Friday, March 2, 2007

இராஜதந்திரிகளின் உயிராபத்துக்களுக்கு கோத்தபாயவே காரணம்: மங்கள

வெள்ளி 02-03-2007

"கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் தாக்குதல் இடம்பெற்ற பகுதி மிகவும் உயரதிகாரிகள் செல்லக்கூடிய பாதுகாப்பான பகுதியல்ல. எனவே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இராஜதந்திரிகளுக்கு உயிராபத்தை விளைவிக்கக்கூடிய இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்"

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

"அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி விட்டோம் என பாதுகாப்பு அமைச்சரும், செயலாளரும் கூறிக்கொண்டிருக்கும் போது தங்களிடம் நீண்ட தூர ஆட்லறிகள் இருப்பதை விடுதலைப் புலிகள் நிரூபித்திருக்கின்றனர்.

பாதுகாப்பு நிலைமைகள் உறுதியற்ற பிரதேசத்திற்கு எமது நான்கு நட்பு நாடுகளின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றது அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றது. இதன் முழுப் பொறுப்பும் பாதுகாப்பு அமைச்சையே சாரும்.

நாட்டின் தற்போதைய உண்மை நிலை தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இராஜதந்திரிகள் மற்றும் அமைச்சர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலை நாம் கண்டிக்கின்றோம்.

படையினரின் உயிர்த்தியாகங்களின் மத்தியில் இடம்பெற்று வரும் போரானது சிலரின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் படி நடத்தப்படுகின்றது. இது தொடர்பாக நான் ஆழ்ந்த வருத்தமடைகின்றேன். ஊடகங்களின் பரப்புரைகளினால் களத்தின் உண்மை நிலை மறைக்கப்படுகின்றது.

மகிந்தவிற்கு நெருங்கிய நபர் ஒருவர் ஊடகத்துறையின் சுதந்திரத்தில் பல குறுக்கீடுகளை செய்தபடி உள்ளார். அவர்கள் தொடர்பான செய்திகள், நேர்காணல்களை பிரசுரிக்க வேண்டாம் எனவும் தடுத்து வருகின்றார்.

நான் துறைமுகங்கள் சிவில் போக்குவரத்து அமைச்சராக இருந்த சமயத்தில் மகிந்தவின் இந்த நெருங்கிய உறவினர் தமக்கு பிடிக்காத சில பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை கொடுக்க வேண்டாம் எனவும் அதிகாரிகளை மிரட்டியிருக்கின்றார்.

மகிந்தவின் அந்த நெருக்கமானவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே உலகில் ஜனநாயகத்தை ஏற்படுத்த துடிக்கும் அமெரிக்கா, ஜனநாயக அடிப்படைகளில் உள்ள இப்படியான வன்முறைகளை கருத்தில் எடுக்கவேண்டும்.

அந்த நபர் அமெரிக்காவின் கடவுச்சீட்டையும் வைத்திருக்கின்றார். எனவே ஆசியாவிலேயே பழமை வாய்ந்த ஒரு ஜனநாயக நாட்டில் இவரால் மேற்கொள்ளப்படும் ஊடகங்களின் மீதான வன்முறைகள் தொடர்பாக அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும். மேலும் எங்களின் மீது சேறடிப்பதற்காகவே அரச ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சுதந்திரக்கட்சியை ஒரு நடுநிலையான அரசியல் பாதைக்கு கொண்டுவருவதே எனது விருப்பம். அரசுக்கு நான் நிபந்தனைகளை விதிக்கவில்லை அவை வேண்டுகோள்களைத்தான் விடுத்திருக்கின்றேன். சுதந்திரக்கட்சி சர்வாதிகார வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றார் அவர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home