Sunday, February 25, 2007

ஏப்ரல் 13-க்குள் அதிகாரப் பகிர்வு திட்டப் பரிந்துரை.

ஞாயிறு 25-02-2007

வடக்கு - கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரப் பரிவுத் திட்டம் ஒன்றை ஏப்ரல் 13 ஆம் திகதிக்குள் சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கும் என அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜப்பான் சென்றிருந்த பசில் ராஜபக்ச, வெளியுறவு அமைச்சரிடமும் ஜப்பானின் சிறப்புத் தூதுவரிடமும் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் மார்ச் கடைசிக்குள் அதிகாரப் பகிர்வுத் திட்ட அறிக்கை தயாராகிவிடும் என வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இணைத் தலைமை நாடுகளிடம் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை நிலவரம் குறித்து கடந்த வாரம் இணைத்தலைமை நாடுகள் தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளன. நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் அகாசி, அமெரிக்காவின் வெளிவிவகார துணை அமைச்சசர் ரிச்சர்ட் பௌச்சர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்குவது பற்றிய எவ்வித செயற்பாடும் இல்லாத நிலையில் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாகி உள்ளதாக இவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.

எனினும் தமிழர்களது ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் விடுதலைப் புலிகளுடன் பேசத் தயாராக இருப்பதாக அண்மையில் காலியின் நடைபெற்ற அபிவிருத்தி கருத்தரங்கில் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இரு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சிக்கு சென்ற நோர்வேயின் ஹான்ஸ் பிறட்ஸ்கர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் பேச்சு நடத்தியவுடன் தற்போதைய நிலைமை குறித்து வருத்தமும் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home