Saturday, February 24, 2007

மருத்துவ பீடங்களுக்கான மாணவர் உள்வாங்கலில் யாழ். மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

சனி 24-02-2007
-பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
2006/07 ஆம் கல்வியாண்டுக்காக இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் யாழ். மாவட்ட மருத்துவத்துறை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தேசிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு 900 ஆக இருந்த மருத்துவத்துறைக்கான உள்வாங்கல் இம்முறை 1/3 பங்கு அதிகரித்து, 1208 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி மருத்துவத்துறையில் இம்முறை 300 மாணவர்கள் மேலதிகமாக உள்வாங்கப்படுகின்றனர்.

எனினும், இந்த அதிகரிப்பில் ஒரு இடம்கூட யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவத்துறையில் 15 இற்கு மேற்பட்ட இடங்களை யாழ்ப்பாணம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் 40 வீதம் திறமை அடிப்படையிலும், 60 வீதம் மாவட்ட கோட்டா அடிப்படையிலும் மருத்துவத்துறைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் இம்முறை, முதல் 480 நிலைகளுக்குள் வந்த மாணவர்கள் திறமை அடிப்படையில் மருத்துவத்துறைக்கு உள்வாங்கப்படுவர். இதன்படி யாழ். மாவட்டத்தில் 24 ஆவது நிலையிலுள்ள மாணவன் பெற்ற தேசிய நிலை 473 ஆகும்.

இதேவேளை, மாவட்ட கோட்டா அடிப்படையில் இவ்வளவு காலமும் 540 மாணவர்கள் தெரிவு செய்யப்படும் போது யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த இடங்கள் 30 ஆகும்.

ஆனால், இம்முறை 720 மாணவர்கள் தெரிவு செய்யப்படும் போது யாழ்ப்பாணத்துக்கு கிடைக்க வேண்டியது 40 இடங்களாகும். ஆனால், கிடைத்ததோ வழமைபோல் 30 இடங்களேயாகும்.

ஆகவே, யாழ்ப்பாணத்துக்கு கிடைக்க வேண்டிய ஆகக்குறைந்த மருத்துவத்துறைக்கான இடங்கள் திறமையடிப்படையில் 24, மாவட்ட கோட்டா அடிப்படையில் 40 என மொத்தம் 64 ஆக இருக்க வேண்டும். ஆனால், கிடைத்திருப்பதோ திறமையடிப்படையில் 19 உம், கோட்டா அடிப்படையில் 30 உம் என 49 இடங்கள் மட்டுமே.

எனவே கிடைக்காமல் செய்யப்பட்டுள்ள மேலும் 15 இடங்களையும் பெறுவதற்கு பல்கலைக்கழக சமூகத்தினர், கல்விமான்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home