Friday, February 23, 2007

காணாமல் போன வண பிதா பற்றிய விசாரணை ஆரம்பம்.

வெள்ளி 23-02-2007

ஆறு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன கத்தோலிக்க மத குருவான வண பிதா ஜிம் பிறவுண் தொடர்பான விசாரணைகளை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை ஆணைக்குழு, மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருந்த தருணத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் 34 வயதான வண பிதா ஜிம் பிறவுண் யாழ்ப்பாணத்தில் தன்னுடைய உதவியாளருடன் பயணம் செய்துகொாண்டிருந்த போது காணாமல் போனார்.

படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள அல்லைப்பிட்டிப் பகுதியிலுள்ள இராணுவ சோதனைச் சாவடி ஒன்றின் முன்பாகவே இவர் தனது உதவியாளரான விமலதாசுடன் இறுதியாகக் காணப்பட்டார்.

வண பிதாவுக்கும், அவரது உதவியாளருக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் முகமான விசாரணைகளை நடத்துமாறு கத்தோலிக்க அமைப்புக்களும், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நிறுவனங்களும் அரசாங்கத்தைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளன.

சிறிலங்காவிலுள்ள பாப்பரசரின் தூதுவர் வண மரியோ செனாரி ஆரம்பம் முதலே இந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்தி வந்ததுடன், காணாமல் போன இருவரது குடும்பத்தினருடைய இல்லங்களுக்கும் நேரில் சென்றிருந்ததுடன், இந்த சோகமான செய்தியை பாப்பரசருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தகவல் தந்த மரியோ செனாரி, "அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் விவசார அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் இவ்விடயம் தொடர்பாக நான் தொடர்புகொண்டு பேசினேன். வண பிதா ஜிம் பிறவுண் காணாமல் போன விவகாரம் உட்பட முக்கியமான சில விவகாரங்கள் தொடர்பாக அரச தலைவரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆணைக்குழு விசாரணைகளை நடத்தும்" என அவர் எனக்கு உறுதியளித்தார்.

"என்னுடன் தொடர்புகொண்டுள்ள அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக நல்லெண்ணத்துடனும், தனிப்பட்ட அக்கறையுடனும் இருப்பதை என்னால் காணக்கூடியதாகவிருக்கின்றது. அடுத்துவரும் வாரங்களில் அல்லது மாதத்தில் உண்மை என்ன என்பதை எம்மால் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என நாம் நம்புவோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

ஆட்கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்காக அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச விசாரணைக்குழு ஒன்றை நியமித்தார். சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த ஆணைக்குழு தன்னுடைய விசாரணைகளை ஆரம்பித்தது.

2005 ஓகஸ்ட்டில் இடம்பெற்ற முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் படுகொலை, 2006 ஓகஸ்ட்டில் 'பட்டினிக்கு எதிரான அமைப்பு' என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை, கிழக்கு மாகாணத்தில் மூதூரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்பாகவே இவ் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தவிருக்கின்றது. இவ்விசாரணைகளை அனைத்துலக கண்காணிப்பார்கள் மேற்பார்வையிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ். மாவட்ட ஆயர் வண பிதா தோமஸ் செளந்தரநாயகம் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், "வண பிதா ஜிம் பிறவுணின் விவகாரம் இந்த விசாரணைக் குழுவின் பட்டியலில் ஆறாவதாகவே இடம்பெற்றிருக்கின்றது" எனத் தெரிவித்தார். இது தொடர்பாக காவல்துறை சி.ஐ.டி.யினரும் விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்த அவர், ஆனால், விசாரணைகளின் முன்னேற்றம் மிகவும் மெதுவானதாகவே காணப்பட்டது" எனவும் சுட்டிக்காட்டினார்.

2006 ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அறுநூறுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயிருப்பதாக குடாநாட்டிலுள்ள பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்கள்தான் இதற்குக் காரணமாக இருந்துள்ளன என்ற சந்தேகத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home