Sunday, March 4, 2007

அமைதிக்கு உதவாத அவலம் விளைவிக்கும் போக்கு.

ஞாயிறு 04-03-2007
யாழ். குடாநாட்டில் இளம் தலைமுறையினர் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இலக்கு வைத்துக் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் பெரும் பீதியையும் அச்சத்தையும் பதற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.
அரசாங்கத்தின் அரச படைகளின்கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ். குடாநாட்டில் மனிதாபிமானமே இல்லாத ஈவிரக்கமற்ற கொடுமைகள் கட்டுமட்டில்லாமல் அரங்கேறிவருகின்றன.

"புலிப் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெற்றிகொள்ளுதல்' என்ற இராணுவப் போக்கிற்கு கொழும்பு அரசு காட்டிய "பச்சைக் கொடி' யின் விளைவுகளை யாழ். குடாநாடு இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றது என்று குடாநாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகிற்கே தெரிந்த உண்மை.

"சமாதானத்துக்கான யுத்தம்' என்ற தமது விநோதக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்க முயன்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அதனடிப் படையில் மிக மோசமான, மிகக் கொடூரமான, சரித்திரத்தில் முன்னெப்போதும் இல்லாத பயங்கரப் போரை தமிழர் தாயகத்தின் மீது தொடுத்தார். பேரழிவுகளையும் பெரு நாசங்களையும் தமிழர் தாயகம் அதனால் எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. ஆனால், ஜனாதிபதி சந்திரிகாவின் சமாதானத்துக்கான போர் அவருக்கோ அவரது சிங்கள தேசத்திற்கோ சமாதானத்தையும் தரவில்லை; அமைதியையும் தரவில்லை; நிம்மதியையும் தரவில்லை; வெற்றியையும் தரவில்லை.

"சமாதானத்திற்கான யுத்தம்' மூலம் சமாதானத்திற்கான வாய்ப்புக்களைத் தொலைத்ததைத் தவிர வேறு நற்பயன் ஏதும் சந்திரிகா அரசுக்குக் கிட்டவில்லை. கிஞ்சித்தும் எதிர்பாராத இராணுவத் தோல்விகளையும் சந்தித்து, சமாதான முயற்சிகளையும் முன்னெடுக்கமுடியாமல் யுத்தத்தையும் தீவிரப்படுத்தமுடியாமல் "இருதலைக் கொள்ளி எறும்பு' போன்ற நெருக்கடி நிலைக்குள் சிக்கியிருந்தது அவரது அரசு.

எடுத்த எடுப்பில் அவரது "சமாதானத்துக்கான யுத்தம்' தந்த சில வெற்றிகள் திருப்திகள், அந்தச் சகதிக்குள் நிரந்தரமாகவே அவரது அரசை மூழ்கவைத்து அமைதிவழிப் பாதைக்கு மீளமுடியாத நிலைக்குத் தள்ளிற்று.

அதேபோன்ற ஓர் கோட்பாட்டையே கருத்தியல் சிந்தனையையே தமிழர் தாயகத்தில் இப்போது கட்டவிழ்த்துவிட்டு நடைமுறைப்படுத்த எத்தனிக்கிறது மஹிந்தரின் அரசு.

இராணுவச் சிந்தனைப் போக்காளர்களின் கருத்தாக்கத்தில் சிக்கிய சந்திரிகா அரசு எவ்வாறு இராணுவ முனைப்புப் போக்கின்மூலம் சமாதானத்தை எட்டலாம் என்று கனவுகண்டதோ அதேபோன்று "ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் என்ற பயங்கரவாதத்தை பதில் பயங்கரவாதத்தால் வெற்றி கொள்ளலாம்' என்ற இராணுவப் போக்காளர்களின் மாயைச் சிந்தனை வலையில் சிக்கி நிற்கிறது மஹிந்தரின் இந்த அரசு.

