Saturday, March 3, 2007

சடுதியான மாற்றங்கள் நிகழப்போகின்றன - நாம் எமது தேசத்தினை பிரகடனப்படுத்தும்போது அதனை அங்கீகரியுங்கள்.

சனி 03-03-2007
தமிழ் நாட்டு மக்கள் எமக்கு உதவும் வழிகள் இவைதான்.
1. அங்கேயுள்ள எமது மனிதர்களை மதியுங்கள். மனிதர்களாய்.
2. ஈழத்தமிழர்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவுகளை இந்திய அரசு
எடுக்காமல் முடிந்தவரை தடுத்து நிறுத்த முயலுங்கள்.
3. நாம் எமது தேசத்தினை பிரகடனப்படுத்தும்போது அதனை அங்கீகரியுங்கள். இந்திய அரசின், உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெற்றுத்தருவதற்கான அழுத்தங்களை மக்கள் கூட்டமாக வழங்குங்கள்.

வரலாற்றின் ஓட்டத்தின் குறித்த காட்சியின் சாட்சிகளாய் நிற்கிறோம். அவரவர் அரசியல் கடமைகளை உணர்ந்தாகவேண்டும்.


அறிவுமதியின் வலி

"இந்தியாவின் அரசியல் நிலைப்பாடுகளில் தமிழ்நாடு பெரிதாக எந்தத் தாக்கத்தினையும் சாதித்துவிட முடியாது. ஆனால் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடிய எந்த முடிவையும் இந்தியாவால் எடுக்க முடியாது"

இது தற்போது விடுதலைப்புலிகளின் தலைமையில் நிகழும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுக்கட்டத்தில் பலரும் பேசும் ஒரு பிரபல சமன்பாடு.

ஆரம்பத்திலிருந்தே மக்களின் அடிப்படைத்தேவைகளை, முரண்பாடுகளை, உரிமைப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மக்கள் நிலைப்போராட்டமாகவன்றி, சூழ்ச்சிகளாலும் சதிவேலைகளாலும் திரைமறைவு அரசியலாலும் அவற்றையெல்லாம் மறைத்து, சோடித்துக்குக்கட்டும் உணர்வெழுகைக் கதையாடல்களாலும் கட்டமைக்கப்பட்டது தமிழீழ விடுதலைப்போராட்டம்.

இன்றும் அது அப்படித்தான்.

இறுதி இலக்காக "தமிழீழம்" என்பதை வைத்துக்கொண்டு அந்த ஒன்றை மட்டுமே இலக்காகக்கொண்டு கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் அந்த இலக்கை நோக்கிய பயணத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நகர்கிறது இந்தப்போராட்டம். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் நிகழ்ந்த அநியாய இழப்புக்களையும் ஊதாரித்தனமான உயிர், பொருள், இராஜதந்திர செலவுகளையும் இலக்கை அடைதல் ஒன்றே நியாயப்படுத்திவிடும் என நம்பிக்கொண்டு இந்தப்போராட்டம் பயணப்படுகிறது.

இந்த முறைவழியை ஏற்றுக்கொள்ளுகிறோமோ அன்றி எதிர்க்கிறோமோ என்பதல்ல இங்கே பிரச்சினை.

இந்த உயிர்ப்பான யதார்த்தத்தின் முப்பரிமாணத்தோற்றத்தினை புரிந்துகொண்டு அங்கே நாம் வகிக்கவேண்டிய அரசியல் வகிபாகத்தினை உணர்ந்து செயற்படுகிறோமா என்பதில் தான் கவனமாக இருக்கவேண்டும் என தனிப்பட நம்புகிறேன்.

இந்த பின்னணியில் தமிழ்நாட்டுடனான எமது அரசியல் தொடர்பாடல் மிக முக்கியமானது.

தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் எந்த அரசியல் முடிவையும் இந்தியா எடுக்காது என திடமாக நம்புகிற அரசியல் ஆய்வாளர்களைக்கொண்ட எமது தரப்பு அந்தத் தமிழ்நாட்டை ஆழ்ந்த அதிர்சிக்குள்ளாக்கும் முடிவை ஒருகாலத்தில் எடுத்தது. அதன் விளைவாக பாரியளவான விலையையும் கொடுத்தது.

அந்த கவலையின் அடிப்படையில்தான் "இந்த சர்வதேச சமூகம் என்றால் யார் மச்சான்" என்ற என் முந்தைய வலைப்பதிவில் உலகம்பூராக போட்டோ காட்டுவதிலும் பார்க்க தமிழ்நாட்டில் ஒரு போஸ்டர் ஒட்டுவது மிகுந்த பயன்ளிக்கும் என்ற என் கருத்தை பகிர்ந்துகொண்டிருந்தேன்.

