Monday, February 26, 2007

கருணாநிதி எடுத்துள்ள நிலைப்பாடு!

ஞாயிறு 25-02-2007

அஜாதசத்ரு-

உலகத் தமிழர்களின் தலைவரென்று தனக்குத் தானே புகழாரம் சூடிக்கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது நீண்டகால அரசியல் பக்குவம் தமிழின உணர்வு என்ற பாதையிலிருந்து விடுபட்டு குடும்ப அரசியல், சொத்து சேகரித்தல் என்ற பக்குவமற்ற அரசியல் போக்கொன்றுக்குள் தள்ளப்பட்ட ஒருவராகவே தனது அந்திமகால அரசியலை நடத்திக்கொண்டிருப்பதையே அவரது அண்மைய கால நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றன.

தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் அறிவுபூர்வமான திராவிடக் கொள்கைகள், அறிஞர் அண்ணாவின் அரசியல் வழிநடத்தல்கள் என்பவற்றிலிருந்து விடுபட்டு சத்ய சாயிபாபாவின் கால்களைத் தடவும் ஒரு சராசரி மூன்றாந்தர இந்திய அரசியல்வாதியாக கலைஞர் கருணாநிதி மாற்றம் பெற்றுள்ளமையால் இந்தியாவிலுள்ள தமிழர்களுக்கு மாத்திரமன்றி உலகத் தமிழர்களுக்கும் அவரது அரசியல் நடத்தைகள் உதவப்போவதில்லையென்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் நலன்கள் தொடர்பில் எப்போதும் வெளிப்படையாகவே நேர்மாறான போக்கொன்றை கடைப்பிடித்து வந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு கலைஞர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றிய வேளையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்த ஈழத் தமிழர்கள் இன்று அவரது கடும் போக்கான நிலைப்பாடுகளால் நம்பிக்கையிழந்து கொண்டிருக்கின்றனர்.

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பெரும்பான்மை வாக்குப்பலங்களால் வெற்றிபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவினர் தமிழகத்திற்கு விஜயம் செய்து ஆட்சிபீட மேறிய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ஆரம்பத்தில் சந்திப்பதற்கு பல்வேறு தரப்பினர் ஊடாகவும் மேற்கொண்ட முயற்சிகளை தட்டிக்கழித்தமையை எவரும் இலகுவில் மறந்துவிடமுடியாது.

எனினும், பின்னைய காலங்களில் பல்வேறு அரசியல் அழுத்தங்களின் காரணமாகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தோன்றிய அரசியல் ரீதியான ஆதரவு காரணமாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவினரை இரு தடவைகள் சந்தித்துக் கலந்துரையாடிய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் போக்க மத்திய அரசு ஊடாக தன்னாலியன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக அறிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட மத்திய அரசின் உயரதிகாரிகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவினரை ஆரம்பத்தில் சந்திப்பதற்கான அனைத்து முட்டுக்கட்டைகளையும் விதித்ததாக தமிழக அரசியல்வாதிகளால் குற்றஞ்சாட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி பின்னர் இந்திய மத்திய அரசுத் தலைவர்களையும் சந்தித்து ஈழத் தமிழர்களின் அவல நிலை தொடர்பாக உண்மை நிலைவரங்களை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்திருந்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட இந்திய உயரதிகாரிகளை சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்த வேளையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் விசேட பிரதிநிதியாக சுப. வீரபாண்டியனும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், அண்மைய காலங்களில் தமிழகத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகள் காரணமாக தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கடும்போக்கான நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் ஈழத்தமிழ் மக்கள் முன்னொரு போதுமல்லாதளவிற்குப் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாகவே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தவாரம் இராமேஸ்வரம் கடற்பிராந்தியத்தில் வைத்து இலங்கைக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் உட்பட பல பொருட்களை கடத்திச்சென்ற இரு படகுகளும் 10 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதையடுத்து தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கெடுபிடிகளும் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படை, எல்லைக்காவல்படை, தமிழக பொலிஸார், கியூபிராஞ்ச் புலனாய்வுத்துறையினர் இராமேஸ்வரம் கடலோரப் பிரதேசங்களில் மாத்திரமன்றி ஈழத்தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தேடுதல்களையும் கண்காணிப்பையும் துரிதப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக தமிழக அரசினால் முடுக்கிவிடப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்புக் கெடுபிடி நடவடிக்கைகள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராமேஸ்வரம் மண்டபத்திலுள்ள பிரதான முகாம் தவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுமுள்ள 133 அகதி முகாம்களிலும் ஏனைய பிரதேசங்களிலுமென சுமார் ஒன்றரை இலட்சம் இலங்கைத் தமிழர்கள் மிக நீண்டகாலமாக வசித்து வருகின்றனர்.

இவற்றில் செங்கல்பட்டிலுள்ள முகாம் விடுதலைப்புலி சந்தேக நபர்கள் மற்றும் ஆயுத வியாபாரங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சிறைக்கூடம் போன்றதாகும்.

ஈழத்தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் ஏற்கனவே பொலிஸ் கண்காணிப்பு உள்ள நிலையம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக அங்குள்ள ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்று கருதப்படுபவர்கள் கியூபிராஞ்ச் பொலிஸாரினால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அறியவருகிறது

இதனைவிட தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட ஏனைய மாவட்டங்களில் அகதி முகாம்களுக்கு வெளியே வசிக்கும் ஈழத்தமிழர்களின் விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதுடன் பொலிஸ் கண்காணிப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலைமைக்கு மத்தியில் தான் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அண்மையில் கூட்டிய தனது அமைச்சரவைக் கூட்டத்தின் போது இராமேஸ்வரம் கடற்பகுதியில் இடம்பெற்ற ஆயுதக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கூடி ஆராய்ந்துள்ளதுடன் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆதரவான கருத்துகளை எவரும் வெளியிடக்கூடாதென்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்னெடுப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவது தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

இதெல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் தேசிய நலன்களை புறக்கணித்துவிட்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு தலையிடுமென்று எவரும் கனவுகாண வேண்டாமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்தவொரு மன்னிப்புமின்றி தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமென்றும் இது தொடர்பான உத்தரவு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறையுடன் செயற்பட்டு அதற்காக தமிழகத்திலும் இந்திய மத்திய அரசிலும் குரல் கொடுத்துவரும் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு எதிராகவே தமிழக முதல்வர் கருணாநிதியின் இந்தக் கூற்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அண்மைய காலங்களில் உதாசீனப் போக்கொன்றை கடைப்பிடித்துவரும் இந்திய மத்திய அரசின் அதே நிலைப்பாட்டை உலகத்தமிழர்களின் தலைவர் என்று மார்தட்டிக்கொள்ளும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் கடைப்பிடிப்பது கவலைதரும் போக்கொன்றையே வெளிக்காட்டி நிற்கிறது.

அவலங்களுக்கும் மத்தியில் அடைக்கலம் தேடி வந்திருக்கும் தனது இனத்தையே வஞ்சிக்க முனையும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது கடும் போக்குகளுக்கு என்ன நியாயம் சொல்லப்போகிறார்?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home