சந்திரிகாவின் "சமாதானத்துக்கான யுத்தத்தின்' ஆரம்பத்தில் சந்திரிகா அரசுக்கு சில இராணுவ வெற்றிகளும், திருப்திகளும் கிட்டியமை போல, இப்போது மஹிந்தரின் அரசின் "பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெல்லுதல்' என்ற கோட்பாட்டிலும் ஆரம்ப வெற்றிகள் சில மஹிந்தரின் அரசுக்குக் கிட்டாமல் இல்லை.

ஆனால், அது நிரந்தரப் பலன்தருமா என்பதே கேள்வி. இந்த மோசமான கொடூரமான படு பயங்கரமான அழிவுச் சித்தாந்தத்தின் விளைவும், பெறுபேறும் எப்படி அமையும் என்பது குறித்து உருப்படியான சிந்தனைத் தெளிவோ, தெளிவான தீர்க்கதரிசனமோ இல்லாமல் அது முன்னெடுக்கப்படுவதால், விதைத்தவற்றையே வினையாகவும், விளைவாகவும் அறுக்கவேண்டி நேரலாம். முந்திய பாடத்திலிருந்து உணரலாம்.

ஈழத்தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டம் அதன் ஆரம்ப காலகட்டத்தில் சுமார் இரண்டரை தசாப்தகாலம் காந்திய வழியில், அஹிம்சைப் பாதையில், சாத்வீக முறையில் நெறிப்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டது.

காந்திய நெறியின் உயரிய விழுமியங்களைப் புரிந்துகொள்ளாத பேரினவாதம், அதனை அரச பயங்கரவாதம் மூலம் பலாத்காரம் மூலம் அடக்கி ஒடுக்க முயன்றது. அத்தகைய கொடூரப் போக்கின் விளைவாகவே தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதம் தாங்கிய எதிர்ப்புப் போராட்டமாக வடிவெடுத்தது.

இந்தத் தாற்பரியத்தை காரண, காரியத்தை புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள விரும்பாத தென்னிலங்கை மீண்டும் மீண்டும் அதே வழியில் தவறிழைக்க முனைப்புடன் முயல்கிறது.

சட்டரீதியான அரசாக உலகின்முன் தன்னைக் காட்டிக்கொள்ளும் பிரகடனப்படுத்திக்கொள்ளும் கொழும்பு அரசு, தமிழர் தாயகத்தில் சட்டமுறையற்ற செயல்வடிவம் கொண்ட ஒரு போரியல் வடிவத்தை ஏவிவிட்டிருக்கின்றது.

மரணங்களும், படுகொலைகளும், கோர வன்முறைகளும் இனந்தெரியாத தரப்புகளினால் புரியப்படுகின்றன எனக் கூறப்படுவதற்கு அந்த வன்முறைகள், கொலைகள் போன்றவை தொடர்பாக உரிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக இருக்கலாம். மனித உரிமை அமைப்புகளையும், சர்வதேச சமூகத்தையும், நீதியின் பாற்பட்ட செயற்பாடுகளையும், நீதிமன்றங்களையும் ஏமாளியாக்க இவ்வாறு சாட்சியங்களற்ற வகையில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அராஜகம் பயங்கரவாதம் உதவலாம்.

ஆனால், மக்களின் மனதை வெல்ல அவை உதவமாட்டா. அதற்கு மாறாக இத்தகைய வன்முறைக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழவைக்கும் பற்றுறுதியையும், உணர்வெழுச்சியையுமே அவை மக்களுக்குத் தரும். அதனால், வினை விதைத்தவர்களுக்கு எதிராகவே விளைவு மோசமாகக் கிளம்பும் என்பது யதார்த்தம். உலக சரித்திரம் தந்த பாடமும் அதுவே.

தமிழர் தாயகத்தை வன்முறைப் புயலில் சிக்க வைப்பதன் மூலம் அமைதி பிறக்காது. இலங்கைத் தீவு முழுவதும் பரவவே அது வழிசெய்யும். இதுவே மெய்யுண்மை நிலையாகும்.

Uthayan

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home