தற்போது தமிழ்நாட்டில் ஒருவித அரசியல் அக்கறை அலை எழுவதுபோன்ற தோற்றம் ஏற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

விடுதலைப்புலிகள் பற்றி முடிந்தவரை பேசாமல் தவிர்த்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை பேசுபொருளாக்கிக்கொள்வது இந்த அக்கறை அலையின் இன்றைய செல்நெறி.

உணர்வை எழுப்பும் கதையாடல்களைத்தாண்டி, ஈழத்தமிழ் மக்கள் பற்றிய உண்மையான அக்கறை எவ்வளவு தூரம் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது என்கிற கேள்வியை அறிவுமதியின் "வலி" என்கிற சிறு நூல் எழுப்ப முயன்றிருக்கிறது.

---

இந்தியா நோக்கி உயிரைப்பணயம் வைத்து ஓடும் ஈழத்தமிழ் மனிதர்களுக்கு பல்வேறு நோக்கங்கள் உண்டு.

வெளிநாட்டுக்காசு கிடைக்க வழியற்ற அடிமட்ட மனிதர்களே பெரும்பாலும் இந்த முடிவை எடுக்கிறார்கள்.

அவர்களது தேவை ஒரு வேலைவாய்ப்பாகவும் கூட இருக்கலாம்.

---

தமிழ்நாட்டின் தமிழ் மனிதர்கள் தம் கண்முன்னால் காணக்கூடிய ரத்தமும் சதையுமான ஈழத்தமிழ் மக்கள் இந்த அகதிகள் தான்.

தமிழ் நாட்டு அரசினதும் மக்களினது உணர்வு பூர்வமான தமிழீழ ஆதரவின் உரைகல்லும் இந்த மக்கள் தான்.

---

அறிவுமதியின் "வலி" எழுப்பும் கேள்விக்கு முன்னால் தமிழின உணர்வு, தேசிய உணர்வு எல்லாம் வடிந்து இன்னுமொரு சர்வதேசப்பொதுவான அரசியல் எஞ்சுகிறது.

மலையகத்திலிருந்து அடிபட்டு வன்னியில் குடியேறிய மனிதர்களுக்கு "தோட்டக்காட்டான்' வசை.
தொண்ணூறுகளில் திருக்கோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்தை தாய்மண்ணாய் நினைத்து ஓடிய என் அயலவர்கள் தண்ணீரைத்தொட அனுமதிக்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு துரோகிகளே விளிப்பு.

இந்த அரசியலின் தொடர்ச்சி ஈழ மனிதர்கள் பற்றிய தமிழ்நாட்டின் நடத்தையில் வெளிப்படுகிறது.

---

பிறந்த வீட்டில்
கறுப்பி

அண்டை நாட்டில்
சிலோன் அகதிப்பொண்ணு

இலங்கை மத்தியில்
"தெமள"

வடக்கில்
கிழக்கச்சி

மீன்பாடும் கிழக்கில்
நானோர் மலைக்காரி

மலையில்
மூதூர்க் காரியாக்கும்

ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா!
பழையபடி நான் கறுப்பியானேன்


-ஆழியாள்
(துவிதம்)

---

அறிவுமதியின் வலி தொகுப்பில் பொறுக்கியெடுத்த வரிகள் சில,

---

வயசுக்கு வந்த மகள்
தூங்குகிறாள்

இல்லறம்

எங்களைப்
பொறுத்தவரை
இயலாத அறம்

---

அங்கே
அவனா என்று கேட்டு
அடித்தார்கள்
வலிக்கவில்லை

இங்கே
திருடனா என்று கேட்டு
அடிக்கிறார்கள்

வலிக்கிறது.

---

அங்கே
சிங்களத்தில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டினார்கள்
புரிந்தது.

