலனி, மங்களோயா, மகோயா போன்ற பகுதிகளூடாகவும் கொண்டு செல்கின்றனர்.

வீட்டுத் தளபாடங்கள், மின்சார சாதனப் பொருட்கள் முதல் வீட்டு நிலை, யன்னல் போன்றனவும் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன. களஞ்சியப்படுத்தப்பட்ட நெல் முதல் உப உணவுகள் வரையும் ஆலயங்கள் முதல் பாடசாலைகள் வரையும் சிங்களவர்கள் பொருட்கள் எதனையும் விட்டு வைக்கவில்லை.

பாடசாலைகள் உடைக்கப்பட்டு கணினிகள் பல சூறையாடப்பட்டுள்ளன. இதனை புலிகள் மேற்கொண்டதாகவும் இராணுவத்தரப்பு கூறினாலும் புலிகள் தங்களது பொருட்களைக் கூட எடுக்காமல் சென்று இராணுவம் கைப்பற்றியதாகக் கூறும் நிலையில் இதனை புலிகள் கொண்டு சென்றதாகக் கூறுவது எப்படி?

அரசின் திட்டமிட்ட பொருளாதார அழிப்பு இத்துடன் நின்று விட்டதா, இல்லை. இரண்டு போக பயிர்ச்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெரும்போகம் ஒரு இலட்சம் ஏக்கரையும் செய்கை பண்ண விவசாயிகள் விதை நெல்லுக்கு எங்கு செல்வது. பொலநறுவை, அம்பாறை மாவட்டங்களுக்குச் சென்று விதை நெல்களைப் பெற்றே விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது எந்தளவு சாத்தியப்படும். இதனால் எதிர்வரும் பெரும்போகம் 50% கூட செய்கை பண்ணப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்புவது என்பது கடினமான காரியமாக இருந்தாலும் அது விவசாயிகளின் கையிலே உள்ளது.

இவர்களுக்கு அரசு உதவ முன்வருமா? சர்வதேச சமூகத்திற்கு உதவுவதாக காட்ட முன் வந்தாலும் அது ஒரு கண்துடைப்பாகவே அமையும். மாவிலாறு பிரச்சினைக்கு அரசு காட்டிய ஈடுபாடும் ஆர்வமும் தமிழ் மக்கள் பிரச்சினையில் எங்கு போய் உள்ளது? மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் "பொன்குடம்" போலுள்ளது.

விளை நெல் பிரச்சினையுடன் போகவில்லை. மட்டக்களப்பு மக்கள் உழைக்கின்ற பணத்தை சிங்கள மக்களுக்கு வழங்கி அவர்களிடம் இருந்து உணவினைப் பெற வேண்டிய நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களது பொருளாதாரத்தை அழித்து சிங்கள மக்களை வாழ வைப்பதையே அரசு மேற்கொண்டு வருகின்றது.

பசி தீர்ப்பவர்களின் பங்காளிகளாகிய படுவான்கரை மக்கள், இன்று ஒருநேரம் உண்பதற்கு கூட உணவின்றி வீதியோரங்களில் வாடுகின்றனர்.

அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை விடுதலைப் புலிகளின் வசம் உள்ள நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருப்பதோ இடம்பிடிப்பதோ அல்ல. தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தை அழித்து அவர்களை அகதிகளாக்கிய பின் மீண்டும் ஏழைகளாக குடியமர்த்துவதே அடிப்படைத் திட்டம்.

- எம். குமார் -

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home