Wednesday, April 18, 2007

பொய்ப் பரப்புரைகள் மூலம் தவறாக வழிநடத்தப்படும் சிங்கள மக்கள்': சுரேஸ் பிரேமச்சந்திரன்.


சிறிலங்கா அரசாங்கமானது பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் சிங்கள மக்களை தவறாக வழி நடத்துகின்றது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
59.2 வீதமான சிங்கள மக்கள் இராணுவத் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்க்கலாம் என தமது வாக்கெடுப்பில் தெரிவித்ததாக கொள்கை வகுப்புத் திட்ட கற்கைக்கான ஆய்வு நிலையம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது:

"இந்த கற்கை நிலையத்தின் வாக்கெடுப்பு முடிவுகள் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களினால் ஏற்பட்டவையே.

இது சிங்கள மக்களின் அபிப்பிராயம் அல்ல. தற்போதைய அரசாங்கம், சிங்கள மக்களின் மனநிலையை மாற்றியுள்ளது. உண்மையாக இப்படியான கருத்துக்கள் கிழக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் போலியான பரப்புரைகளினால் ஏற்பட்டவையே.

கிழக்கில் தாம் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதாகவும், பெருமளவான விடுதலைப் புலிகளை கொன்றுள்ளதாகவும், அதிகளவான ஆயுதங்கள் மற்றும் நிலப்பரப்புக்களை மீட்டுள்ளதாகவும் அரசாங்கம் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. இது சிங்கள மக்களின் மனநிலையை பாதித்துள்ளது. எனவே அவர்கள் இனப்பிரச்சனைக்கு இராணுவ வழிகள் மூலம் தீர்வைக் காணலாம் என எண்ணுகின்றனர்.

இந்த கருத்துக் கணிப்பை நம்பி அரசாங்கம், முழு அளவிலான போரை மேற்கொள்ளுமாக இருந்தால் அது அவர்களின் பேரழிவுக்கே வழிவகுக்கும்" என்றார் அவர்.

இந்த ஆய்வு நிலையத்தின் கருத்துக்கணிப்பில் சிங்கள மக்கள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் பின்பற்றப்படும் உத்திகளை ஏற்றுக்கொள்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்களின் மூலமான இனப்பிரச்சனைக்கான தீர்வை நிராகரித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

எனினும் இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி கருத்து எதனையும் இதுவரை கூறவில்லை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home