இங்கே
தமிழில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டுகிறார்கள்
புரியவில்லை


---

பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்
போகிறீர்கள்

உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்

---

தமிழில்தான்
விசாரித்தார்கள்

தமிழர்களாய்
இல்லை

---

மன்னாருக்கும்
மண்டபத்துக்கும்
இடையே
இருப்பது
வளைகுடா இல்லை

தமிழர்
சதுக்கம்

---

அங்கே
கேட்டுக் கேள்வி இல்லாமல்
கொன்றார்கள்

இங்கே
கேள்வி கேட்டுக்
கொல்கிறார்கள்

---

படகில்
ஏறினோம்

படகுகளை
விற்று


---

தவறியவர்கள்
மீன்களுக்கு
இரையேனோம்

தப்பித்தவர்கள்
ஏன்களுக்கு
இரையானோம்

---

எங்களால்
இறங்கி
வந்து
கரையேற முடிகிறது

உங்களால்
இரங்கி
வந்து
உரையாட
முடியவில்லை


---

நாட்கணக்காக அரசியல் வகுப்பெடுத்தாலும் புரியாத விடயங்களை கவித்துவமான ஒரு சில வரிகள் புரியவைத்துவிடும்.
அப்படி "புரிய வைக்கக்கூடிய" வரிகள் இந்த தொகுப்பில் இருக்கின்றன.

ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்சினைகளை தமிழ் நாட்டு மக்களுக்கு கவனப்படுத்தும் முயற்சிகள் வளர்த்தெடுக்கப்படவேண்டியன.
ஈழத்தின் அடிமட்டங்களிலிருந்து வரும் மனிதர்கள் அவர்கள்.

அவர்கள் எண்ணிக்கைகளோ சன் ட்டீ வீ யின் செய்திகளோ அல்லர்.

---

நந்தா என்றொரு படம் இவை பற்றி பேசியது.
பாட்டுக்களோடும், பகட்டாகவும்.

அந்த பாட்டுக்களும் பகட்டுமே கடைசியில் எஞ்சியது.

கன்னத்தில் முத்தமிட்டால் சுயநலத்தோடு இந்த பிரச்சினைகளை திரிபுபடுத்தியது.

அறிவுமதி,

இந்த பிரச்சினையை அழகான புட்டி ஒன்றில் அடைத்து உயர்தர மாளிகைகளுக்கு விருந்துகொடுத்துவிட்டார்.

வலி தொகுப்பின் விலை எழுபது இந்திய ரூபாய்கள்.

இந்த வழவழ தாள்களும், அழகான வண்ணப்பட அட்டைகளும் அல்ல இந்த உணர்வூட்டும் வரிகளை காவிச்செல்லவேண்டியவை.

அந்த அகதி மனிதர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், அந்த மனிதர்களோடு உறவாடும் ஆட்களிடம் இது கொண்டு சேர்க்கப்படவேண்டும்.
அந்த வகையில் இந்த புத்தகம் தோற்றுப்போய்விட்டது.

சிறு பிரசுரமாக அறிவுமதி இதனை அச்சிட்டு சேர்க்கப்பட வேண்டியவர்களிடம் கொண்டு சென்று சேர்திருப்பாரானால் அவரது மனிதாபிமானமும், உணர்வுகளும் மதிக்கப்படக்கூடியனவாயிருந்திருக்கும்.

ஈழத்தமிழர் பிரச்சினைகளை அழகான காட்சிப்பொருளாக்கி, கவிதைச்சரக்காக்கி தன் கவிதைகளை தானே கொலை செய்ததுதான் மிச்சம்.

---

சடுதியான மாற்றங்கள் நிகழப்போகின்றன .

தமிழ் நாட்டு மக்கள் எமக்கு உதவும் வழிகள் இவைதான்.

1. அங்கேயுள்ள எமது மனிதர்களை மதியுங்கள். மனிதர்களாய்.

2. ஈழத்தமிழர்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவுகளை இந்திய அரசு எடுக்காமல் முடிந்தவரை தடுத்து நிறுத்த முயலுங்கள்.

3. நாம் எமது தேசத்தினை பிரகடனப்படுத்தும்போது அதனை அங்கீகரியுங்கள். இந்திய அரசின், உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெற்றுத்தருவதற்கான அழுத்தங்களை மக்கள் கூட்டமாக வழங்குங்கள்.


வரலாற்றின் ஓட்டத்தின் குறித்த காட்சியின் சாட்சிகளாய் நிற்கிறோம். அவரவர் அரசியல் கடமைகளை உணர்ந்தாகவேண்டும்.

-Mauran

2 Comments:

At March 4, 2007 at 5:03:00 PM GMT+1 , Blogger திருக்குமரன் said...

என்ன செய்வது???பெயரில் மட்டும் தானெ தமிழ் இருக்கிறது...

 
At March 4, 2007 at 8:00:00 PM GMT+1 , Blogger R. கரன் said...

திருக்குமரன்: அவரவர் கடமைகளை உணர்ந்தாகவேண்டும்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home